Thursday 29 December 2016

(65) இவை என் உரைகள் - சுந்தர ராமசாமி

எழுத்தாளர் சுந்தர ராமசாமியின் உரைகளின் தொகுப்பு. கல்லூரிகளில், இலக்கியக் கூட்டங்களில் பேசியவை. நின்று நிதானமாக வாசித்தால் மட்டுமே உள்வாங்கிக் கொள்ள முடியும். நாவல்கள், சிறுகதைகள், எழுத்தாளர்கள் பற்றிய அவரது விமர்சனங்களை அறிந்து கொள்ள முடிகிறது. 20 வருடங்களுக்கு முன்பான உரையில்   நம்பிக்கைக்குரிய எழுத்தாளர்களாக ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் ஆகியோரைக் குறிப்பிட்டு இருக்கிறார்(தொண்ணூறுகளில் தமிழ் இலக்கியம்). 

(64) நதியின் கரையில் - பாவண்ணன்

பாவண்ணன் கதைகளில் அன்பு மட்டுமே அடி நாதமாக இருக்கும். பாவண்ணன் என்றதும் ஜோக் அருவியும் துங்கபத்திரையும் யட்ச கானமும்  தான் எப்போதும் எனக்கு ஞாபகம் வரும். ' நதியின் கரையில்' 17 கதைகளைக் கொண்ட தொகுப்பு. பாவண்ணன் , வண்ணதாசன் கதைகளைப் படிக்கும் போது தான் வாழ்க்கையிலேயே ஒரு பிடிப்பு வருகிறது.

(63) ஒன்றுக்கும் உதவாதவன் - அ.முத்துலிங்கம்

அ.முத்துலிங்கம் எப்போதும் என் பிரியத்துக்கு உரிய எழுத்தாளர். அவரது 'ஒன்றுக்கும் உதவாதவன்'  58 கதைகளைக் கொண்ட  தொகுப்பு. வழமை போல் இனிமையான மனதை நெகிழ வைக்கும் கதைகளே இவை. மீண்டும் மீண்டும் வாசிக்க தூண்டுபவை.

வியட்நாம் போர் உக்கிரத்தை உலகத்திற்கு காட்டிய புகைப்படத்தில் இருந்த சிறுமியை அவர் கனடாவில் சந்தித்த அனுபவங்களை எரிந்த சிறுமி என்ற கதையில் எழுதியுள்ளார். போலந்து நாட்டைச் சேர்ந்த நண்பரைப் பற்றிய ஆறாத்துயரம் கதை என்னை மிகவும் பாதித்த கதைகளில் ஒன்று.

Sunday 18 December 2016

(62) வாழும் கணங்கள் - சுந்தர ராமசாமி

         சு.ரா 2003 - 2005 காலப்பகுதியில் எழுதிய கட்டுரைகள், சிறுகதைகள், உரைகளின்  தொகுப்பு.  ராமச்சந்திரன் எழுதிய 'பிரபஞ்சம் ஒரு புதிர்' , குணசேகரனின் 'வடு', 'பாரதியின் கடிதங்கள்' ஏ.கே செட்டியாரின்  'அண்ணல் அடிச்சுவட்டில்' என முக்கிய நூல்களைப் பற்றி எழுதியவை தொகுக்கப்பட்டுள்ளது. மொழிபெயர்ப்பாளர் நா. தர்மராஜனின் மொழிபெயர்ப்புப் பணி தொடர்பான கட்டுரை தமிழர்களுக்கு அவர் மொழிபெயர்த்துக் கொடுத்த புத்தகங்களைப் பற்றி குறிப்பிடுகிறது. சு.ரா வின்  நண்பர் சேதுராமன் பற்றிய கட்டுரை மிக நெகிழ்ச்சியானது.

Sunday 18 September 2016

(61) மூங்கில் மூச்சு - சுகா

ஏற்கனவே ஒரு தடவை வாசித்த புத்தகம் தான். புத்தகங்களை ஒழங்குபடுத்தும் போது கண்ணில் பட மீள் வாசிப்பு செய்தேன். வாழ்வு அனுபவங்களைக் சுவாரகசியமாக கூறும் புத்தகம் என்பதால் மூளையால் கண்டபடி யோசிக்கத்தேவை இல்லை. திருநெல்வேலி பற்றிய நினைவுகள், இயக்குனர் பாலு மகேந்திராவுடனான அனுபவங்கள், திரையுலக அனுபவங்கள் எனப் பலவற்றை சுவைபட எழுதியுள்ளார். எழுத்தாளரது நண்பர் ஒரு சுவையான கதா பாத்திரம்.

(60) அறம் - ஜெயமோகன்

அறம் புத்தகம் வெளியான நாட்களில் இருந்து இப்புத்தகத்தை வாங்க வேண்டும் என்று தேடியிருக்கிறேன். இலங்கையில் மட்டுமல்ல, 2014 இல் இந்தியா சென்ற போது திருச்சியில் சில கடைகளில் விசாரித்தேன். புத்தகம் கிடைக்கவில்லை. இனியும் பொறுக்க முடியாது என்று தற்போது  உடுமலை இணையத்தளம் ஊடாக பெற்றுக்கொண்டேன். கதைகள் ஏற்கனவே எழுத்தாளர் ஜெயமோகனின் இணையத்தில் வெளியான போது வாசித்தவை தான், இருந்தாலும் பிடித்த கதைகள் எப்போதும் புத்தகமாக பக்கத்தில் இருக்கும் போது ஒரு சந்தோசம் தான்.

அறத்துடன் வாழும்/வாழ்ந்த‌ தற்கால மனிதர்கள் சிலரது கதைகள். அறம் என்பது இதிகாசங்களில் மட்டுமே சாத்தியம் என்று நினைக்கும் இந்த காலகட்டத்தில், தற்போது கூட சிறந்தவர்கள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள் என்று இக்கதைகள் காட்டுகின்றன. அரிச்சந்திரன் போல வாழ முடியாவிட்டாலும் கூட ஒரு சில நல்ல குணங்களையாவது எம்மில் வளர்த்துக்கொள்ளலாம். இக்கதைகளை வாசித்த பின் நான் சிறிதாவது மாறியுள்ளேன் என்று தான் சொல்ல வேண்டும். நிச்சயமாக இது மற்றவர்களைத் திருத்த எழுதப்பட்ட அறிவுரை கூறும் புத்தக வகை அல்ல.

இக்கதைகளைப் பற்றி ஏற்கனவே பலர் தேவையான அளவு சிறப்பாக‌ எழுதிவிட்டார்கள்.

அறம் - முதலாவது கதை. ஒரு எழுத்தாளர் பற்றிய கதை.கதை சொல்லி அவ் எழுத்தாளருடன் உரையாடுவது போல அமைக்கப்பட்ட கதை. எழுத்தாளர் தனது பணத்தேவைக்காக  ஒரு வருடத்திற்குள் 100 புத்தகங்கள் எழுதுவதாக ஒரு பதிப்பகத்திற்கு வாக்கு கொடுக்கிறார். அவ்வாறே எழுதி முடிக்கிறார்.(இன்று வரை பதிப்புகள் வந்து கொண்டிருக்கின்ற புத்தகங்கள்) அவருக்கு வர வேண்டிய பணத்தை பதிப்பாளரிடமே சேர்த்து வைக்கிறார்.  பணத்தைக் கேட்ட போது பதிப்பாளர் துரத்தி விடுகிறார். பதிப்பாளரின் மனைவி அப்பணத்தை எப்படி எழுத்தாளருக்கு பெற்றுக் கொடுக்கிறார் என்பது தான் கதையின் உச்சம்.

வணங்கான் -   மார்ஷல் ஏ.நேசமணி பற்றிய கதை. சாதியடுக்குகள் நிறைந்த சமூகத்தில் கீழ்சாதி மக்கள் எவ்வாறு அவமானப்படுத்தப்படுகிறார்கள், ஜமீன்கள் மக்களை எப்படித் துன்புறுத்துகிறார்கள், படித்து நல்ல வேலையில் இருந்தால் கூட உயர் ஜாதியனர் முன் எப்படியெல்லாம் கூனிக்குறுகி நிற்க வேண்டியிருக்கிறது போன்ற அந்தக் கால சித்திரத்தை கொண்ட கதை.

தாயார் பாதம் -  குடும்ப அமைப்புக்குள் சிக்கி தன் சுயத்தை இழந்த பெண்ணின் கதை. ராமன் என்பவர் தனது பாட்டியைப் பற்றி சொல்வது போல அமைக்கப்பட்டிருக்கும். அக்குடும்பத்தில் பாட்டியை யாரும் ஒரு பொருட்டாக மதிப்பதில்லை. பாட்டி எப்பவுமே வேலை செய்து கொண்டு இருப்பார். பாட்டி நன்றாக பாடக்கூடியவர். ஆனால் சிறு வயதில் அந்த வீட்டிற்கு வந்த நாளில் இருந்து அவர் பாடி யாரும் கேட்டதில்லை. தாத்தாவுக்கு தான் பாட மட்டுமே தெரியும். மற்றவர்கள் பாடுவதைக் கேட்கத் தெரியாது. மிகச் சிறந்த கதை.

 யானை டாக்டர்- எனக்கு மிகவும் பிடித்த கதை. டாக்டர்.வி.கிருஷ்ணமூர்த்தி பற்றிய கதை. மனிதர்களின் பொறுப்பற்ற வேலையால் காயத்துக்கு உள்ளாகும் யானைக்கு  வைத்தியம் செய்யும் டாக்டர் ஊடாக பல விடயங்கள் இக்கதையில் குறிப்பிடப்பட்டுள்ளன.

காடுகளுக்கு சுற்றுலா செல்லும் மக்களது பொறுப்பற்ற செயற்பாடுகளால் காட்டு மிருகங்கள் காயங்களுக்கு உள்ளாகின்றன. சுற்றுலா செல்பவர்கள் கண்ணாடிப் போத்தில்களை வீசுதல், பொலித்தீன்களை கண்டபடி வீசுதல் போன்ற விடயங்கள் சர்வ சாதாரணமாக நடப்பவை. வீதிகளில் எதையாவது குடித்துக்கொண்டு செல்பவர்கள் முடிந்தவுடன் அப்போத்தில்களை வீதியில் எறிந்து விட்டு செல்வார்கள். பிறகு அவர்களே எமது நாடு குப்பை என்று எந்த ஒரு குற்ற உணர்வும் இல்லாது கதைப்பதை வெகு சாதாரணமாக காணலாம். 


நூறு நாற்காலிகள் - நாடோடிக் குடும்பத்தில் பிறந்து நாராயணகுருவின் சீடர் பிரஜானந்தர் உதவியால்  படித்து நல்ல பதவியில் இருக்கும் ஒருவரின் கதை. அவர் நேர்முகத்தேர்வில் தெரிவு செய்யப்பட்டமைக்கு காரணம் தேர்வாளர்கள் தம்மை முற்போக்காளர்கள் எனக் காட்டிக்கொள்ளவே. காப்பானின் தாயால் தனது உலகத்தை விட்டு வெளிவரமுடியவில்லை. தாயை நினைத்து காப்பானின் மனப்போராட்டங்கள் நுணுக்கமாக எழுதப்பட்டிருக்கிறது.

பெருவலி - கோமல் சுவாமிநாதன் பற்றிய கதை. இறுதிக்காலத்தில் புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த வேளை இமயமலைக்கு செல்லவேண்டும் என ஆசைப்பட்டு செல்கிறார். அதற்கு காரணமாக பல வருடங்களுக்கு முன் புத்தகம் ஒன்றில் வந்த ஒரு படம் இருக்கிறது.

ஓலைச்சிலுவை - டாக்டர் சாமர்வெல் பற்றியது. இராணுவத்தில் இருந்து உலகப்போரில் பங்குபற்றியவர். போரின் பயங்கரம் அவரை மிகவும் பாதிக்கிறது. மலையேற்றத்தில் ஈடுபாடு உள்ளவர். நெய்யூரில் ஒரு மருத்துவமனையின் நிலை அவரைப் பாதித்துவிட அங்கேயே தங்கிவிடுகிறார்.

கோட்டி - தன்னலம் என்பது சிறிதுமே இல்லாத சமூகப் போராளியான பூமேடை ராமைய்யா பற்றிய கதை. இது தவிர குரு-சிஷ்ய உறவை சொல்லும் மத்துறு தயிர் மற்றும் மயில் கழுத்து,உலகம் யாவையும் உள்ளடங்கிய பதின்மூன்று கதைகள் உள்ளடங்கிய புத்தகம்அறம்.

இக்கதைகள் பற்றிய விவாதங்கள் இணையத்தில் வாசிக்க கிடைக்கின்றன. அவை கதைகளை  மேலும் புரிந்து கொள்ள உதவியாக உள்ளது.




Thursday 1 September 2016

(59) தமிழ் மொழிக்கு ஒரு நாடில்லை - அ.முத்துலிங்கம்

எனது விருப்ப்பத்திற்குரிய எழுத்தாளர் அ.முத்துலிங்கம். அவரது கதைகளில் வன்முறைகள் இடம்பெறுவதில்லை என்பதால் எனக்கு மிகவும் பிடிக்கும். சோகத்தைக்கூட ஒரு வித சுவையுடன் சொல்லிவிடுவார்.  'தமிழ் மொழிக்கு ஒரு நாடில்லை' என்ற புத்தகத்தில் அவரது நேர்காணல்கள் இடம்பெற்றுள்ளன. ஜெயமோகன் உட்பட ஏழு பேர் அவரிடம் பெற்ற நேர்காணல்கள் உள்ளன. அவரது பரந்த வாசிப்பு அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார். மோனலிசாவின் புன்னகையின் புகழ் முடிவதற்கான நேரம் வந்துவிட்டது என்ற தலைப்பில் அமைந்த மதுமிதாவால் எடுக்கப்பட்ட நேர்காணல் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. 

அவரது சிறு வயது அனுபவங்கள், கதைகள், பல்வேறு நாடுகளில் வாழ்ந்த அனுபவங்கள், உலகப் புகழ் பெற்ற எழுத்தாளர்களது முக்கிய புத்தகங்கள், எழுத்தாளர்களுடனான தனது அனுபவங்கள் என பல விடயங்களை இந்த நேர்காணல்கள் மூலம் அறிய முடியும். சிறந்த புத்தகம் ஒன்றை வாசித்த திருப்தி கிடைத்தது.

Sunday 28 August 2016

(58)புள்ளிகள் கோடுகள் கோலங்கள் - பாரதிமணி



பாரதிமணி ஐயாவின் 'பல நேரங்களில் பல மனிதர்கள்' புத்தகத்தைப் பற்றிய ஒரு சில விமர்சனங்கள் வாசித்த நாட்களில் இருந்து அந்தப் புத்தகத்தை வாங்க வேண்டும் என்று ஒவ்வொரு தடவையும் கடை செல்லும் போது தேடுவது உண்டு. இலங்கையில் நினைத்த புத்தகத்தைப் பெறுவது கடினம். பின்னர்  அப்புத்தகம் இப்போது விற்பனையில் இல்லை என இணையம் மூலம் தற்செயலாக தெரிந்து கொண்டேன். சமீபமாக 'புள்ளிகள் கோடுகள் கோலங்கள்' என்ற பாரதிமணி ஐயாவின் புத்தக விமர்சனம் காண நேர்ந்தது. அது அவர் இதுவரை எழுதிய கட்டுரைகள், அவரைப்பற்றி பிறர் எழுதிய கட்டுரைகள், நேர்காணல்கள் உள்ளடங்கிய ஒரு முழுத்தொகுப்பு என அறிந்து இணையம் மூலமாக (உடுமலை) பெற்றுக்கொண்டேன். இதுவே நான் இணையம் மூலம் இந்தியாவில் இருந்து வாங்கிய முதல்ப் புத்தகம். பத்து நாட்களில் புத்தகம் வரும் என்று சொன்னார்கள். சொன்னது போலவே வந்தடைந்த புத்தகத்தைப் பார்த்ததும் அப்படி ஒரு சந்தோசம். (தற்போது ஜெயமோகனின் 'அறம்'  புத்தகமும் order பண்ணி உள்ளேன். நெடு நாளாக தேடிக் கிடைக்காத மற்றைய புத்தகம்.)

 சுவையான எழுத்து. தனது நீண்ட கால அனுபவங்களை சுவைபட எழுதியுள்ளார். டெல்லி வாழ்க்கை , நாடக அனுபவங்கள், சிறு வயது நினைவுகள், பல பெரியவர்களுடன் பழகிய நினைவுகள் போன்றவற்றை தன்னுடைய பாணியில் எழுதியுள்ளார். நேரு, அன்னை தெரேசா போன்றவர்களை சந்தித்த அனுபவங்களையும் எழுதியுள்ளார். திருவிதாங்கூர் சமஸ்தானம் பற்றிய கட்டுரை பல புதிய தகவல்களை உள்ளடக்கிய முக்கிய கட்டுரை. தில்லியில் நிகம்போத்காட் சுடுகாடு என்ற கட்டுரை அவர் ஒரு சிறந்த மனிதர் என்று உணர வைக்கிறது. அமிதாப் பச்சனிடம் கா. நா.சு கேட்ட கேள்வி என்ற கட்டுரையை நான் விரும்பி படித்தேன். புத்தகம் முடிந்துவிட்டதே என்று எண்ண வைக்கக்கூடிய எழுத்து இவருடையது. மீண்டும் ரசித்து வாசிக்க வேண்டும்.

Monday 22 August 2016

(57) பாக்குத்தோட்டம் - பாவண்ணன்


 
  பாவண்ணனின் புத்தகங்கள் இரண்டு முன்பே வாசித்து இருக்கிறேன். அவரது எழுத்துக்களை நம்பி வாசிக்க முடியும். பாக்குத்தோட்டமும் ஏமாற்றவில்லை. சிறப்பான சிறுகதைகள் 10 இப்புத்தகத்தில் இடம்பெற்று உள்ளன.  கல்தொட்டி கதையின் கல்தொட்டி செய்பவர், ஒரு நாள் ஆசிரியர் கதையின் திருவட்செல்வர், நூறாவது படம் கதையின் குமாரசாமி என உன்னதமான கதாபாத்திரங்கள் அடங்கிய கதைகள். பாக்குத்தோட்டம் என்ற கதை எல்லாவற்றிற்கும் மகுடம். கர்நாடக மாநிலத்தின் நாட்டிய நாடகக் கலை வடிவமான யட்ச கானம் பார்க்க செல்லும் கதை நாயகன் பார்வையில் எழுதப்பட்ட கதை. யட்ச கானம் பற்றிய விபரிப்புகள் ஒரு தடவை வாசிப்பவரையும் யட்ச கானம் பார்க்க வேண்டும் என ஆசைப்பட வைக்கும். சூதாட்டம் மூலம் பாக்குத்தோட்டங்களை இழந்து வாழும் குடும்பத்தை சேர்ந்த சிறுவனுடன் கதை நாயகன் உரையாடும் இடங்கள் அற்புதமானவை.

(56) திரும்பிச் சென்ற தருணம் - பி.ஏ.கிருஷ்ணன்



   'திரும்பிச் சென்ற தருணம்' ஒரு கட்டுரைத் தொகுப்பு ஆகும். எழுத்தாளர் அங்கோர்,எகிப்து, யார்க் தேவாலயம், அந்தமான் சிறைச்சாலை போன்ற இடங்களுக்கு சென்ற‌ போது பெற்ற அனுபவங்களை சுவைபட எழுதியுள்ளார். அத்துடன் நின்றுவிடாது அவ்விடங்களுடன்  தொடர்பான தகவல்களையும் தருகிறார். எகிப்து பற்றிய கட்டுரையில் பிரமிட்டுகள், எகிப்திய மொழி , அரசர்கள் பற்றி இவர் எழுதியவை எகிப்திய வரலாற்றை பாடப்புத்தகத்தில் கசப்புடன் படிக்கும் மாணவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கக்கூடியவை. அந்தமான் தீவில் ஜராவா பழங்குடியினர் எவ்வாறெல்லாம் பாதிக்கப்படுகிறார்கள் என்ற கட்டுரை சுற்றுலா என்ற பெயரில் பழங்குடியினரை பார்வையிடச் செல்பவர்களுக்கு ஒரு குட்டு.


மருது பாண்டியர்கள் பற்றிய கட்டுரை முக்கியமானது. அவர்களது குடும்பங்கள் முழுவதுமாக தூக்கில் இடப்பட்டது, சின்ன மருதுவின் மகன் துரைசாமி பினாங்கில் சிறை வைக்கப்பட்டது என பல விடயங்களை ஆராய்ந்து எழுதியுள்ளார்.

The bicycle thief உட்பட தனக்கு பிடித்த சில திரைப்படங்கள் பற்றி எழுதிய கட்டுரைகளும் காந்தியப் போராளிகளான ஜெகந்நாதன் , கிருஷ்ணம்மாள் தம்பதிகளைப் பற்றிய கட்டுரைகளும்  முக்கியமானவை.


எழுத்தாளர் தான் பார்த்தவற்றையும், படித்தவற்றையும் சொற்களினூடாக கொண்டுவருவதில் வெற்றியடைந்துள்ளார்.

திருப்புகழ் - 2


திமிர வுததி யனைய நரக
     செனன மதனில் ...... விடுவாயேல்

செவிடு குருடு வடிவு குறைவு
     சிறிது மிடியு ...... மணுகாதே

அமரர் வடிவு மதிக குலமு
     மறிவு நிறையும் ...... வரவேநின்

அருள தருளி யெனையு மனதொ
     டடிமை கொளவும் ...... வரவேணும்

சமர முகவெ லசுரர் தமது
     தலைக ளுருள ...... மிகவேநீள்

சலதி யலற நெடிய பதலை
     தகர அயிலை ...... விடுவோனே

வெமர வணையி லினிது துயிலும்
     விழிகள் நளினன் ...... மருகோனே

மிடறு கரியர் குமர பழநி
     விரவு மமரர் ...... பெருமாளே.

Friday 3 June 2016

திருப்புகழ் - 1

தமிழ் மொழியில் படித்து சுவைக்க பல பாடல்களை எமது முன்னோர் எமக்கு தந்துள்ளார்கள். தேவாரம் , திருவாசகம் , திருப்புகழ், திவ்ய பிரபந்தம், அபிராமி அந்தாதி , கம்பராமாயணம் , நளவெண்பா என பல்லாயிரக்கணக்கான பாடல்கள் உள்ளன. இவற்றை அவ்வப்போது ரசிப்பதோடு சரி. ஒரு வித சோம்பல் காரணமாக, நேரமில்லை என்ற பொய் வேடத்தில் தொடர்ச்சியாக படிப்பதில்லை. வாரம் ஒரு பாடலாவது படிக்க வேண்டும் என்று முடிவெடுத்து நிறைய நாட்களாகியும் பெரிதாக எதுவும் படிக்கவில்லை. இன்றிலிருந்து வாரம் ஒரு திருப்புகழ் கட்டாயம் படிக்க வேண்டும் என முடிவு செய்துள்ளேன். முடிந்தால் இராகத்துடன் கற்றுக்கொள்வது. திருப்புகழில் இருக்கும் சந்த அழகை நான் எப்போதும் ரசிப்பேன். அதன் நுணுக்கங்களை வாசிக்கும் போது ஆச்சரியமாக இருக்கும். அருணகிரிநாதரை வியந்து படிப்பதுண்டு.
முதலில் இதுவரை எனக்கு தெரிந்த திருப்புகழ்களை பட்டியல்ப்படுத்திவிட்டு புதிதாக கற்றுக்கொள்வது என எண்ணியுள்ளேன். முருகனையும் பாடல் தந்த அருணகிரிநாதரையும் வணங்கி தொடர்கிறேன்.


கௌமாரம் இணையத்தளத்தில் திருப்புகழ் பாடல்கள் பொருளுடன் படிக்கக்கூடியதாக இருக்கின்றது. ஸ்ரீ கோபாலசுந்தரம் என்பவர் பொருள் எழுதியுள்ளார். பல பாடல்களுக்கு ஒலிப்பதிவும் கிடைக்கின்றது. அவ் இணையம் பல சுயநலமற்ற நல்லவர்களின் முயற்சி. அவர்களுக்கு எனது சிரம் தாழ்த்தி  நன்றி தெரிவித்து கொள்கிறேன்.


உம்பர்தருத் தேநுமணிக் ...... கசிவாகி
     ஒண்கடலிற் றேனமுதத் ...... துணர்வூறி

இன்பரசத் தேபருகிப் ...... பலகாலும்
     என்றனுயிர்க் காதரவுற் ...... றருள்வாயே

தம்பிதனக் காகவனத் ...... தணைவோனே
     தந்தைவலத் தாலருள்கைக் ...... கனியோனே

அன்பர்தமக் கானநிலைப் ...... பொருளோனே
     ஐந்துகரத் தானைமுகப் ...... பெருமாளே.

(55) கனவு முடியவில்லை - சரத்சந்திரர்


வங்காள எழுத்தாளர் சரத்சந்திரர் தமிழர்களிடமும் பிரபலமானவர்.இவர் எழுதிய கதையே பல மொழிகளில் பல தடவைக‌ள் படமாக்கப்பட்ட பிரபல திரைப்படமான தேவதாஸ்.  அவரது  'ஸ்ரீகாந்தா' என்ற நாவலை அ.கி.ஜயராமன் தமிழில் 'கனவு முடியவில்லை' என்ற பெயரில் மொழிபெயர்த்துள்ளார். இந்த நாவல் கற்பனைகள் அடங்கிய சுய‌சரிதைத்தன்மை உள்ள நாவல். இந்த நாவலில் வரும் ராஜலஷ்மிக்கும்  தேவதாஸில் வரும் பார்வதிக்கும் பல ஒற்றுமைகள் காணலாம். ராஜலஷ்மி, அபயா, அன்னதா , கமலலதா போன்ற பெண்களின் கதையே இந்த நாவல்.

Sunday 15 May 2016

(54) மதுரா விஜயம் - ஸ்ரீவேணுகோபாலன்

'திருவரங்கன் உலா' வின் தொடர்ச்சியே 'மதுரா விஜயம்'. வீரவல்லாளன் யுத்தத்தில் தோல்வி அடைந்ததால் அரங்கன் விக்கிரகத்தை மீண்டும் மேல்க்கோட்டைக்கு எடுத்துச் செல்வதுடன் 'திருவரங்கன் உலா' முடிவடைகிறது. மதுரா விஜயம் மீண்டும் அரங்கனை  ஸ்ரீரங்கத்தில் எழுந்தருளச் செய்யும் முயற்சிகள்  தொடர்பான நாவல்.

குலசேகரனின் மகன் வல்லபன் , அவனது நண்பன் தத்தன் அரங்கனைத் திருப்பதியில் காட்டுப்பகுதியில்  கண்டுபிடிக்கிறார்கள். சித்தப்பிரமை பிடித்த கொடவர் ஒருவர் அரங்கனைப் கவனமாகப் பேணிப்  பாதுகாக்கின்றார். அரங்கனை கோபண்ணர் உதவியுடன் திருப்பதியில் எழுந்தருளச் செய்கின்றனர். கம்பண்ணர் சுல்தானுக்கு எதிராக போர் செய்து வெற்றி பெறுகின்றார். அரங்கன்  திருப்பதியில் இருந்து மீண்டும் ஸ்ரீரங்கத்தில் எழுந்தருளுகின்றார்.

அரங்கனை மீண்டும் ஸ்ரீரங்கத்தில் எழுந்தருளச் செய்வதில் விஜயநகர அரசர்  கம்பண்ணர் மற்றும் அமைச்சர்  கோபண்ணர் போன்றோர் முக்கிய பங்காற்றுகின்றனர். கம்பண்ணரின் மனைவி கங்கதேவி ஒரு சிறந்த கவிஞர். அவர் எழுதிய மதுரா விஜயம் என்ற நூலில் கம்பண்ணர் பதினான்காம்  நூற்றாண்டின் பிற்பகுதியில் தெற்கு நோக்கி படையெடுத்து சம்புவரையர்களையும் மதுரை சுல்தானையும்  வீழ்த்தி வெற்றி பெற்றதை பதிவு செய்துள்ளார். இன்று கங்கதேவி எழுதிய நூல் பல வரலாற்று நிகழ்வுகளை அறிய உதவியாக இருக்கின்றது. அந்த நூலின் தலைப்பையே ஸ்ரீவேணுகோபாலன் அவர்களும் தனது நூலுக்கு பயன் படுத்தியுள்ளார்.
அரங்கனின் வரலாறு அறிய விரும்புபவர்கள் வாசிக்க வேண்டிய நூல் மதுரா விஜயம் ஆகும்.

Thursday 14 April 2016

(53) உன்னைச் சரணடைந்தேன் - கம்பவாரிதி ஜெயராஜ்

கம்பவாரிதியால் எழுதப்பட்ட,   கம்பன் கழகம் ஆரம்பித்ததிலிருந்து யாழ்ப்பாணத்தில் செயற்பட்ட காலப்பகுதி வரையான ( 1950 - 1995 ) கழக வரலாறு  " உன்னைச் சரண‌டைந்தேன் - யாழில் கம்பன்" என்ற நூல்,  இந்த வருட கம்பன் விழாவில் (2016)  வெளியிடப்பட்டது. அவரது பேச்சைப் போலவே எழுத்தும் இருக்கும் என்ற நம்பிக்கையில் புத்தகத்தை விழா இறுதி நாள் அன்று வாங்கினேன். புத்தகத்தை உடனடியாக வாசிக்கத் தொடங்கவில்லை எனினும் வாசிக்கத்தொடங்கிய பின் முழு மூச்சாக வாசித்து முடித்தேன். கம்பன் கழக செயற்பாடுகள், அதற்காக உதவியவர்கள், இடையூறு செய்தவர்கள், வழிகாட்டிய ஆசிரியர்கள் என எல்லாவற்றையும் வெளிப்படையாக எழுதியுள்ளார்.

கம்பன் விழாவுடன் எனக்கு நீண்ட நாள் தொடர்பு எல்லாம் இல்லை. சிறு வயதிலே வீட்டில் இருந்த கம்பன் விழா அழைப்பிதழ் மூலமே (சிறு புத்தகம் போன்ற ) கம்பன் விழா பற்றி முதலில்  தெரிந்து கொண்டேன். அழகான அவ் அழைப்பிதழை திரும்ப திரும்ப வாசித்த நினைவு இருக்கிறது. வருடத்திற்கு ஒரு தடவை நல்லூர் முருகன் திருவிழாவின் போது மட்டுமே ஊரை விட்டு வெளியில் சென்ற அனுபவம் உள்ள எனக்கு அவ்விழாவுக்கு அழைத்துச் செல்லும் படி வீட்டில் கேட்கக் கூட துணிவு வந்ததாக நினைவில் இல்லை. எமது சொந்த இடமான சாவகச்சேரியில் கம்பவாரிதியின் பேச்சு இடம்பெற்றதாக நினைவும் இல்லை. அப்படி நடக்க இருந்த பேச்சையும் சரியான நேர முகாமைத்துவம் இல்லாமையால் நிறுத்தியதாக அவரே புத்த‌கத்தில் எழுதியுள்ளார்.

கொழும்பில் பல காலமாக கம்பன் விழா நடைபெற்று வருகின்ற போதும் நான் முதன் முதலில் 2015 விழாவின் போதே சென்றேன். சில நேரங்களில் விழா முடிந்த பின்பே எனக்கு தெரிய வரும். அப்படித் தெரிந்து இருந்தாலும் கூட்டிச் செல்ல துணைக்கு ஆள் கிடைக்காது , அதனால் போக தயக்கம். ஆனால் இப்போது யாரையும் எதிர்பார்க்காமல் தனியவே போகப் பழகி விட்டேன். இரவு 9.30 இற்கு விழா முடிந்தாலும் auto  ஒன்றைப் பிடித்து வீடு வந்து சேர தைரியம் வந்துவிட்டதால் விழாவை நன்றாக ரசிக்க முடிகிறது.  கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நடைபெறும் கம்பவாரிதியின் பேச்சுகளையும் ஒன்றுவிடாமல் கேட்பேன். நான் தமிழ்ப் பாடல்களை  நன்றாக ரசித்துப் படிக்க கம்பன் விழாவும் ஒரு காரணமாக இருக்கிறது.  


    இந்தப் புத்தகத்தில் எனக்கு மிகவும் பிடித்தது இறுதிப் பகுதியாகும்.  தன்னை உருவாக்கிய ஆசிரியர்களைப் பற்றி அவர் எழுதியவை எல்லோரும் வாசிக்க வேண்டியவை. சிவராமலிங்கம்  ஆசிரியர், வித்துவான் வேலன் , வித்துவான் ஆறுமுகம்  போன்ற சிறந்த ஆளுமை மிக்க மனிதர்களை அறிய முடிந்தது. அம்மூவரும் உரையாடும் போது அருகில் இருந்து கேட்கும் வாய்ப்பு கம்பவாரிதி ஐயாவுக்கு கிடைத்திருக்கிறது. அது உண்மையிலேயே பெரும் பேறு தான். இலக்கண வித்தகர் நமசிவாய தேசிகர் , நாடாக நடிகர் அருமை நாயகம் , புதுவை போன்றவர்களைப் பற்றிய கட்டுரைகளும் சுவையானவை.


கம்பவாரிதியின் குருநாதரான பேராசிரியர் இராதாகிருஷ்ணன் அவர்களுடனான உறவை அழகாகப் பதிவு செய்துள்ளார்.அவரது குடும்ப அங்கத்தவர்கள் பாசமாக பழகியிருக்கிறார்கள். வானொலியில் பேராசிரியர் இராதாகிருஷ்ணன் அவர்களது குரலைக் கேட்டு, அதன் பின் அவரைக் கண்டடைந்து அவர் ஆசி பெற்றது  , அவரைப் போல குடுமி போட்டது , அவரது திருவடிகளைப் பெற்று வந்தது போன்ற விடயங்களைப் பதிவு செய்துள்ளார்.  கம்பன் அடிப்பொடி பற்றிய பகிர்வு மூலம்  காரைக்குடி கம்பன் விழா பற்றி அறிய முடிந்தது. பேராசிரியர் இராதாகிருஷ்ணன் , கம்பன் அடிப்பொடி போன்ற சுய நலமற்ற சிற‌ந்த மனிதர்களை அறிய முடிந்ததே மகிழ்ச்சியாக இருந்தது.

கம்பன் கழகத்தைப் பற்றி பதிவுகளில் கழகத்துக்கு துணையாகப் பாடுபட்டவர்கள், எதிர்த்தரப்பினர் என்று பெரிய பட்டியல் புத்தகத்தில் உண்டு.  எத்தனையோ பேர் கழகத்திற்காக கடுமையாக உழைத்திருக்கிறார்கள். அதற்கு அதிகமாக பகையுடனும் பலர் செயற்பட்டிருக்கிறார்கள். பகைமை கொண்டவர்களில் பொன்.சுந்தரலிங்கம் அவர்களை முக்கியமாகக் குறிப்பிட்டுள்ளார். எனக்கு தனிப்பட்ட ரீதியில் பொன்.சுந்தரலிங்கத்தின் பாடல்கள் பிடிக்கும். கம்பவாரிதி எப்போதும் ஒருவரது குறையையோ/ நிறையையோ  வெளிப்படையாக   சொல்பவர். அவரது உரைகளின் போது சில நேரங்களில் இது வெளிப்படும். நிறையை எல்லோரும் மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்வார்கள். குறையை அப்படி யாராவது ஏற்றுக் கொள்வார்களா தெரியவில்லை.

 ஆரியனான ராமனுக்கு எடுக்கப்படும் விழாவிற்கு எதற்காக செல்ல வேண்டும் என்றும்  இராமாயணமே ஒரு பொய்க் கதை எங்களுக்கு அதில் எல்லாம் ஆர்வம் இல்லை என்றும் கம்பன் விழாவிற்கு எதிரானவர்கள் சொல்வதைக் கேட்டிருக்கின்றேன். அவர்கள் நிச்சயமாக எந்த ஒரு கம்பன் விழா நிகழ்ச்சியையும் பார்க்காதவர்கள். நான் கம்பன் விழாவை கம்பனின் தமிழுக்கான  விழாவாகவே காண்கிறேன். அங்கு இராவணனின் பெருமையும் பேசப்படுகிறது. ராமனின்  சிறுமையும் பேசப்படுகிறது. இராமாயணம் உண்மையாக இருந்தால் என்ன, பொய்யாக இருந்தால் என்ன? அழகான கம்பனின் பாடல்களை இழக்கவே முடியாது.  ராமனின் கதை மூலம் எத்தனையோ விழுமியங்கள் பேசப்படுகின்றன. நான் பலவற்றைக் கற்றுக்கொண்டேன்.


இலங்கை கம்பன் கழகத்தை நேர முகாமைத்துவம், நிகழ்ச்சி ஒழுங்கமைப்பு, அடுத்த தலைமுறையை உருவாக்கியமை போன்ற விடயங்களுக்காக எல்லோரும் பாராட்டுவார்கள். கம்பன் விழா மேடையே அழகாக இருக்கும். அழைப்பிதழுக்கு தனி மரியாதை உண்டு. தற்போது இலங்கையில் தமிழை மக்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியை சரியாக செய்வது என்னைப் பொறுத்த வரை கம்பன் கழகம் மட்டுமே. கம்பன் விழா காலை நிகழ்ச்சிகள் கூடிய இலக்கிய தரம் உள்ளதாக அமைவதுண்டு. இலக்கியம் மட்டுமல்லாது இசை , நாட்டிய நிகழ்ச்சியும் தனியாக நடைபெறும்.  நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற  கழகத்தாரின் அயராத உழைப்பே காரணம். பல நல்லவர்கள் அதற்கு உதவுகிறார்கள். அவர்களைப் பற்றிய விபரங்களும் இந்தப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன. கழகத்தை உண்மையாக வளர்த்தவர்கள் ஒதுங்கி நிற்க, கழக வளர்ச்சியுடன் தொடர்பற்ற பலர், கழகம் வளர தாமே காரணம் என சொல்லித்திரிவதால், கழகம் தொடங்கியதில் இருந்து இன்று வரை தொடர்புடைய ஒருவர் என்ற வகையில், உண்மையை எழுத வேண்டியிருந்ததாலேயே தான் இந்த நூலை எழுதியதாக கம்பவாரிதி  குறிப்பிட்டுள்ளார்.

Sunday 10 April 2016

(52) திருவரங்கன் உலா

  சுல்தானிய படையெடுப்புக் காலத்தில், அவர்களிடம் இருந்து காப்பாற்ற  ஸ்ரீரங்கம் கோயில் உற்சவரை வேறு இடத்திற்கு மறைத்து எடுத்துச் சென்றனர். கிட்டத்தட்ட 40 வருடங்கள் அஞ்ஞாத வாசம் இருந்த ரங்கநாதரின் உலா பற்றி  ஸ்ரீவேணுகோபாலன்  எழுதிய வரலாற்று நாவலே "திருவரங்கன் உலா".  


முகம்மது பின் துக்ளக்  என பின்னாளில் பெயர் பெற்ற உலுக்கான் , டில்லி சுல்த்தானான கியாசுத்தீன் துக்ளக்கின் மகன். ஸ்ரீரங்கம் கோயிலைக் கொள்ளையிட முற்பட்டான். இக்கொள்ளையில் இருந்து அரங்கன் சிலை , நகைகளைக் காக்க ஒரு பகுதி மக்கள் அரங்கனைத் தம்முடன் எடுத்து செல்கின்றனர். ஒரு பகுதி மக்கள் கோயில் மதிலை அரனாக வைத்து சண்டையிடுகின்றனர். மூலவர் சிலைக்கு முன்னால் கல்லால் தூண் எழுப்பி மறைத்துவிடுகின்றனர்.அச்சண்டை தோல்வியில் முடிகிறது.  


ஸ்ரீரங்கத்தில் ஒரு படையை நிறுத்தி அரங்க‌ன் சிலையைத்தேடுமாறு கூறி சுல்தானியர் படை மதுரை நோக்கி செல்கிறது. மதுரையை சுல்தானியர் முற்றுகை இட்டதால் அழகர் கோயிலில் இருந்த அரங்கன் சிலைக்கு பாதிப்பு என எண்ணி அச்சிலையை மிகுந்த சிரமத்தின் மத்தியில் தென் பகுதிக்கு எடுத்து செல்கின்றனர். அங்கிருந்து சேர நாடு சென்று கோழிக்கோடு (Calicut)  வழியாக மேல்க் கோட்டை , சத்தியமங்கலம் செல்கின்றனர்.  இப் பயணத்தின் போது அரங்கனின் நகைககள் களவாடப்படுகின்றது. அரங்கன் மேல் கொண்ட அன்பால்,  தமது குடும்பங்களைக்  பிரிந்து அரங்கனுடன் மக்கள் செல்கின்றனர். எப்படியாவது அரங்கனை மீண்டும் ஸ்ரீரங்கம் கொண்டு வரவேண்டும் எனப் பாடுபடுகின்றனர்.


இக் கதையில் முக்கிய கதாபாத்திரமாக குலசேகரன் இருக்கிறான். அரங்கனை சுல்தானியர் கண்ணில் படாமல் எடுத்துச்செல்வதிலும் சுல்தானியர்களுக்கு எதிராக சண்டை செய்வதிலும் முன் நிற்கிறான். இறுதியில் ஒய்சாள மன்னன் வீர வல்லாளன் துணையுடன் நடந்த சுல்தானியர்களுக்கு எதிரான போரில் இறந்து விடுகிறான்.

முதலில் ஒய்சாள மன்னன் வீர வல்லாளன்,  சண்டையால் இழப்பு மட்டுமே வரும் என எண்ணி சுல்தானியர்களுக்கு எதிராகச் சண்டையிடாது கப்பம் கட்டி ஆட்சி செய்தான்.  பின் சுல்தானியர்களுக்கு எதிரான போரில் ஈடுபட்டான்.  முதலில் வெற்றி அடைந்தாலும் பின்னர் கண்ணனூர் கொப்பம் கோட்டையின் முற்றுகையின் (1343) போது வீர வல்லாளன் சுல்தானின் படைகளால் சிறைப் பிடிக்கப்பட்டான். இதன் பிறகு வல்லாளனைக் கொன்று, வைக்கோல் அடைக்கப்பட்ட அவனது உடலை மதுரை கோட்டை சுவர்களில் காட்சிக்கு வைத்தனர். ( இபன் பதூதா தனது நூலில் இச் செய்தியைக்  குறிப்பிட்டுளார்)   மன்னன் மதுரை சுல்தான்களால் பிடிபட்டு கொல்லப்பட்டதால், போரின் முடிவு துக்ககரமாக மாறியது. வீர வல்லாளன் இறப்பின் பின் அரங்கனை மீண்டும் திருவரங்கம் கொண்டு வரலாம் என்ற‌ நம்பிக்கை போய்விடுகிறது.
சுல்த்தானியர் அரங்கன் சிலையைத் தேடி  அலைந்தமைக்கு இதற்கு முன்னைய சுல்தானிய படையெடுப்பில் இச்சிலை கொள்ளையடிக்கப்பட்டமை ஒரு காரணமாக இருந்தது. இதனுடன் தொடர்புடையதே துலுக்க நாச்சியார் கதை.


சுல்தான் அலாவுதீன் கில்சி டில்லியில் ஆட்சி செய்ய தொடங்கியதும் தனது தளபதி மாலிக் காபூரை அழைத்து தெற்கு நாடுகளுக்கு படையெடுப்பை மேற்கொள்ளுமாறு சொன்னார். மாலக்காபூர் படை கார்த்திகை மாதம் டில்லியில் இருந்து புறப்பட்டு சித்திரை மாதம் வீரதாவளப் பட்டினத்தை அடைந்தது. பாண்டிய அரசர் சண்டை போடாமல் ஓடிச்செல்ல அவரைத்துரத்தி சென்ற படைகள் வழியில் அகப்பட்ட நகரங்களைக் கொள்ளை அடித்து சென்றனர். காஞ்சிபுரம், கண்ணனூர் , ஸ்ரீரங்கம் என்பன சூறையாடப்பட்டன. கடைசியில் மதுரை சென்ற போது அங்கு இருந்த பாண்டிய  மன்னர் விக்கிரம பாண்டியர் தடுத்து நிறுத்திவிட்டார். திரும்பும் போது  சூறையாடப்பட்ட தென்னாட்டின் திரவியங்கள்  எல்லாம் எடுத்து செல்லப்பட்டன. பொருட்களை அலாவுத்தீன் டில்லி பிரபுக்களுக்கு பிரித்து கொடுத்தார்.  திருவரங்கத்தில் இருந்து எடுக்கப்பட்ட அரங்கன் சிலை அப்துல்லா உசேன் பாதுஷா என்பவரிடம் செல்கிறது.

அவரது பெண் சுரதாணி  (கிழக்கிந்திய கம்பனி காலத்தில் செஞ்சியைச் சேர்ந்த நாராயணன் என்பவர் எழுதிய கர் நாடக ராஜாக்களின் சவிஸ்தார சரித்திரம் என்ற நூலில் இப்பெயர் காணப்படுவதாக ஆசிரியர் குறிப்பிடுகின்றார். ) கொள்ளையிடப்பட்ட பொருட்களைப் பார்வையிட , அங்கிருந்த அரங்கன் சிலை அவளை வசீகரித்துக் கொள்கிறது. ஆண்டாளை ஆட்கொண்டவன் அல்லவா? . சுரதாணி அச்சிலையை எடுத்து தன்னுடன் வைத்துக்கொள்கிறாள். மறுபுறம் அரங்கன் மேல் மாறாத காதல் கொண்ட மக்கள் கொள்ளையிட்ட படையின் பின்னாலேயே சென்று அரங்கன் சிலை எங்கு உள்ளது என அறிகின்றனர். பாதுஷா முன்னால்  'ஜக்கிந்தி' நடனம் ஆடி அவரை மகிழ்விக்கின்றனர்.  பல வெகுமதிகளைக் கொடுத்த பாதுஷாவிடம் அதை மறுத்து அரங்கனின் சிலையைத்தரும்படி கேட்கின்றனர். அரங்கனின் சிலையை சுரதாணிக்கு தெரியாமல் எடுத்துக்கொண்டு திருவரங்கம் வருகின்றனர். 


அரங்கன் சிலை இ
ல்லாததைக்கண்டு சுரதாணி துடித்துப் போகிறாள். ஒரு விக்கிரகத்திற்காக மகள் துடிப்பதைப் பார்த்து பாதுஷா ஆச்சரியப்படுகிறார். மகளுக்காக ஒரு சிறுபடையை அனுப்பி அவ்விக்கிரகத்தை மீண்டும் கொண்டு வருமாறு அனுப்புகிறார். சுரதாணியும் அப்படையுடன்திருவரங்கம் வருகிறாள். டில்லிப் டை பின் தொடர்ந்து வருவதை அறிந்த மக்கள் அரங்கன் விக்கிரகத்துடன் ஸ்ரீரங்கம் செல்லாது வேறு வழியில் சென்றனர். திருவரங்கத்தில் விக்கிரகத்தை காணாத சுரதாணி அங்கேயே மரணம் அடைகிறாள். சுரதாணி தான்  துலுக்க நாச்சியார் என அழைக்கப்படுகிறார். ஸ்ரீரங்கம் கோயில் இரண்டாம் பிரகாரத்தில் வட கீழ் மூலையில் சுரதாணியின் உருவம் சித்திரமாக உள்ளது. தினமும் காலையில் கோதுமை ரொட்டி , மதுரப்பருப்பும் படைக்கும் வழக்கம் இன்று வரை  தொடர்கிறது.


அரங்கன் மேல் பக்தர்கள் எவ்வளவு அன்பு வைத்திருக்கின்றனர் என்று கதையை வாசிக்கும் போதே  புல்லரிக்கும். மூன்று கொடவர்கள் அரங்கன் சிலையுடன் சத்தியமங்கலத்தில் இருந்து மேல்க் கோட்டை செல்வதுடன் கதை முடிகிறது. இச்சிலை பின் திருப்பதிக்கு எடுத்துச்செல்லப்பட்டது.  இது தொடர்பான கதையை இதன் இரண்டாம் பாகமான 'மதுரா விஜயம்' என்ற நூலில் வாசிக்க முடியும் என நினைக்கிறேன். அரங்கனை கண்ணார தரிசிக்க வேண்டும் என்ற ஆசையை இந்த நூல் ஏற்படுத்திவிட்டது.


 







Wednesday 9 March 2016

(51) அம்மாவுக்கு ஒரு நாள் - அசோகமித்திரன்

அசோகமித்திரனின் 27 சிறுகதைகளைக் கொண்ட தொகுப்பு இது. 1950 - 60 இல் எழுதப்பட்டவை.

அம்மா படம் பார்க்க செல்லவேண்டும் என ரகுவை அன்று வேளைக்கு வீட்டுக்கு வரமுடியுமா எனக் கேட்கிறார். அந்தப் படத்தில் நீ பார்க்க பெரிதாக ஒன்றும் இல்லை எனக் கூறி வேலைக்கு கிளம்பும் ரகு பின் சீக்கிரமாக வீட்டுக்கு போக நினைத்தும் முடியாமல்ப் போய்விடுகிறது. ரயில் தாமதமாகி விட பஸ்ஸில் போக பணமில்லாமல் தவிக்கிறான். வீட்டிற்கு தாமதமாகவே வருகிறான். " நீ சினிமாவுக்கு போகவில்லையா?" என அர்த்தமில்லாமல் கேள்வி கேட்கிறான். அம்மாவுக்கு கோவித்துக் கொள்ளவே தெரியாது. தனக்கு ஏன் சீக்கிரம் வரமுடியவில்லை என்பதை சொல்வதால் பயன் ஒன்றும் இல்லை என சொல்லாமலே விட்டுவிடுகிறான்.
 - அம்மாவுக்கு ஒரு நாள் சிறுகதை




அனைத்துமே படிக்க வேண்டிய சிறுகதைகள்.

Friday 5 February 2016

(50) கறுத்தக்கொழும்பான் - ஆசி கந்தராஜா

ஆசி கந்தராஜா புலம் பெயர் எழுத்தாளர். இவர் விவசாயப் பேராசிரியராக‌ இருப்பதால் அது தொடர்பான விடயங்களையும் சுவாரசியமாக கதைகளிடையே கொண்டு வந்து விடுகிறார்.
கறுத்தக் கொழும்பான் என்ற முதலாவது கதையே அட்டகாசமாக ஆரம்பிக்கிறது. யாழ்ப்பாணத்தவர்களுக்கு தான் அதன் அருமை நன்றாக தெரியும். அவுஸ்திரேலியாவில் கறுத்தக்கொழும்பு மரம் எப்படியாவது நாட்ட வேண்டும் என்று நினைக்கும் உடையார் மாமா இறுதியில் அதை விட முக்கியமாக அடுத்த சந்ததியினருக்கு தமிழைக் கொண்டு சேர்க்க வேண்டும் என அது தொடர்பான பணியில் இறங்கும் கதை.

அடுத்து பனை , முருங்கை என்று  யாழ்ப்பாணத்தவர்களிடம் இருந்து பிரிக்கமுடியாத உணவு வகைகளைப்பற்றிய கதைகள்.  அவை தொடர்பான சகல விடயங்களையும் கதைகளில் சொல்கிறார்.  ஜேர்மனியில் வாழ்ந்த அனுபவம் இருப்பதால் கிழக்கு , மேற்கு ஜேர்மனி பற்றியும் தனது கதைகளில் தெளிவாக எழுதியுள்ளார்.
இவரது எழுத்துக்கள் இடையிடையே அ. முத்துலிங்கத்தை நினைவூட்டுகின்றன.

(49) அம்மா வந்தாள் - தி. ஜானகிராமன்

 மனிதர்கள் உணர்வுகளிற்கா அல்லது மனிதர் வகுத்த நியமங்களுக்கா முக்கியம் கொடுக்கிறார்கள் என்பது பதில் கூறமுடியாத சிக்கலான வினாவாக இருக்கிறது. உணர்வுகளுக்கு மிக்கியம் கொடுத்தாலும் கூட அவர்கள் தாம் நியமங்களுக்கு கட்டுப்பட்ட ஒழுக்க சீலர்களாகவே காட்டிக்கொள்கின்றனர். ஜானகிராமனின் நாவல்களில்  மனிதர்கள் உணர்வுகளுக்கு கட்டுப்பட்டவர்களாக இருக்கின்றனர்.


அப்பு சிறு வயது முதல் காவேரிக்கரையில் உள்ள பவானி அம்மாளின் வேத பாடசாலையில் படித்துவிட்டு ஊருக்கு திரும்ப ஆயத்தமாவதில் இருந்து நாவல் ஆரம்பிக்கிறது. காவேரி ஆறு தான் அவனுக்கு எல்லாமாக இருக்கிறது. இந்து,  பவானி அம்மாளின் உறவுக்கார பெண் .சிறுவயதில் திருமணமாகி கணவனை இழந்த இந்து வேதபாடசாலைக்கு மீண்டும் வந்து பவானி அம்மாள் கூடவே இருக்கிறாள். இந்துவின் காதலை ஏற்றுக்கொள்ள அப்பு மறுக்கிறான். அது மரபை மீறும் செயல் என காரணம் சொல்கிறான்.

சொந்த ஊருக்கு வரும் அப்புவுக்கு தனது அம்மாவின் செய்கைகள் சந்தேகத்தை தருகின்றன. அலங்காரத்தம்மாள் தனது செயல் பிழை என உணர்ந்தும் அதிலிருந்து விடுபடமாட்டாமல் வாழ்ந்து வருகிறாள். வீட்டில் எல்லோருக்குமே விடயம் தெரிந்திருக்கிறது.  அலங்காரத்தம்மாள் அப்புவை வேதம் படிக்க வைத்து அவனை வணங்கி தனது பாவத்தைப் போக்க வேண்டும் என நினைக்கிறாள்.  இறுதியில் அப்புவும் அம்மா பிள்ளை தான் எனக்கூறி காசிக்கு போய் பாவம் கரைக்க  கிளம்புகிறாள். இதிலிருந்து அப்பு , இந்துவின் விடயம்  அலங்காரத்தம்மாளுக்கு தெரிந்திருந்தது என ஊகிக்கமுடியும். பவானியம்மாள் வெளிப்படையாக எதுவும் கூறாவிட்டாலும் அவளது நடவடிக்கைகள் அப்பு , இந்து சேர வேண்டும் என்று அவள் விரும்புகிறாள் என்றே எண்ண வைக்கிறது. இந்த நாவலின் இந்து, அலங்காரத்தம்மாள், பவானியம்மாள் என அல்லோரும் தாம் விரும்பியதை சாதிக்கிறார்கள். பவானியம்மாள் வேதபாடசாலை நிறுவி வேதம் கற்றுகொடுக்கும் தனது ஆசையை நிறைவேற்றுகிறார்.அலங்காரத்தம்மாளும் இந்துவும் சம்பிரதாயமாக மக்களால் பேணப்படும் மரபை துணிந்து மீறுபவர்களாக இருக்கின்றனர்.

  ஜானகிராமன் நாவல்களின்  பெண்கள் தனித்துவமானவர்கள். அவர்களிடம் ஒரு வசீகரம் ஒட்டியிருக்கும்.  மோகமுள் நாவலின் ஜமுனா போல. 

"சரஸ்வதி பூஜை அன்று புத்தகம் படிக்க கூடாது என்பார்கள். ஆனால் அன்று ஒரு நாளும் இல்லாத திரு நாளாக புத்தகத்தின் மேல் வருகிறது ஆசை " 

என்ற‌ நாவலின் முதல் வரியே நாவலின் சாரம்சம் போல இருக்கிறது.



Friday 22 January 2016

(48) கிரௌஞ்சவதம் - வி.ஸ. காண்டேகர்

காண்டேகர் மராட்டிய எழுத்தாளர். அவரது  பல நூல்களை தமிழில் மொழிபெயர்த்தவர் கா. ஸ்ரீ. ஸ்ரீ.  கிரௌஞ்ச வதமும்  கா. ஸ்ரீ. ஸ்ரீ யாலேயே அழகாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. காண்டேகரின் பல நூல்கள் முதன் முதலாக தமிழில் வெளியான பிறகே மூலமொழியில் வெளியாகியிருக்கின்றன. அந்த அளவுக்கு தமிழ் வாசகர்களுக்கு காண்டேகர் பரிச்சயமானவர்.




முன் இணை யாகிய அன்றிலின்
மோகங்கொள் ஆணினைக் கொன்றனை
மன் நெடு நாள் இனி வாழ்கலை;
வாழ்கலை! வாழ்கலை! வேடனே!

வால்மீகியின் உத்தர ராமசரிதப் பாடல் இது. இப்பாடலே நாவலுக்கு ஆதாரமானது.

அப்பண்ணாவின் ஒரே புதல்வி சுலோசனா. நன்கு படித்தவள், திறமையானவள்.  அவளது இளவயது தோழன் திலீபன் எனப்படும் தினகரன். காந்திய ஈடுபாடு உள்ளவன். மக்களுக்காகவே சிந்தித்து வாழ்பவன். சுலோவின் கணவன் பகவந்தராவ் மகாராஜாவின் வைத்தியர். மகாராஜாவின் தயவில் படித்து அவரது அரண்மனை வீட்டிலேயே வாழ்கிறான். இவர்களுக்கிடையே பின்னப்பட்ட கதை கிரௌஞ்சவதம்.

காந்திய சிந்தனைகள் , காளிதாசரின் மேகதூதம் என்பவற்றையும் இடையிடையே வாசிக்க முடியும். இனிமையான வாசிப்பு அனுபவத்தை தரும் புத்தகம்.

Saturday 2 January 2016

(47) ஒசாமஅசா - சோ

ஒசாமஅசா  - ஒரு சாதாரண மனிதனின் அசாதாரண அனுபவங்கள். குமுதம் இதழில் தொடராக வந்து தொகுக்கப்பட்ட கட்டுரைகள். சோ சொல்வதை  Record  பண்ணி மணா தொகுத்திருக்கிறார். சோ இது தன்னுடைய சுயசரிதை இல்லை எனக் குறிப்பிடுகிறார். சோவுக்கு இந்தியாவின் முக்கிய நபர்கள் பலருடன் நல்ல நட்பு உள்ளது. முக்கிய நபர்களுடனான சோவின் அனுபவங்களே இத் தொகுப்பு. அவர்களில் காணப்படும் உயர்வான,  தான் பிரமிக்கும் குண இயல்புகளை குறிப்பிட்டுள்ளார். பகுதி 1 , 2 என இரு புத்தகங்கள் , மொத்தமாக கிட்டத்தட்ட 500 பக்கங்கள்.

எனக்கு ஈழம் தொடர்பான சோவின் கருத்துகளுடன் முரண்பாடுகள் உண்டு. ஆனால் அவரது திரைப்பட  நகைச்சுவைக‌ள் , எழுத்துக்கள் மிகவும் பிடிக்கும். மூப்பனார், காமராஜர் , இந்திய பிரதமர் மோடி ,  M.G.R, சிவாஜி , கருணாநிதி உட்பட அரசியலில் முக்கியமானவர்கள் , சினிமாவில் முக்கியமானவர்கள் பலரைப்பற்றி சுவையான விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார்.M.G.R இன் அரசியல் தொடர்பாக அவரது துக்ளக் பத்திரிகையில் விமர்சனம் செய்து வந்தாலும் திரைப்படங்களில் அவருடன் தொடர்ந்து நடித்திருக்கிறார்.

துக்ளக் பத்திரிகை தொடங்கப்பட்ட சம்பவத்தை சுவையாகக் குறிப்பிடுகிறார். துக்ளக்கில் பணி புரிபவர்கள் பற்றிய அறிமுகம் சிரிப்பை வரவைக்கும். சோவின்  குடும்பத்தவர்கள், நண்பர்களுடனான மறக்க முடியாத சில அனுபவங்களும்  புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன. அவரது அம்மா அவரை சோழன் பிரம்மஹத்தி என்ற பட்டப் பெயரில் அழைத்து, அதுவே பின்னர் சோழன் ஆகி  சோ  ஆகிவிட்டது என்று தனது பெயருக்கான விளக்கத்தையும் கொடுத்துள்ளார்.உயர்ந்த மனிதர்களுடனான நட்பு என்பது எல்லாருக்கும் எழிதில் கிடைப்பதில்லை. சோவுக்கு அது கிடைத்திருக்கிறது. இந்த புத்தகத்தை வாசிப்பதன் மூலம் இந்தியாவின் முக்கியஸ்தர் பலரைப்பற்றி மேலோட்டமாக அறிந்து கொள்ள முடியும்.