Saturday 16 August 2014

(33) யாழ்ப்பாணக் கோட்டை வரலாறு - செங்கை ஆழியான்

  புத்தகம் போர்த்துக்கேயர் காலம், ஒல்லாந்தர் காலம், ஆங்கிலேயர் காலம், ஈழயுத்தம் 1, ஈழயுத்தம் 2 என ஐந்து பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

1621  போர்த்துக்கேயர் சங்கிலி செகராசசேகரனை தோற்கடித்து யாழ்ப்பாணத்தை கைப்பற்றிக்கொள்கிறார்கள். இதற்கு கப்பித்தான்மேஜர் பிலிப் தே ஒலிவேறா தலைமை தாங்கினான். இன்று முத்திரைச்சந்தியில் தேவாலயம் இருக்கும் இடத்தில் இருந்த பழைய நல்லூர் கோயிலை தரைமட்டமாக்கினான். ஒலிவேறா  யாழ்ப்பாணத்தை கைப்பற்றிய போதும் தொடர்ந்து கிளர்ச்சிகள் நடைபெற்றன. இதனால் தமது பாதுகாப்பு கருதி கோட்டை அமைப்பது என முடிவு செய்து யாழ்கட‌லுக்கு அண்மையான இடத்தை தெரிவு செய்தான். அவன் அமைத்த கோட்டை சதுர வடிவிலானது. கோயிலை உடைத்ததால் பெறப்பட்ட கற்கள் இதற்கு பய‌ன்படுத்தப்பட்டன.

1658 இல் ஒல்லாந்தர் யாழ்ப்பாணத்தை கைப்பற்ற முயற்சிகளை மேற்கொண்டனர். இதற்கு கொமுசாறி வன்ஹூன்ஸ் என்பவன் தலைமை தாங்கினான். கோட்டையை சுற்றிவளைத்து உணவுப்ப்ரச்சினையை ஏற்படுத்தி அதன் பின்னரே யுத்தம் நடைபெற்றது. சரணடைந்த போர்த்துகேயரை எந்த பொருட்களும் எடுத்துச்செல்ல விடவில்லை. அவர்களை கோவாவிற்கும் பத்தேயாவிற்கும் அனுப்பினார்கள். 1662 இல் வன்ஹூன்ஸ் இலங்கை முழுவதற்கும் ஆளுனராக வந்தான்.  இவன் காலத்தில் டொன்லூயிஸ் (இவன் தான் பூதத்தம்பி எனவும் சொல்பவர்கள் உண்டு) என்பவன் தலைமையில் ஒல்லாந்தருக்கு எதிராக நடைபெறவிருந்த சதித்திட்டம் முறியடிக்கப்பட்டது. ஒல்லந்தர் யாழ்கோட்டையை மீளப்புதுப்பித்து கடினார்கள். இது ஐங்கோண வடிவில் அமைக்கப்பட்டது. இதை  1680 இல் கட்டி முடித்தனர். 1792 இல் கோட்டையின் வெளியமைப்பு கட்டி முடிக்கப்பட்டது.  கீழைத்தேசத்தில் உள்ள கோட்டைகளில் யாழ் கோட்டை யே மிகப் பலமானதும் பாதுகாப்பானதும் என சொல்லப்படுகிறது.

 1795 செப்ரெம்பர்  28 இல் கோட்டை ஆங்கிலேயர் வசமானது. ஒல்லாந்தர் கோட்டையை கட்டி முடித்து மூன்று வருடத்தில் இது நடந்திருக்கிறது. ஸ்ரூவார்ட் தலைமையில் ஆங்கிலேயர் முன்னேறி ஒல்லாந்தரை சரணடையுமாறு செய்தி அனுப்பினார்கள். ஒல்லாந்தர் போர்த்துக்கேயருக்கு செய்தது போல் செய்யவில்லை. அவர்களது உடமைகளுடன் யுத்தக்கைதிகளாக இந்தியா அனுப்பி வைக்கப்பட்டார்கள். அதிலிருந்து 1948 வரை யாழ் கோட்டை ஆங்கிலேயர் வசம் இருந்தது.இதன் பின் ஈழ யுத்தம் இரு தடவைக‌ள் கோட்டையை மையமாக வைத்து நடைபெற்றது. யாழ் கோட்டையை மையமாக வைத்து நான்கு போர்கள் நடைபெற்றுள்ளன.

யாழ் கோட்டையின் வரலாற்றை அறிய வாசிக்க வேண்டிய புத்தகம் இது. ஒல்லாந்தர் கட்டிய கோட்டையின் அமைப்பு விரிவாக விபரிக்கப்பட்டுள்ளது.


(32) உள்ளேயிருந்து சில குரல்கள் - கோபிகிருஷ்ணன்

   முதுநிலை உளவியல் படித்த ரவீந்திரனும் ஸ்டெல்லாவும் மனநோயாளிகளைப் பற்றி தெரிந்துகொள்வதில் இருக்கும் ஆர்வம் காரணமாக வாரம் ஒரு தடவை மன நலக்காப்பகத்திற்கு சென்று மன நோயாளிகளிடம் கலந்து பேசுவது என முடிவு செய்கிறார்கள். மன நோய் பற்றிய சமூகத்தின் தவறான புரிதலை களையும் பொருட்டு அந்த  மனநல காப்பகத்தில் சந்தித்த மனநோயாளிகளின் விவரங்களை பதிவு செய்கிறார்கள். அது தான் இப்படைப்பு. 19 காட்சிகளும் 59 மன நிலைகளும் இன்னும் தொடரும் பழமை எனும் தலைப்பில் 6 பதிவும் சில செய்திகள், சிந்தனைகள் எனும் தலைப்பில் 8 பதிவும் என பிரிக்கப்பட்டு எழுதப்பட்டிருக்கிறது.

 இதில் பலவற்றை படிக்கும் போது எனக்கும் இதைப் போன்ற சில குணங்கள் இருக்கிறதே என யோசிக்க வைத்தது. பொதுவாக அனைவருக்கு இருக்கும் பிரச்சினை பயம் தான். பலருக்கு அதில் தான் மன நோய் ஆரம்பித்திருக்கிற‌து.
பலர்  பீடி, கஞ்சா பழக்கம் உள்ளவர்களாக இருக்கிறார்கள். மனைவி மேல் சந்தேகம் வந்து  அதனால் மன நிலை பாதிக்கப்பட்டவர்களும் இருக்கிறார்கள். பக்தி கூடுவதால் அம்மன் வருதலும்  மனச்சிதைவின் அறிகுறி என்கிறார். ஊரில எல்லோரும் தன்னைப் பற்றி தவறாக கதைக்கிறார்கள் என்கிறார் ஒருவர். ஒருவருக்கு காதில் ஒரு குரல் கேட்ட வண்ணம் இருக்கிற‌து.

 இந்த புத்தகத்தில் உள்ள சிறுகதை ஒன்று நிறையவே யோசிக்க வைத்தது.  ரோட்டில் ஒருவர் இரண்டு ரூபாய் கடன் கேட்பதிலிருந்து அவருடன் பழக்கம் தொடங்குகிறது. அந்த நேரத்தில் அவர் வித்தியாசமாக தெரியவில்லை. ஆனால் அதன் பிறகான சந்திப்பில் அவர் மன நிலை பாதிக்கப்பட்டவர் என புரிந்து விடுகிறது. அவருடன் யாரும் இல்லை என்பதால் அவருடன் அக்கறையாக நடந்து கொள்கிறார். வீட்டிற்கு கூட்டிச்சென்று சாப்பாடு கொடுக்கிறார். இரு நாள் வேலைக்கு விடுப்பு எடுத்து அவரை மன நல‌க்காப்பகத்தில் சேர்த்தும் விடுகிறார். எல்லாம் முடிந்து வீட்டிற்கு வந்த பிறகு, தான் செய்தது சரி தானா என்ற சந்தேகம் வருகிறது. சுதந்திரமாக வீதியில் நடமாடி சந்தோசமாக இருந்தவரை சிகிச்சை என்ற பெயரில் துன்பத்தில் தள்ளிவிட்டோமோ என நினைப்பதோடு கதை முடிகிறது. மன நலக் காப்பகத்தில் சிகிச்சைகள் மோசமான நிலையிலேயே பெரும்பாலும் இருக்கிறது.

   இந்த புத்தகத்தை நாவல் என்று சொல்வதா அல்லது சிறுகதை என்று சொல்வதா என தெரியவில்லை. எழுத்தாள‌ர் படைப்பு என்று குறிப்பிடுகிறார். ஒரு சிறந்த புத்தகத்தை வாசித்த திருப்தி கிடைத்துள்ளது. எல்லோரும் வாசிக்க வேண்டிய புத்தகமும் கூட.

Thursday 14 August 2014

(31) கடலில் ஒரு துளி - இந்திரா பார்த்தசாரதி

      
  இந்திரா பார்த்தசாரதி இந்தியாவின் உயர்ந்த  இலக்கிய விருதுகளில் ஒன்றான சாகித்ய அகாதமி விருதை  'குருதிப்புனல்' என்ற நாவலுக்காகப் பெற்றுக்கொண்டவர். 'கடலில் ஒரு துளி 'எனும் இப்புத்தகம் ஒரு கட்டுரைத் தொகுதி ஆகும். தமிழ் இலக்கியம், இந்திய இலக்கியம், உலக இலக்கியம், அரசியல்-சமூகம், நாடகம் என ஐந்து தலைப்புகளில் மொத்தமாக 42 கட்டுரைகள் கொண்ட தொகுப்பு.

 தமிழ் இலக்கியம் எனும் முன் பகுதியில் திருப்பாவை, திருக்குறள், கலித்தொகை என தமிழின் தொன்மையான நூல்கள் சிலவற்றைப் பற்றி எழுதியுள்ளார். தமிழில் அருமையான புத்தகங்கள் நிறைய உள்ளன என்பது இப்படியான புத்தகங்கள் வாசிக்கும் போது நினைவில் வரும். முதலில் வாசிப்பதற்கு சுலபமான திருப்பாவையையாவது படிக்க வேண்டும்.   

அரவிந்த் அடிகாவின் (The White tiger ) என்ற நாவலுக்கு புக்கர் பரிசு கிடைத்ததையொட்டி எழுதிய விமர்சனத்தில், இந்த நூலைப் படித்த போது தனக்கு 'Mother India' என்ற நூல் தான் நினைவுக்கு வந்ததாகவும் காந்தி 'Mother India' வை 'A sanitary inspector's report' என விமர்சனம் செய்ததாகவும் எழுதியுள்ளார். அரசியல்-சமூகம் சார்ந்த பகுதியில் எழுதியுள்ள விடயங்கள் முக்கியமானவை. இலங்கைத்தமிழர் பிரச்சினை பற்றியும் எழுதத் தவறவில்லை. மொழிக்காக பிரிந்த முதல் நாடு பங்களாதேஷ் என்பது எனக்கு புதிய‌ செய்தி. 

Friday 8 August 2014

(30) சினிமாவுக்கு போன சித்தாளு - ஜெயகாந்தன்

       ஜெயகாந்தனின்  'ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்' வாசிக்க வேண்டும் என்ற எண்ணம் சில நாட்களாக இருந்தது. அதனால் நூலகம் சென்று தேடினேன். ஜெயகாந்தனின் புத்தகங்களில் ' ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்' மட்டும் அங்கு இருக்கவில்லை. அதனால் அவரின் வேறு ஏதாவது புத்தகம் வாசிப்போம் என நினைத்து நான் தேர்வு செய்தது 'சினிமாவுக்கு போன சித்தாளு' எனும் குறு நாவலை.

சினிமா மீதான மோகம் எப்படியெல்லாம் வாழ்வை சீரழிக்கிறது என்பது தான் கதை. நாவலை மெட்ராஸ் பாஷையில் எழுதியிருப்பார். வாசிக்க தொடங்கி சிறிது நேரத்தில் மொழி பிடிபட  நாவல் விறுவிறுப்பாக செல்கிறது.  செல்லமுத்துவின் மனைவி கம்சலைக்கு வாத்தியார் படம் என்றால் அப்பிடி ஒரு ஆசை. வாத்தியார் மீதும் தான். அவளுக்கு வாத்தியார் படத்தை அறிமுகப்படுத்தியது என்னவோ செல்லமுத்து தான். வாத்தியார் படப் பைத்தியம் எல்லை மீற எல்லாவற்றுக்கும் தடை போடுகிறான் செல்லமுத்து.  அந்த நேரத்தில்  'கோடியில் ஒருவன்' என்னும் வாத்தியார் படம் வருகிறது. அத்திரைப்படத்தைப்  பார்ப்பதற்காக செல்லமுத்துவிற்கு தெரியாமல் செல்லும் கம்சலை அதற்கு பின் வீட்டிற்கு வரவே இல்லை. வாழ்க்கை எப்படியோ மாறி சீரழிந்து போகிறது. செல்லமுத்துவின் பாத்திரப்படைப்பும் சிறப்பாக அமைக்கப்படிருக்கிறது. 

இதில் எம்.ஜி.ஆர் என்ற பெயர் பயன்படுத்தப்படவில்லை என்றாலும் வாத்தியார் என்றால் எம்.ஜி.ஆர்  தான் என்று அனைவருக்கும் தெரியும். எம்.ஜி.ஆர்  உயிருடன் இருந்த போது எழுதப்பட்ட நாவல் இது. நல்ல துணிவு தேவை தான். அது ஜெயகாந்தனிடம் இல்லையா என்ன.

Thursday 7 August 2014

(29) சீனா - அண்ணன் தேசம் : சுபஸ்ரீ மோகன்


  peppers Tv யின் 'படித்ததில் பிடித்தது' நிகழ்ச்சியில் ஒருவர் இப்புத்தகத்தைக் குறிப்பிட்டார். சீனா பற்றிய அறிவும் என்னிடம் பெரிதாக இல்லை. இந்த புத்தகம்  ஒரு ஆரம்பமாக இருக்கட்டும் என நினைத்து வாங்கினேன். சுபஸ்ரீ மோகனின் கணவருக்கு சீனாவில் வேலை மாற்றம் கிடைத்ததால் அவர்களுக்கு சீனாவில் வசிக்க நேரிடுகிற‌து. சீனாவில் தனது அனுபவங்களை எழுதியுள்ளார். சீனா என்ற நாட்டிற்கு தான் ஒரு ரசிகை எனக்குறிப்பிடுகிறார்.

சீன மக்கள் நேரம் தவறாதவர்கள், தேநீர்ப் பிரியர்கள், பழமையை மறக்காதவர்கள், முதியவர்களிடம் மதிப்பு வைத்திருக்கிறார்கள், கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறையை விரும்புபவர்கள் என்பது போன்ற தகவல்களைக் குறிப்பிடுகிறார். அத்துடன் சீனாவின் முக்கிய இடங்களைக் குறிப்பிடுகிறார். சீனாவின் மிகப்பிரமாண்டமான மைதானம் கட்டப்பட்ட நிகழ்வை குறிப்பிட்டுள்ளார். பட்டு நூல் கண்டுபிடித்த கதை, ஓவியங்கள் , பீங்கான் , சீன மாநகரங்கள்  , சீன விழாக்கள், மருத்துவம் , திருமணம் போன்றவைகள் பற்றிய அடிப்படைத்தகவல்களை புத்தகத்தில் பெறக்கூடியதாக இருக்கிறது. முக்கியமாக சீன வானொலி நிலையம் வியக்கவைக்கிறது. தமிழ், இந்தி, பெங்காலி உட்பட 43 மொழிகளில் ஒலிபரப்பு செய்யப்படுகிறது. அங்கு வேலை செய்யும் சீனர்கள் தமக்கு தமிழ் பெயர்களை வைத்துள்ளார்களாம்.

சீனா பற்றிய மேலோட்டமான தகவல்களைப் பெற இப்புத்தகம் உதவும்.

(28) பள்ளிகொண்டபுரம் - நீல பத்மநாபன்




   நீல.பத்மநாபன் எழுதிய பள்ளிகொண்டபுரம் நாவல்  திருவனந்தபுரத்தின் பின்னணியில் எழுதப்பட்டுள்ளது. பள்ளிகொண்டபுரம் என்ற நகரமே  நாவல் முழுவதும் பரந்துள்ளது.    திருவனந்தபுரம் என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை எனினும் பள்ளிகொண்டபுரம்   திருவனந்தபுரத்தையே நினைவூட்டுகிறது. இதில் குறிப்பிடப்படும் பத்மநாபசாமி கோயில் பற்றிய வர்ணனைகள் அழகாக இருக்கிறது. நகர் பற்றிய வர்ணனைகள் உயிர்ப்புடன் இருக்கிறது.

இந்நாவல் அனந்த நாயரின்  பார்வையில் சொல்லப்படுகிறது. தன்னையும்,தன் இரு குழந்தைகளையும் விட்டு விக்கிரமன்தம்பியை மணந்த மனைவி கார்த்திகாயினியின்  நினைவுகளை மறக்க முடியாது வாழும் அனந்தன் நாயரின் மனவோட்டத்தை, அவர் பார்வையில் சொல்லுகின்றது இந்நாவல்.


உரிய முறையில் கிடைக்காத பதவி உயர்வைப் பெற்றுக்கொள்கிறார் அனந்தன் நாயர். தன் பதவி உயர்வுக்கு கார்த்திகாயினி மேல் விக்கிரமன்தம்பி வைத்த கண் தான் காரணம் என்று தெரிந்தும் அவரால் ஊரில் பெரிய பதவியில் இருக்கும் விக்கிரமன்தம்பியை எதிர்க்க முடியாமல் இருக்கிறது. எல்லாக் கோபங்களையும் கார்த்திகாயினி மேல் காட்ட வீட்டில் எப்போதும் சண்டை. ஒரு கட்டத்தில் கார்த்திகாயினி  விக்கிரமன்தம்பியுடன் சென்றுவிட தன் இரு பிள்ளைகளையும் பொறுப்பாக வளர்க்கிறார். விக்கிரமன்தம்பிக்கு எல்லா கெட்ட பழக்கங்களும் உண்டு.  கார்த்திகாயினி விக்கிரமன்தம்பியுடன் சந்தோஷ‌மாக எல்லாம் வாழவில்லை.

நாவலின் இறுதியில், அனந்தன் நாயருக்கும்  மகள் மாதவிக்குட்டி, மகன் பிரபாகரன் நாயருக்கும் இடையெ நடைபெறும் உரையாடல் முக்கியமானது. மகன் பிரபாகரன் நாயர் தன் தாயின் அனைத்து  துன்பங்களுக்கும் அனந்தன் நாயரே காரணம் என்கிறான். மகள் மாதவிக்குட்டி அனந்தன் நாயருக்கு ஆதரவாக வாதாடுகிறாள். ஆரம்ப வாசிப்பில் சிறு சலிப்பை தரும் நாவல், சிறிது பக்கங்கள் தாண்டியதும் நம்மை உள்ளிளுத்துக்கொள்கிற‌து.

Tuesday 5 August 2014

(27)கந்தவேள் கோட்டம் - செங்கை ஆழியான்

  இலங்கையின் முக்கியமான எழுத்தாளர்களாக அறியப்படுபவர்கள் பலரது எழுத்துக்கள் வாசிப்பதற்கு கடினமானதாக இருக்கும். செங்கை ஆழியான் என்ற புனைபெயரால்  அறியப்படும் க. குணராசா இந்த வகையிலிருந்து மாறி  அனைவருக்கும் புரியும்படியும், அதே வேளையில் சுவாரசியமாகவும் எழுதுபவர். வரலாறு, சமூகம், நகைச்சுவை என பல தளங்களில் எழுதி வருகிறார். இவரது நல்லூர் முருகன் ஆலய வரலாறு பற்றிய நாவல் தான் 'கந்தவேள் கோட்டம்'.

நல்லூர் முருகன் ஆலயம் யாழ்ப்பாணத்தவர்களது வாழ்வுடன் பிணைந்த ஒரு ஆலயம். திருவிழா நடைபெறும் 25 நாட்களும் யாழ் நகரே விழாக்கோலம் பூண்டிருக்கும். அலங்காரக் கந்தன் என்ற செல்லப் பெயரால் அழைக்கப்படும் நல்லூர் முருகன் தேரில் வரும் காட்சி அப்படி அழகாக இருக்கும். நல்லூர் திருவிழாவை ஒட்டி புலம்பெயர்ந்து வாழ்பவர்கள், இலங்கையின் வேறு பகுதியில் வசிப்பவர்கள் என யாழ்ப்பாணத்தவர்கள்  பலரும் வருவதுண்டு. நல்லூர் ஆலயம் பற்றி பலரும் தமது அனுபவங்களை சிறப்பாக எழுதியிருக்கிறார்கள். மனம் நிறைந்த நல்லூர் ஆலய வரலாறை கூறும் நாவல் தான் 'கந்தவேள் கோட்டம்'.

இலங்கை கோட்டை இராட்சியத்தை ஆண்ட ஆறாம் பராக்கிரமபாகு காலத்தில் இந்தியவின்  மலையாளப் பகுதியில் இருந்து பணிக்கனாக (யானை பழக்குபவர்கள்) பணிபுரிய வந்த வீரன் பராக்கிரமபாகுவின் தங்கையை மணம் புரிகிறான்.  அவர்களுக்கு பிறந்த இரு பிள்ளைகளில் மூத்தவன்  சப்புமல் குமாரயா  எனப்படும் செண்பகப் பெருமாள். இவன்  பிற்காலத்தில் சிறி சங்கபோதி புவனேகபாகு என்ற பெயரில் கோட்டே அரசனாக முடிசூட்டிக் கொண்டான்.  பராக்கிரமபாகுவிற்கு ஆண் வாரிசு இல்லாததால் சப்புமல் குமாரனை அடுத்த வாரிசாக நினைக்கிறான். (பின் மகளுடைய மகனை அரசனாக்குகிறான் என்பது வேறு விடையம்) சப்புமல் குமாரயா யாழ்ப்பாணத்திற்கு படையெடுத்து வந்த போது அவனது அமைச்சனாக இருந்த விஜயபாகுவால் நல்லூர் ஆலயம் அழிக்கப்படுகிறது. யாழ்ப்பாண இராச்சியத்தை ஆண்ட ஆரியச் சக்கரவர்த்திகள் வம்சத்தின் முதலாவது அரசனான கூழங்கைச் சக்கரவர்த்தியின் அமைச்சர்  புவனேகவாகு என்பவனால் இக் கோயில் கட்டுவிக்கப்பட்டதென யாழ்ப்பாண வைபவமாலை கூறுகிறது. பின் சப்புமல் குமாரனே வேறு ஓர் இடத்தில்(முத்திரைச்சந்தி) நல்லூர் ஆலயத்தை கட்டிக் கொடுக்கிறான்.  

சப்புமல் குமாரனுடனான யுத்தத்தின் போது இந்தியாவில் தஞ்சமடைந்த அன்றைய அரசன் கனகசூரிய சிங்கை ஆரியன் தருணம் பார்த்து மீண்டும் போர் தொடுத்து யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றுகிறான்.  அவனைத் தொடர்ந்து அவன் மகன் பரராசசேகரன் ஆட்சி செய்கிறான். பின் பல வருடங்களுக்கு பின் போர்த்துக்கேயர் காலத்தில் மீண்டும் நல்லூர் தரைமட்டமாக்கப்படுகிற‌து. முக்கிய சிலைகள் பாதுகாப்பாக இரகசிய இடத்தில் பேணப்படுகிறது. நல்லூர் ஆலயம் இருந்த  இடத்தில் கிறிஸ்தவ தேவாலயம் கட்டபடுகிற‌து.  போர்த்துக்கேயர் காலத்தில் சைவ சமயம் பல சோதனைகளுக்கு உள்ளாகிறது. பலர் படிப்பு, பதவிக்காக மதம் மாறுகிறார்கள். (முக்கியமாக பிரபலமான கதிர்வேற்பிள்ளை மதம் மாறி பேதுருப்பிள்ளையாகினார், மாப்பாண முதலியார் தொன்யுவான் மாப்பாண முதலியார் ஆனார்). பின் ஒல்லந்தர் காலத்தில் தேவாலயத்திற்கு அருகில் சிறிதாக ஆலயம் கட்டி மக்கள் வழிபடுகிறார்கள். கிருஸ்ணையர் என்பவர் அவ்வாலயத்தை மக்களுடன் உதவியுடன்  மீண்டும் நிறுவ  நினைக்கிறார். 

ஒல்லாந்தர் தமது தேவாலயத்திற்கு இடையூறாக இருப்பதால் குருக்கள் வளவு எனும் பழைய இடத்திலேயே ஆலயத்தை அமைக்க அனுமதிக்கின்ற‌னர்.  அங்கு இருந்த முஸ்லிம் மக்கள் எழுப்பப்படுகிறார்கள்(?). கோயில் காணியை விற்றார்கள் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்கள் மதித்த யோகியர் ஒருவரது சமாதி அங்கு இருப்பதால் அதை வணங்க அனுமதி கேட்கிறார்கள். அதற்கான அனுமதி வழங்கப்படுகிற‌து.  அது தான் இன்றைய நல்லூர் ஆலயம். இதற்கு மாப்பாண முதலியார் மகன் இரகுநாத மாப்பாண முதலியார் (இவர் சைவர்) உதவுகிறார். புதிதாக கட்டப்பட்ட ஆலயத்திற்கு கிருஷ்ணையர் பிரதம குருக்களாகவும் இரகுநாத மாப்பாண முதலியார் தர்மகத்தாவாகவும் இருக்கிறார்கள்.(இன்றும் மாப்பண முதலியார் பரம்பரையினரே நிர்வாகத்திற்கு பொறுப்பாக உள்ளனர்). அதன் பின்னர் நல்லூர் ஆலயத்தில் இடம்பெற்ற முக்கிய சம்பவங்களும் நாவலின் இறுதியில் வருகிறது.

நல்லூர் கந்தசுவாமிகோயில் கட்டியமான‌

"ஸ்ரீமான் மகாராஜாதி ராஜய அகண்ட பூமண்டல ரத்தியதிகிந்த விஸ்ராந்த கீர்த்தி ஸ்ரீ கஜவல்லி மகா வல்லி ஸமேத ஸ்ரீ சுப்ர‌மண்ய பாதாரவிந்த ஜனாதிரூட சிவகோத்திரோற்ப வகா இரகுநாத மாப்பாண முதலியார் சமூகா"

எனும்  வாக்கியத்துடன் நாவல் நிறைவடைகிறது.

நல்லூர் ஆலயத்தை பற்றி அறிய விரும்புபவர்களுக்கு இந்த நாவல் ஒரு நல்ல தொடக்கமாக அமையும்.

Sunday 3 August 2014

(26) மடொல் தீவு - மார்ட்டின் விக்கிரமசிங்க‌

மடொல் தீவு - மார்ட்டின் விக்கிரமசிங்க‌ (சிங்களம்)
தமிழில் : சுந்தரம் சௌமியன்

  வங்காள, மலையாள மொழிபெயர்ப்பு எல்லாம் படிக்கிறோம், நமது சகோதர மொழி என அறியப்படும் சிங்கள மொழியில் ஒரு புத்தகம் கூட வாசிக்கவில்லையே என்ற உணர்வு 'மடொல் தீவு' (மடொல் தூவ) எனும் புத்த‌கத்தை நூலகத்தில் பார்க்கும் போது வருவதுண்டு. என்ன உறவு என்று தெரியவில்லை நூலகத்தில் அடிக்கடி கண்ணில் தட்டுப்படும் இந்த  'மடொல் தீவு'. அதனால் இந்த தடவை வாசிப்பது என்று முடிவு செய்தேன். மார்ட்டின் விக்கிரமசிங்க எழுதிய 'மடொல் தீவு' ஒரு சிறுவர் புதினம் ஆகும். இக்கதை இலங்கையின்  தெற்குக் கரையோரத்தில் 1890 இல் நடப்பது போன்று அமைக்கப்பட்டுள்ளது. மடொல் தூவ என்பது தெற்குக் கரையோரத்தில் அமைந்துள்ள மிகச்சிறிய தீவு. உபாலி கினிவெல்ல மற்றும் அவன் நண்பர்களைச்சுற்றி ஆரம்பிக்கும் கதை பின்பு உபாலியும் அவன் நண்பன் ஜின்னாவும்  மக்கள் அரவம் அற்ற மடொல் தூவவிற்கு செல்வது போன்று அமைகின்றது.  இந்தக் கதை ஒரு திரைப்படமாகவும் வெளிவந்துள்ளது. தமிழ், ஆங்கிலம், சீன, ருசிய , ஜப்பானிய , ரோமேனியா, பல்கேரியா ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

ஊரில் படிப்பில் ஆர்வம் அற்று நண்பர்களுடன் சேர்ந்து விளையாட்டு என்ற பெயரில்  மக்களுக்கு துன்பம் விளைவித்து திரியும் உபாலி கினிவெல்ல ஒரு கட்டத்தில் ஜின்னாவுடன்  யாருக்கும் சொல்லாமல்  வீட்டை விட்டு வெளியேறுகிறான். ஆவி, பாம்பு இருக்கும் தீவு என அறியப்படும் ஆளரவமற்ற மடொல் தூவவிற்கு துணிந்து செல்கின்றனர் இருவரும். காடாக இருந்த தீவின் ஒரு பகுதியை சிறிது சிறிதாக மாற்றி மரக்கறி பயிர் செய்து சந்தையில் விற்கிறார்கள். தீவில் ஆள் நடமாட்டம் ஆரம்பித்தவுடன் அரசாங்கம் உரிமை கோரி வருகிறது. பலர் குத்தகைக்கு நிலத்தை எடுக்க முனைகிறார்கள். ஒரு சட்டத்தரணியின் உதவியால் அத்தீவு அவர்களுக்கே குத்தகைக்கு கிடைக்கிறது. ஆரம்பத்தில் மக்களுக்கு தொல்லை புரிபவனாக இருக்கும்  உபாலி  பின் பொறுப்புமிக்கவனாக, உதவுபவனாக இருக்கிறான்.

இந்த நாவல் சிறுவர்களுக்கு எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரியவில்லை. அந்த தீவில் கொலை செய்த ஒருவனும் களவெடுத்த ஒருவனும் வேறு  தங்கியிருக்கிறார்கள்.  உபாலியும் ஊரில் மக்களுக்கு நிறைய தொல்லைகளை புரிந்திருக்கிறான். அவனும் அவனது நண்பர்களும் கள‌வெடுக்க முயன்று பிடிபட்டிருக்கிறார்கள். ஜெயமோகனின் 'அறம்' வாசித்த எனக்கு இந்த நாவலை கொண்டாட முடியவில்லை.




Saturday 2 August 2014

(25) 1945 இல் இப்படியெல்லாம் இருந்தது.. - அசோகமித்திரன்

1945 இல் இப்படியெல்லாம் இருந்தது.. -  அசோகமித்திரன்

'1945 இல் இப்படியெல்லாம் இருந்தது..'  -  அசோகமித்திரனின் சிறுகதைத்தொகுப்பாகும். பெரும்பாலான கதைகள் அ.முத்துலிங்கம் கதைகளைப்போல் சுயசரிதைத் தன்மை கொண்டவை. தனது அனுபவங்களை கற்பனை கலந்து கதையாக்கியிருக்கிறார் என நினைக்கிறேன். 'உண்மைக்கும் புரிதலுக்கும் உள்ள இடைவெளி தான் எல்லாக் கதைகளுக்கும் மையப்பொருள்' என பின்னட்டையில் குறிப்பிடப்பட்டுள்ளது.  இலகுவான நடையில் , ரசிக்கும் வகையில் மொத்தமாக 21 கதைகள் உள்ளன. 

'கோல்கொண்டா' எனும் முதலாவது கதை டாணாஷாவின் அமைச்சர் மாதண்ணா பற்றியது. பாமினிப்பேரரசு உடைந்த போது உருவாகிய ஐந்து சிறு அரசுகளில் ஒன்று தான் கோல்கொண்டா. டாணாஷா கோல்கொண்டாவை ஆண்ட போது அவனிடம் இந்து அதிகாரிகள் பலர் வேலை செய்திருக்கிறார்கள். ராமதாசர் எனப்படும் கோபண்ணா அவர்களில் ஒருவர். அரச பணத்தை எடுத்து மலைக்கோயிலை புதுப்பித்ததால் கோபண்ணா சிறை வைக்கப்பட்டிருந்தார். அமைச்சர் மாதண்ணா  கோபண்ணாவின் தாய்மாமன் உறவு.  ஔரங்கசீப்  கோல்கொண்டா மீது படையெடுத்த போது நடைபெற்ற ஒரு சம்பவம் இக்கதையில் கூறப்பட்டுள்ளது.

இந்தப் புத்தகத்தில் உள்ள‌ முக்கிய கதைகளாக நான் நினைப்பது கோயில் , நாய்க்கடி மற்றும் குழந்தைகள் இறக்கும் போது என்பன. 'வெள்ளை மரணங்கள்' வெள்ளைக்காரர்களின் கல்லறை பற்றியது. 'உங்கள் வயது என்ன' என்பது மனிதனின் வயதுடன் தொடர்பான ஒரு கர்ணபரம்பரைக் கதை. அதே போல ஜோதிடம் தொடர்பான ஒரு கர்ணபரம்பரைக் கதையும் இந்த புத்தகத்தில் உள்ளது. 'யார் முதலில்?' என்ற கதை 'Dog trainer' பற்றியது.

அசோகமித்திரனின் நாவல்களில் தண்ணீர் , ஒற்றன் வாசித்திருக்கிறேன். அவை பெரிதாக என்னைக் கவரவில்லை. ஆனால் இந்த புத்தகத்தில் உள்ள சிறுகதைகள் மிகவும் நன்றாக உள்ளன. அவரது ஏனைய கதைகளையும் வாசிக்க வேண்டும்.