Tuesday 26 December 2017

(74)காற்றில் யாரோ நடக்கிறார்கள் - எஸ்.ராமகிருஷ்ணன்

இலக்கியம், கலை, திரைப்படம், அனுபவம், பொது என்ற வகைகளில் மொத்தமாக‌ 50 கட்டுரைகளின் தொகுப்பு. இலக்கிய வாசிப்புக்கு புதிதாக நுழைபவர்களுக்கு எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன் போன்ற எழுத்தாளர்களின் கட்டுரைகள் சிறந்த வழிகாட்டியாக அமையும். அந்த  வகையில் எஸ்.ராமகிருஷ்ணனின் இந்த புத்தகத்தினூடாக பல முக்கிய புத்தகங்களின் அறிமுகம் கிடைக்கிறது. 
வங்காள எழுத்தாளர் போதி சத்வ மைத்ரேய 1980 இல் எழுதிய Jhinuker Peter Mukto என்ற நாவலைப் பற்றியதே முதலாவது கட்டுரையான சிப்பியின் வயிற்றில் முத்து. இந்த நாவலை எஸ். கிருஷ்ணமூர்த்தி தமிழில் மொழிபெயர்த்துள்ளார். இந்த நாவல் தமிழ் நாட்டை கதைக்களமாக கொண்டது.
தொடர்ந்து வரும் கட்டுரைகளில் மௌனி, அழகிரிசாமி பற்றியும் எரியும் பனிக்காடு, இடைவெளி ஆகிய நாவல்களைப் பற்றியும் எழுதியுள்ளார். இதிகாசங்களை வாசிப்பது எப்படி என்ற கட்டுரை மிக முக்கியமானது. 'சித்திரப் புலி' என்ற comics புத்தகங்கள் பற்றிய கட்டுரையில் தனக்கு மிகவும் பிடித்த comic book ஆன Calvin and hobbes பற்றி எழுதியுள்ளார்.
இந்த புத்தகத்தில் உள்ள அத்தனை கட்டுரைகளுமே முக்கியமானவை.

Sunday 24 December 2017

(73) புதையல் புத்தகம் - சா.கந்தசாமி

புதையல் புத்தகத்தில் 47 புத்தகங்களை எழுத்தாளர் சா.கந்தசாமி அறிமுகம் செய்துள்ளார். ஆனந்த ரங்கப்பிள்ளை நாட்குறிப்பு, சங்க இலக்கியத்தில் தாவரங்கள், நடந்தாய் வாழி காவேரி என பெரும்பாலான புத்தகங்கள் ஏற்கனவே அறிந்தவை தான். இருந்த போதும் சில புத்தகங்களைப் பற்றிய எழுத்தாளரின் குறிப்புகளை வாசிக்கும் போது அப்புத்தகங்களை வாசிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்படுகிறது. எஸ்.ராமகிருஸ்ணன், ஜெயமோகன் , க.நா.சு போன்றவர்கள் புதிய வாசகர்களுக்காக முக்கிய புத்தகங்களை அறிமுகம் செய்து எழுதிய புத்தகங்களை வாசித்து இருக்கிறேன். அக்கட்டுரைகளில் உள்ள ஆழமும் விரிவும் இக்கட்டுரைகளில் இல்லை. இருந்த போதும் புத்தகங்களை வாசிப்பதற்கு தேர்ந்தெடுப்பதில் புதையல் புத்தகம் ஒரு வழிகாட்டியாக அமையும்.

(72) உலகப் புகழ் பெற்ற மூக்கு - பஷீர்

பஷீர் மலையாள இலக்கியத்தின் முக்கிய எழுத்தாளர். இவரது நாவல்கள் மட்டுமே இதுவரை வாசித்து இருக்கிறேன். உலகப் புகழ் பெற்ற மூக்கு இவரது தேர்ந்த சிறுகதைகளின் தொகுப்பு. அனைத்துக் கதைகளுமே சிறப்பானவை. துயர சம்பவங்களைக்கூட மெல்லிய புன்னகையுடன் வாசிக்க வைக்கும் எழுத்து பஷீருடையது.