Friday 11 July 2014

(18) தண்ணீர் - அசோகமித்திரன்

 தண்ணீர் - அசோகமித்திரன்

தண்ணீருக்காக மக்கள் படும் அவலத்தை பற்றி பேசிய நாவல். நாவல் எழுதி பல வருடங்கள் சென்றாலும் இன்றும் இப்பிரச்சினை மக்களை விட்டு நீங்கவில்லை. வரும்காலங்களில் இன்னும் அதிகரிக்கவே சாத்தியம் இருக்கிறது. தண்ணீர் பிரச்சினையை முகம் கொடுக்காதவர்கள் இருப்பார்களா தெரியவில்லை. வாழ் நாளில் ஒரு தடவையாவது தண்ணீருக்காக காத்திருந்த கணங்கள் இல்லாத மனிதர்கள் மிகக்குறைவே. அதுவும் இந்தியா  போன்ற நாடுகளில் நகரங்களில் வாழும் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். தண்ணீர் லொறிக்காக  குடத்துடன் காத்திருந்து மக்கள் படும் துன்பம் தமிழ் படங்களில் நகைச்சுவையாகவே காட்டப்படிருந்தாலும்,  அதன் துன்பம் மிக அதிகமே. சென்னை அண்ணாசாலையில் ஒரு தடவை தங்கியிருந்த சமயம், மஞ்சள் நிறத்தில் தண்ணீர் இருந்தது அதிர்ச்சியாகவே இருந்தது.

இலங்கையில் நீர்ப்பிரச்சினை இந்தியா அளவிற்கு இல்லை என்றாலும், முன்னறிவித்தலுடன் நீர் வெட்டுகள் வருடத்திற்கு இரண்டு, மூன்று தடவைகள் இடம்பெறுவதுண்டு.தொடர்மாடிகளில் இருப்பவர்கள் இதனால் பாதிப்படைவது குறைவு என்றாலும் நீர்த்தொட்டி இல்லாத (water tank) தனி வீடுகளில் வசிப்பவர்கள் பாதிப்படைவதுண்டு. பத்து வருடங்களுக்கு முன், எனக்கும்  அவ்வாறான ஒரு அனுபவம் ஏற்பட்டதால் அதன் வலியை என்னால் உணரக்கூடியதாகவே இருக்கிறது.

அசோகமித்திரனின் தண்ணீர் நாவல் இரு பெண்களின் வாழ்க்கையை பற்றி பேசுவதனூடாக  அவ்விடத்தின் தண்ணீர் அவலத்தை பேசுகிறது. ஜமுனா, சாயா எனும் இரு சகோதரிகள் ஒரு வீட்டின் மேற்பகுதியில் வாடகைக்கு குடியிருக்கிறார்கள்.இருவரின் வாழ்க்கையுமே துன்பமானது தான். ஜமுனாவை பாஸ்கர்ராவ் என்பவன் சினிமா ஆசை காட்டி ஏமாற்றுகிறான். சாயாவின் குழந்தை அவர்களது அம்மாவுடன் இருக்கிறது. அம்மாவோ புத்தி சுவாதீனம் உள்ளவர். தனது சொல்லை கேட்கவில்லை என்பதால் பாட்டிக்கும் அவர்களில் வெறுப்பு. அதற்கும் மேல் அவர்கள் தங்கியிருக்கும் இடத்தில் தண்ணீர் பிரச்சினை.  ஜமுனா குடத்துடன் சென்று நீர் எடுத்து வருகிறாள். அது ஒன்றும் அவ்வளவு லேசான காரியம் இல்லை. வீட்டில் குழாய்க்கிணறு அடிக்க அதிலும் துர் நாற்றத்துடன் தண்ணீர் வருகிறது. "தண்ணி முதல்ல சாக்கடைதண்ணி போல வந்தது. ஆனா அது எல்லாம் சரியாயிடும், தண்ணி வந்தது அதுதான் முக்கியம்" என்று அவர்கள் கதைத்துக்கொள்கிறார்கள். நாவலில் வரும் டீச்சர் அம்மா கதா பாத்திரமும் முக்கியமானது.

குழாய்களில் தண்ணீர் வராதபோது நகராட்சியில் இருந்து வருபவர்கள்  தெருவைக்  அகழ்ந்து போட்டுவிட்டு போவது அதில் கார், லாரி போன்றவை சிக்குவது,  பள்ளம் வெட்டும்போது கழிவு நீர்க்குழாயைச் சேதப்படுத்திவிட்டு செல்வது போன்ற விடயங்கள் நாவலில் மிகையில்லாமல் சொல்லப்பட்டிருக்கிற‌து.

இந் நாவல் தண்ணீர் அவலத்தை பற்றி பேசிய முக்கிய நாவலாக கொள்ளப்படுகிறது.

No comments:

Post a Comment