Wednesday 30 December 2015

(46) சொல்லொணாப்பேறு - நரசய்யா

நரசய்யா ஒரிசாவில் பிறந்தவர். இந்திய கடற்படையில் வேலை செய்தவர். இந்திய துறைமுகச் சங்கத்தின் ஆலோசகராக இருந்தவர். இப்போது சென்னையில் வசித்து வருகிறார். ஆலவாய் , கடலோடி என்பன அவரது சில முக்கிய நூல்கள் ஆகும்.


"சொல்லொணாப்பேறு" என்ற புத்தகமே நான் வாசித்த இவரது முதல் புத்தகம். இது ஒரு சிறுகதைத் தொகுப்பு. 21 சிறுகதைகள் உள்ளன.  கதைகளுக்கு வரையப்பட்ட கோட்டோவியங்கள் கதையை மேலும் அழகாக்குகின்றன‌.  அவரது  சிறு வயது அனுபவங்கள் , வேலை அனுபவங்கள் என்பவற்றை இவரது சிறுகதைகளில் காணக்கூடியதாக இருக்கிறது. காந்தி மீது அதிக ஈடுபாடு அவருக்கு இருக்க வேண்டும். அவரது கதைகளில் காந்திய சிந்தனைகளை அதிகம் காணக்கூடியதாக இருக்கின்றன. ஒரு சில கதைகள் bore ஆக இருந்தாலும் ஏனையவை வாசித்து ருசிக்க வேண்டியவை. ஒளியின் வழியில், பற்றற்று , வாழ்க நீ எம்மான் , சொல்லொணாப்பேறு ஆகிய கதைகள் மிக சிறப்பானவை.

Tuesday 22 December 2015

(45) பெய்தலும் ஓய்தலும் - வண்ணதாசன்

வண்ணதாசன் கதைகள் அழகியல் உடையவை. அவரது கதை மாந்தர்கள் கதைக்கும் வசனங்கள் அழகுணர்ச்சியுடன் அமைக்கப்பட்டிருக்கும். அப்படிக் கதைப்பவர்கள் உண்மையிலேயே இருக்கிறார்களா எனத் தெரியவில்லை. அப்படியானவர்கள் ஒரு வேளை எங்காவது இருந்தால் அவர்களுடன் பழகக் கிடைத்தவர்கள் கொடுத்து வைத்தவர்கள் என்று தான் சொல்ல வேண்டும். இந்த அவசர உலகில் இப்படி ரசித்து ரசித்துக் கதைப்பவர்கள் , வாழ்பவர்கள் இருந்தால் அவர்கள் தான் உண்மையிலேயே அதிஷ்டசாலிகள்.

 வண்ணதாசன் சிறுகதை எங்கு தொடங்கும் , எங்கு முடியும் என்று என்னால் சரியாகக் கணிக்க முடிவதில்லை. ஏதோ தலைப்பு இருப்பதால் அங்கு தானே தொடங்க வேண்டும். திடீரென்று முடிந்தது போல இருக்கும். ஆனால் இந்த இடத்தில் கதை முடிவது தான் சரியாக இருக்கும் என்றும் தோன்றும்.

சிதம்பரம் சில ரகசியங்கள் , ஒரு ஞானி ஒரு முட்டாள், பெய்தலும் ஓய்தலும் , ஒரு முயல் குட்டி இரு தேநீர் க் கோப்பைகள், அணில் நிறம் அல்லது நிறங்கள், மிகவும் முக்கியமான பார்வையாளர்கள் , தத்தளிப்பு , கூடு விட்டு , ஒருவர் இன்னொருவர் , உப்புக் கரிக்கிற சிறகுகள் , உயரம் , சிநேகிதிகள் என கதைகள் உள்ளன.  

இப்புத்தகத்தில் உள்ள கதைகள் உயிரெழுத்து, விகடன் , கல்கி , புதிய பார்வை போன்ற இதழ்களில் எழுதியவை.  அனைத்துமே சிறப்பானவை.

(44) இலக்கற்ற பயணி - எஸ். ராமகிருஷ்ணன்


 
        தமிழில் பயணக் கட்டுரைகளை    சிறப்பாக
எழுதுபவர்களாக எஸ்.ரா, ஜெயமோகனை சொல்லலாம். ஜெயமோகன் அவரது இணையத்தளத்தில்  எழுதியுள்ள பயணக்கட்டுரைகள் பலராலும் விரும்பி வாசிக்கப்படுபவை. அதே போல எஸ். ராமகிருஷ்ணனும் பயணம் தொடர்பாக நிறைய எழுதியிருக்கிறார். பயணத்தில் மிகுந்த விருப்பம் உடையவர். அவரது தேசாந்த்திரி அவ்வாறான ஒரு புத்தகம். அது மட்டும் அல்லாது அவரது கட்டுரைகளில் அவரது பயண அனுபவங்களை யும் பல வேளைகளில் இணைத்திருப்பார்.  அவரது பயண அனுபவங்களை கூறும் இன்னொரு புத்தகம் "இலக்கற்ற பயணி" .

கனடாவில் ஒன்டாரியோ, சிம்கோ ஏரிகளையும் நயகரா நீர்வீழ்ச்சியையும் பார்த்த அனுபவங்களை சுவைபட எழுதியுள்ளார். தனியாக பயண அனுபவங்களை மட்டும் எழுதாமல் அதனுடன் தொடர்பான கதைகள், சம்பவங்களை எழுதும் போது அக்கட்டுரைகள் இன்னும் அழகுறுகின்றன. திருக்கோகர்ணத்து ரதி என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையில்  முக்கிய ரதி, மன்மதன் சிலைகளைப் பற்றி எழுதியுள்ளார். நானும் இந்தியக்கோயில்களில் ரதி மன்மதன் சிலைகளைப் பார்த்திருந்தாலும் எஸ். ராமகிருஷ்ணனைப் போல இவ்வளவு நுணுக்கமாக எல்லாம் பார்க்கவில்லை. இந்த புத்தகம் வாசித்த பின் இனி நான்  பார்க்கப் போகும் சிலைகளை  அணுகும் முறை நிச்சயமாக வேறாகத்தான் இருக்கும். 

  போர்ஹே சொற்பொழிவாற்றிய இடத்திற்கு சென்றதையும் ,ஷேக்ஸ்பியரின் காலத்தில் இருந்தது போலவே விசேட அரங்கு அமைத்து நடாத்தப்படும் அவரது நாடக‌த்தை கனடாவில் பார்த்ததையும் பற்றிய இரு கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.  எஸ்.ராவுக்கு சிலப்பதிகாரத்தில் நிறைய ஈடுபாடு இருக்கிறது .கண்ணகி நடந்த பாதையில் நடந்த அனுபவத்தை "கொற்கையில் கடல் இல்லை" என்ற கட்டுரையில் எழுதியுள்ளார். கபிலர் , மருதனார் பற்றிய கட்டுரை அருமையான ஒன்று. அடுத்த தடவை இந்தியா போகும் போது கபிலர் குன்று பார்க்க வேண்டும்.

பழையகாலத்தில் தமிழ் மரபில் இருந்த நவகண்டம் என்ற முறை பற்றி ஒரு கட்டுரை உள்ளது.  நவகண்டம் என்பது தன் தலையை தானே அறுத்து பலி கொடுக்கும் நிகழ்வு ஆகும். ஜெயமோகனும் இது பற்றி எழுதியுள்ளார்.

தனுஷ்கோடி , கோடைக்கானல் , ஸ்ரீரங்கப்பட்டின ஆறு, தயா ஆறு, ஹம்பி  பற்றிய கட்டுரைகளும் வாசிக்க இன்பம் தருவன. கூட்ஸ் வண்டிப் பயண அனுபவமும் லொறியில் (3000 km ) பயணம் செய்த அனுபவங்களும் நாமும் அவருடன் கூடவே பயணம் செய்த அனுபவத்தை தருகின்றன. மீண்டும் ஒரு தடவை வாசிக்க வேண்டும்.

Wednesday 16 December 2015

(43) உயரப்பறத்தல் - வண்ணதாசன்

வண்ணதாசனின் சிறுகதைத் தொகுப்பு. இதுவே நான் வாசித்த முதல் வண்ணதாசன் புத்தகம். அவரை மேலும் படிக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டி விட்டது இந்த புத்தகம். "சிறுகதை என்றாலே கதை இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்" என்று அண்மையில் வாசித்த வரி எனக்கு வாசிப்பின் புதிய கோணத்தைக் காட்டியிருக்கிறது. நானும் சிறுகதை என்றால் அதில் கதை என்ன என்று தேடியே  வாசித்திருக்கிறேன். கதை என்று பெரிதாக எதுவும் இல்லாமல் மனதில் நெகிழ்ச்சியூட்டும் விதமாக சிறுகதை இருக்க முடியும் என்று இப்புத்தகத்தை வாசிக்கும் போது தெரிந்தது. என்ன ஒரு நுணுக்கமான சித்தரிப்புகள். அப்படியே மனதில் பதிந்து போகக்கூடியவை.

நாம் வாழ்க்கையை இப்படியெல்லாம் ரசிக்கவில்லையே என எண்ண வைக்கும் படி வர்ணனைகளை அமைத்திருக்கிறார். கதைகளை வாசிக்கும்போது நானும் மாறிவிடுவது போல தோன்றுகிறது. அவர் வாழை மரத்தை தொட்டு பார்க்க வேண்டும் என்று எழுதியதை வாசிக்கும் போது எமக்கும் தொட வேண்டும் என்ற ஆசையை அவர் எழுத்துக்கள் கொண்டுவந்துவிடுகின்றன. மொத்தமாக 17 கதைகள். எல்லாமே சிறப்பானவை தான்.

(42) அபிதா - லா.ச.ரா

இலக்கிய வாசிப்பினுள்  நுழைந்த ஆரம்ப நாட்களிலேயே "அபிதா" என்ற பெயர் அறிமுகமாகிவிட்டிருந்தது. இருந்த போதும் இப்போது தான் வாசிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது. அபிதகுசாம்பாள் என்றால் உண்ணாமுலையம்மன். அபிதா - உண்ணா, அதிலிருந்து அபிதா என்றால் ஸ்பரிசிக்க இயலாத என்ற அர்த்தத்தை  தானே எடுத்ததாக லா.ச.ரா (லால்குடி சப்தரிஷி ராமாமிர்தம்) குறிப்பிடுகிறார். ஒரு ஆணின் (அம்பி)  வாழ்க்கையில் ஒன்றித்துப்போன மூன்று பெண்களைப் பற்றியே நாவல் பேசுகிறது.



சாவித்திரி-மனைவி, பணக்கார வீட்டு பெண். பணத்தையும் கொடுத்து பெண்ணையும் கொடுக்கிறார் சாவித்திரியின் அப்பா.

சகுந்தலை - சிறுவயது சிநேகிதி , கரடி மலையில், அவனது ஊரில் வாழ்ந்த காலத்தில் சகுந்தலையின் குடும்பத்துடன் நெருக்கமாக இருந்திருக்கிறான்.

அபிதா - சகுந்தலையின் மகள். நீண்ட நாட்களுக்கு பின் கரடி மலைக்கு வரும் அவன் சகுந்தலை இறந்துவிட்டதை அறிகிறான். அபிதாவில் சகுந்தலையை காண முயல்கிறான்.

பலரும் சொல்வது போல லா.ச.ராவின் நடை கவித்துவம் உள்ளது என்பதை வாசிக்கும் போது உணரக்கூடியதாக இருந்தது. மீள் வாசிப்பின் போது வேறுவிதமான அனுபவத்தை தரக்கூடியது என்றும் சொல்கிறார்கள். எனது முதல் வாசிப்பில் சில இடங்கள் வாசிக்க அயர்ச்சி தருவதாக இருந்தது. சில இடங்கள் கவித்துவம் மிக்கவையாக இருந்தது. அம்பி என்ற பாத்திரத்தை மையப்படுத்தியே கதை நகர்கிறது. மகள் போன்ற உறவுமுறை உடைய அபிதாவை சக்கு என்னும் சகுந்தலையாகவே அம்பி பார்க்கிறான். அம்பியின் மனவோட்டத்தையே நாவல் சித்தரிக்கிறது.

நாவல் அபிதா இறப்பதுடன்  முடிவடைகிறது .

 ‘‘அர்ச்சனையில், அர்ச்சகன் கையினின்று ஆண்டவன் பாதகமலங்களை நோக்கிப் புறப்பட்ட மலர்போல் அபிதா மலைமேல் திருவேலநாதர் சன்னதி நோக்கி ஏறும் படிக்கட்டின் - ஒன்று, இரண்டு, மூன்றாவது படிமேல் உதிர்ந்து மலர்ந்தாள்.
இப்போ கூட அவளைத் தொட ஏன் தோன்றவில்லை.
 மரத்திலிருந்து பொன்ன‌ரளி ஒன்று நேரே அவள் மார் மேல் உதிர்ந்தது.
 சற்று எட்ட மோட்டார் சைக்கிள் பற்றி எரிந்து கொண்டிருந்தது".
என நாவல் முடிவடைகிறது.

அபிதா ஸ்பரிசிக்க இயலாதவள்.

Sunday 13 December 2015

(41) நண்டு - சிவசங்கரி

நண்டு மணலில் குறித்த ஒரு இடத்தினூடாக தலையை நீட்டும் நண்டைப் பிடிக்க முயல்கையில் அது உட் சென்று வேறு ஒரு இடத்தினூடாக எட்டிப்பார்க்கும். அதைப்பிடிக்க சுற்றியுள்ள பிரதேசத்தை அப்படியே அகழ்ந்து எடுக்க வேண்டும். சில வேளைகளில் அப்போது கூட அகப்படாமல் போய்விடும். அதன் வளையானது சிக்கல் தன்மையுடையது. நண்டு எவ்வாறு மணலில் வளைகளை உருவாக்கி அகப்பட முடியாமல் வாழ்கிறதோ அதே தன்மையைப் புற்று நோயும் கொண்டுள்ளது.   இதனால் தான் புற்று நோய்க்கான சின்னமாக நண்டு வைக்கப்பட்டுள்ளது. நண்டு இலத்தின் மொழியில் cancer என்று குறிப்பிடப்படுகிறது.


தற்காலத்தில் இலங்கையில் புற்று நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது. கிருமி நாசினி அதிகம் பாவிக்கப்பட்ட மரக்கறிகள் , யுத்தத்தின் போது பாவிக்கப்பட்ட த‌டை செய்யப்பட்ட ஆயுதங்கள் என பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.
"நண்டு" நாவலும் அவ்வாறான நோயின் கொடூரத்தை விபரிக்கும் ஒரு நாவல். சீதா என்ற பெண்ணின் வாழ்க்கையைப் பற்றியும் அவளது வட நாட்டு கணவன் ராம்குமாரின் அன்பு, அன்பான நண்பி சுமித்திரா , சுய நலம் மிக்க அக்கா கணவர் மூர்த்திக்கு இடையில் கதை பின்னப்பட்டுள்ளது. மார்பகப்புற்று நோயால் பாதிக்கப்படும் சீதாவின் கதையூடாக நோயின் கொடூரம் , சுற்றியுள்ளவர்கள் அதனால் எவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள், அதற்கான சிகிச்சை என்பன பற்றி எழுதப்பட்டுள்ளது. நோயைப்பற்றி ஒருவிதமான பயத்தை, சிறிய விழிப்புணர்வை உருவாக்குமாறு நாவல் எழுதப்பட்டுள்ளது.

(40) நஞ்சென்றும் அமுதென்றும் ஒன்று - நாஞ்சில் நாடன்

எழுத்தாளர் நாஞ்சில்நாடனின் கட்டுரைத்தொகுப்பு.

நாஞ்சில் நாடனுக்கு சுந்தர ராமசாமி, நகுலன் போன்றவர்களுடன் இருந்த நெருக்கத்தை பற்றி சிறப்பான இரு கட்டுரைகள் இப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன. சுந்தரராமசாமி தனது நாவலான "தலைகீழ் விகிதங்கள்" இற்கு மதிப்புரை எழுதியது பற்றியும் நாஞ்சில் நாடனுக்கும் நீல. பத்மநாபனுக்கும் பொதுவான குணங்களைக் குறிப்பிட்டது பற்றியும் சுவையாக எழுதியுள்ளார். வண்ணதாசன் பற்றிய கட்டுரையில் அவரது கதைகள் அன்பு பற்றியதாக அமைக்கப்பட்டுள்ளதாக கூறி அவர் சிறுகதைகளின் சிறப்புக்கள், அவற்றின் மீது கூறப்படும் விமர்சனங்கள் பற்றியும் குறிப்பிட்டுளார்.

தனது எழுத்துக்கள், சிறுகதைகள், நாவல்கள் என்பவற்றின் பின்புலங்களைப் பற்றி சில கட்டுரைகள் எழுதியுள்ளார். அவரது எழுத்துக்கள் நாஞ்சில் வட்டார வழக்கில் இருப்பதால் வாசிக்க கடினமானது என‌ விமர்சிப்பவர்கள் உண்டு. அது தொடர்பான தனது கருத்துக்களைத் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.

மது தொடர்பாக எழுதப்பட்ட  "நஞ்சென்றும் அமுதென்றும் ஒன்று" என்ற கட்டுரை வாசிப்பவர்களுக்கு புன்னகையையும் அதே நேரத்தில் கவலையையும் தரக்கூடியது. அத்துடன் சுவடு, வன்மம், நீலகிரி அடுகுகளில் மூன்று நாட்கள்  என மொத்தமாக 17 கட்டுரைகள் உள்ளன.

Thursday 27 August 2015

(39) இலக்கிய விசாரங்கள் - க. நா. சு கட்டுரைகள் - 1

தொகுப்பாசிரியர் : காவ்யா சண்முகசுந்தரம்

" நடேச சாஸ்திரி தன‌து தீனதயாளு தான் தமிழில் முதல் நாவல் என்று கூறுகிறார். மற்ற முயற்சிகள் பற்றி அவருக்கு தெரியவே தெரியாதோ அல்லது தெரிந்திருக்கும் அதெல்லாம் அப்படியொன்றும் முக்கியமானவை அல்ல என்று எண்ணி இப்படி எழுதியிருப்பாரோ."

 இப்போது உள்ள வேலைப்பளு கூடிய நிலையில் 896 பக்கங்கள் உடைய இந்த புத்தகத்தை வாசித்து முடிப்பேனா என்ற சந்தேகத்தோடு தட்டிய போது மேற்சொன்ன வரியை தற்செயலாக வாசிக்க நேர்ந்தது. அவ்வரி ஒரு விதமான கவர்ச்சியை தந்ததால் நூலகத்தில் இருந்து எடுத்து வந்தேன். நிச்சயமாக பயனுள்ள புத்தகம் தான். தமிழின் முதல் ஐந்து நாவல்கள் பற்றி க. நா. சு எழுதியவற்றை வாசித்தபோது கட்டாயம் அந்த நாவல்களைப் படிக்க வேண்டும் என்று குறித்துக்கொண்டேன்.

அவரது கட்டுரைகள் வாசிப்பதற்கு மிகவும் சுவாரசியமானவை. இப்புத்தகத்தில் 25 தமிழ் நாவல்கள் , 11 இந்திய நாவல்கள், 63 உலக நாவல்கள் பற்றி க. நா. சு எழுதியவை இடம்பெற்றுள்ளன.  படித்திருக்கிறீர்களா? என்ற தலைப்பில் எழுதிய கட்டுரைகளும் இதில் உள்ளடக்கம்.

தமிழின் முதல் 5 நாவல்களான வேத நாயகம்பிள்ளையின் பிரதாப முதலியார் சரித்திரம் , ராஜமையரின் கமலாம்பாள் சரித்திரம் , அ.மாதவையாவின் பத்மாவதி சரித்திரம் , ச.ம. நடேச சாஸ்திரியின் தீனதயாளு  தி.ம.பொன்னுசாமிப்பிள்ளையின் கமலாஷி என்பவற்றை பற்றி சற்று விரிவாகவே எழுதியுள்ளார்.  சிரித்துக்கொண்டே வாசிக்க  வைக்கும் எழுத்து நடை க. நா.சு உடையது. இவரது நாவல்களும் இப்படித்தான் இருக்குமோ என்னவோ. இவை தவிர 20 தமிழ்ப் புத்தகங்கள் பற்றி இவர் எழுதியவையும் இருக்கின்றன.

சுந்தரி - வ.ரா
அணையாவிளக்கு - ஆர்வி
மேனகா - வடுவூர் துரைசாமி ஐயங்கார்
கேட்ட வரம் - அநுத்தமா
ராஜாம்பாள் - ஜே.ஆர் .ரங்கராஜு
சிநேகிதி - அகிலன்
பொய்த்தேவு - க. நா.சுப்ரமணியம்
இதய நாதம் - ந.சிதம்பர சுப்ரமணியம்
மண்ணாசை - சங்கரராம்
கரித்துண்டு - மு.வரதராசன்
நாகம்மாள் - ஆர்.சண்முக சுந்தரம்
ஜடாவல்லவர் - அ.சுப்ரமணிய பாரதி
சத்தியமேவ - கிருத்திகா
நித்யகன்னி - எம்.வி. வெங்கட்ராமன்
பெண் இனம் - சங்கரராம்
புத்தம் வீடு - ஹெப்சிபா ஜேசுதாசன்
உன்னைப் போல் ஒருவன் - ஜெயகாந்தன்
புத்ர - லா.ச.ரா
மோகமுள் - தி.ஜானகிராமன்
நைவேத்யம் - பூமணி

இந்திய நாவல்களில் பஷீரின்  உப்பப்பாவுக்கு ஒரு ஆனை இருந்தது , சிவராம் காரந்த்தின் மண்ணும் மனிதர்களும் உட்பட 11 நாவல்களைப் பற்றி எழுதியுள்ளார். உலக நாவல்கள் வரிசையில் 63 நாவல்களைப்பற்றி எழுதியுள்ளார். 

Tuesday 11 August 2015

(38) விசும்பு - ஜெயமோகன்


எனக்கு தெரிந்து தமிழில் அறிவியல் கதைகள் எழுதுபவர் எழுத்தாளர் சுஜாதா தான்.  அறிவியல் புனைகதைகள் எனும் போது விண்வெளி , இயந்திர மனிதர் , வேற்றுக்கிரக வாசிகள் போன்றவையே  நினைவுக்கு வருவது சுஜாதாவின் தாக்கமாக இருக்கலாம்.


ஜெயமோகன் நமது பண்பாடு , ரசவாதம் , சித்த மருத்துவம் தொடர்பாக அறிவியல் கதை எழுதியிருக்கிறார் என்று தெரிந்த போது வாசிக்க வேண்டும் என நினைத்தேன். அண்மையில் தான் அதற்கான சந்தர்ப்பம் கிடைத்தது. நிச்சயமாக புதுவித அனுபவமாக இருந்தது. அத்துடன் இக்கதைகள் நகைச்சுவை உணர்வு மிக்கதாகவும் இருக்கின்றன. பல இடங்களில் சிரிப்பை கட்டுப்படுத்தவே முடியவில்லை.


ஐந்தாவது மருந்து
 எயிட்ஸ் இற்கு மருந்து கண்டுபிடித்த தளவாய் ராஜாவை பார்க்க அவனது நண்பர்  இருவர் அவனது ஊருக்கு வருகின்றனர். அவர்களுக்கு இடையே நடை பெறும் உரையாடலாக கதை அமைக்கப்பட்டுள்ளது. பரிணாமக்கொள்கை , சித்த மருந்து , சுவடிகள் , வரலாற்றில்  இதே அறிகுறி உடைய நோய் பற்றிய தகவல் என கதை அவ்வளவு நன்றாக இருக்கும்.

இங்கே , இங்கேயே..
வேற்றுக்கிரக வாசிகள் பூமிக்கு வருகிறார்கள். அவர்களது  வாகனத்தின்தடம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது என நம்பப்படும் கதைகளின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. கல்லன்மலை உச்சியில் உள்ள தடம் விண்வெளி ஊர்தியின் தடமாக இருக்க வேண்டும் என நம்புகிறார்  நாராயணன் .  இல்லை அது அவ்வாறு இருக்க முடியாது என பத்மநாபன் கூறும் காரணங்கள்  விஞ்ஞான ரீதியானவை.

விசும்பு
இது பறவைகள் வலசை போவது பற்றிய கதை. எனக்கு மிகவும் பிடித்த கதைகளில் இதுவும் ஒன்று. பறவைகள் வலசை போவது பற்றி மேலும் அறிய வேண்டும் என்ற ஆவலையும் இக்கதை தரும்.  நஞ்சுண்டராவ் , அவரது மனைவி , அவரது தந்தை கருணாகரராவ் எல்லோரும் interesting characters.

பித்தம் -
இது ரசவாதம் தொடர்பான கதை. சில சித்தர்கள் இக்கலை பற்றி தெரிந்து வைத்திருந்தார்கள் என நம்பப்படுகிற‌து. செம்பை  தங்கமாக்கும்  முயற்சி இன்றும் பலர் செய்துபார்க்கிறார்கள்.

உற்று நோக்கும் பறவை:
இக்கதையை வாசித்த போது துவாத்மர்கள் என்பவர்கள் உண்மையில் இருந்தவர்கள் தான் என நான் நம்பி இணையத்தில் தேடினேன். ஜெயமோகன் ஒரு வாசகருக்கு எழுதிய பதி  கடிதத்தில் அது கற்பனையாது எனக் கூறியிருந்தார். இது உளவியல் , மனப்பிளவு தொடர்பான கதை.

 மூளையின் இயக்கம்  தொடர்பான பூர்ணம்  மற்றும் நாக்கு , நம்பிக்கையாளன் போன்ற கதைகளும் இத்தொகுப்பில் உள்ளன. கடைசி இரு கதைகளும் பேச்சு வடிவில் அமைக்கப்பட்டுள்ளன.  "குரல்" என்ற கடைசி பேச்சு வடிவ சிறுகதை என்னைப் பொறுத்தவரை சிறந்த நகைச்சுவை கதையாகவும் இருந்தது.

எழுத்தாளர் விசும்பு , அறம் போன்ற கதைகளையும் என் போன்ற ஆரம்ப நிலை வாசகர்களுக்காக இடைக்கிடை எழுதினால் பலர் பயன் பெறுவார்கள்.


Wednesday 5 August 2015

(37) ராயர் காப்பி கிளப் - இரா. முருகன்

 இலக்கியத்துக்காக தொடக்கப்பட்ட இணையக் குழு "ராயர் காப்பி கிளப்"  இல்  இரா. முருகனால் எழுதப்பட்டவற்றை உள்ளடக்கிய புத்தகம். வாசிப்பதற்கு இலகுவான நடையைக் கொண்டது.   எழுத்தாளர் தனது அனுபவங்களை  எழுதியிருக்கிறார். 

தினமணி இசைமலரின் சிறப்பை பற்றி எழுதியுள்ளார்.  கிட்லருக்காக படம் இயக்கிய  நடிகை , இயக்குனர்  லெனி சந்தித்த பிரச்சினைகள்   , ஈழ எழுத்தாளர் குந்தவையின் கதைகள் ,  கமலஹாசனை சிறுவயதில் பார்த்த‌ அனுபவம் , ஜோதிடம் பற்றிய நக்கல்கள் என மொத்தமாக 32 தலைப்புகளில் புத்தகம் உருவாக்கப்பட்டிருக்கிறது. "நிச்சயம் இந்தியா தான் ஜெயிக்கும் " என்ற தலைப்பில் எழுதப்பட்டவை கிறிக்கட் தவிர வேறு சிந்தனை அற்ற இன்றைய மக்களை நையாண்டி பண்ணுவதாக அமைகிறது. 

Sunday 2 August 2015

(36) மெலூஹாவின் அமரர்கள் - Amish Tripathi

The Immortals of Meluha

தமிழ் மொழிபெயர்ப்பு : பவித்ரா ஸ்ரீநிவாசன்


 இந்துக்களின் கடவுளான சிவன் ஒரு மனிதனாக இருந்து கடவுளாக்கப்பட்ட ஒருவராக இருந்திருந்தால்....  என்ற கற்பனையை வைத்து உருவாக்கப்பட்ட கதை தான் "மெலூஹாவின் அமரர்கள்" . சிவா, அவர் மனைவி சதி, சதியின் தந்தை அரசன் தக்க்ஷன், வீரபத்ரர், நந்தி  என பலரும்  கதா பாத்திரங்களாக்கப்பட்டுள்ளனர்.

 மெலூஹா என்ற சிறப்பு வாய்ந்த நகரத்திற்கு சிவாவை நந்தி அழைத்து வருகிறார். மெலூஹாவில் மந்திர மலையை பயன்படுத்தி தயாரிக்கப்படும் சோமபானம் அருந்தியவுடன் சிவாவின் கழுத்து நீல நிறமாகிவிட அவரே தமது தலைவர் என மெலூஹாக்கள் கூறுகின்றனர். மெலூகா மக்கள் சூரிய வம்சத்தை சேர்ந்தவர்கள். இராம பிரான் வகுத்த சட்டங்களைப் பின்பற்றி வாழ்கின்றனர். அவர்களுக்கும் சந்திர வம்சத்தினருக்கும் பகை. சிவன் தலைமையில் சந்திர வம்சத்தினருடன் மிகப்பெரும் போர் நடை பெறுகிறது. சந்திர வம்சத்தவர்களை சிவா தலைமயிலான படை வென்றுவிட சிவா அவர்களது தலை நகர் அயோத்தி செல்கிறார். சந்திர வம்சத்தை சேர்ந்தவர்கள் கெட்டவர்கள் இல்லை என்ற விடயம் சிவனுக்கு மெல்ல மெல்ல புரிய ஆரம்பிக்கிறது. அவர்கள் அன்பானவர்களாகவும் சுதந்திரமானவர்களாகவும் இருக்கின்றனர். அவர்களும் நீலகண்டருக்காக காத்திருப்பது சிவனுக்கு தெரிய வருகிறது.சிவனுக்கு எல்லாமே குழப்பமாகிவிடுகிறது. பண்டிதர் ஒருவர் அவரது குழப்பங்களை தீர்க்கிறார்.

சிவன் ஒரு மனிதனைப் போல நடனமாடுகிறார். சதியைக் காதலிக்கிறார். திருமணம் செய்கிறார். போர் செய்கிறார்  . தனது கழுத்து நீல நிறமாகியதற்கு விஞ்ஞான ரீதியான காரணம் இருக்கிறது என்று நம்புகிறார். அதற்கு மேலாக புகை ப் பிடிக்கிறார்.  பாண்டிய மன்னர்களைப் பற்றியும் புத்தகத்தில் வருகிறது. பண்டிதர் என்ற சொல் பாண்டியர் என்றதிலிருந்து தான் வந்திருக்க வேண்டும் என்று எழுத்தாள்ர் கூறுகிறார். முதல் பாகமான இந்த புத்தகத்தில் நாகர்கள் பற்றிய மர்மம் தீரவில்லை. அடுத்த புத்தகம் The Secret of the Nagas  தானே.

கி.மு 1900 இல் நடைபெறும் கதை என குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த காலத்திலேயே சிறப்பான, வசதியுடைய நகரமாகத்தான் மெலூஹா இருக்கிறது. கதைக்கும் மொழி இன்றைய திரைப்பட  பாணியிலான ஒரு வகை மொழியாக காணப்படுகிறது. மொழிபெயர்ப்பில் பிரச்சினையா அல்லது  ஆங்கிலத்திலும் இதே பாணியில் தான் அமைந்திருக்கிறதா என தெரியவில்லை. கல்கியின் பொன்னியின் செல்வன் வாசித்தவர்களுக்கு" மெலூஹாவின் அமரர்கள்" சிறந்த புத்தகமாக தோன்றுமா என தெரியவில்லை.  என்னைப் பொறுத்த வரை , பொன்னியின் செல்வனுக்கு பின் சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு வாசிக்க பேரார்வம் வந்தது போல‌  இந்த புத்தகத்திற்கு வரவில்லை.  இந்த எழுத்துகளில் ஏதோ ஒன்று missing.

 Amish Tripathi யின்  The Immortals of Meluha, The Secret of the Nagas , The Oath of the Vayuputras ஆகிய மூன்று புத்தகங்களும் சிவா முத்தொகுதி ( Shiva trilogy)  என  குறிப்பிடப்படுகின்றன.  இந்தியாவில் விற்பனையில் ஒரு புரட்சியை ஏற்படுத்திய  புத்தகங்களாக கருதப்படுகின்றன. "மெலூஹாவின் அமரர்கள்" வெற்றியைத்தொடர்ந்து  Amish Tripathi  " The Secret of the Nagas"   "The Oath of the Vayuputras" ஆகிய புத்தகங்களை எழுதினார். மூன்று புத்தகங்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை.