Monday 28 July 2014

(24) அது அந்தக் காலம் - எஸ்.வி.ராமகிருஷ்ணன்

அது அந்தக் காலம் - எஸ்.வி.ராமகிருஷ்ணன்

1930 - 1940 ஆண்டு பகுதிகளை படம் பிடித்துக் காட்டும் கட்டுரைத்தொகுப்பு. எழுத்தாளருக்கு தமிழ் ஆண்டுகளில் நல்ல ஆர்வம் இருக்கிறது போல.தமிழ் ஆண்டுகள் 60  வருட காலச்சக்கரத்தை கொண்டவை. அவ்வாண்டுகளின் பெயரை சொல்லி அந்த ஆண்டுகளில் நடந்த சம்பவங்களையும் சொல்கிறார்.

  ஓகஸ்ட் புரட்சியை ஒட்டி கைது செய்யப்பட்ட காந்தி சிறை வைக்கப்பட்ட புனே அகாகான் மாளிகை இன்று காந்தி நினைவு இல்லமாக இருக்கிறது.  எழுத்தாளர் அங்கு சென்ற போது, காந்தி சிறை வைக்கப்பட்ட போது அங்கு பணி செய்த ரகுநாத் என்பவருடன் கதைத்த அனுபவங்களை எழுதியுள்ளார். காந்தியை அங்கு கொண்டு வருவதற்கு முன்னரே ஆட்டுப்பாலுக்கும் ஒழுங்கு செய்திருக்கிறார்கள். அங்கு தான் காந்தியின் செயலர் மகாதேவ தேசாய் மாரடைப்பால் இறந்திருக்கிறார். காந்தியின் மனைவி கஸ்தூரிபாவின் மரணமும் அங்கே தான் நடந்திருக்கிறது.

கஸ்தூரிபாவின் உடல் தகனம் செய்யப்பட்ட பின் சாம்பலில் இரு வலையல்கள் மாத்திரம் நிறம் மாறாமல் அப்படியே இருந்ததாகவும் முதலில் அதை காந்தி நம்ப மறுத்ததாகவும், பின் அவர் சென்று பார்த்த போது அவ்வாறே இருந்ததால் கஸ்தூரிபா சிற‌ந்த பதிவிரதை என்பதால் அவ்வாறு நடந்திருக்கலாம் என்று கருதிய காந்தி அவற்றை பத்திரமாக வைத்திருந்ததாகவும் ரகுநாத்  கூறியிருக்கிறார்.  முதலில் எஸ்.வி.ராமகிருஷ்ணன் அதை நம்பவில்லை. ஆனால் பின்னர் Robert Payne எழுதிய 'The Life and Death of Mahatma Gandhi' எனும் புத்தகத்திலும்  இந்த தகவல் குறிப்பிடப்பட்டுள்ளதைக் கண்டு ஆச்சரியமடைந்ததாகவும் எழுதியுள்ளார்.

   இன்னொரு கட்டுரையில் மகாத்மா காந்தி மறைந்த தினத்தன்று மக்களின் உணர்வுகளைக் குறிப்பிட்டுள்ளார். எல்லோரும் தங்கள் வீட்டில் ஒருவரை இழந்து விட்டது போல் அழுதிருக்கிறார்கள். 'ரெடி.. ஸ்மைல்..' எனும் கட்டுரையில் அன்று Photo எடுப்பதில் இருந்த சுவாரசியங்களை குறிப்பிடுகிறார்.

இது தவிர அன்றைய கால சினிமா, பேனையின் பரிணாமம், ரயில் பிரயாணம், குடும்ப டாக்டர் என பல விடயங்களைப் பற்றி எழுதியுள்ளார்.

Friday 25 July 2014

(23) கடல்புரத்தில் - வண்ணநிலவன்

கடல்புரத்தில் -  வண்ணநிலவன்

கடலுடன் ஒட்டிய கிராமத்தின் கதையை சொல்லும் சிறிய நாவல் தான் 'கடல்புரத்தில்'. இதற்கு முன் இவரது 'ரெயினீஸ் ஐயர் தெரு'  வாசித்திருக்கிறேன். இரு நாவல்களுமே தமிழ் நாவல்களில் முக்கியமானவையாக கருதப்படுபவை.


கடலோர கிராம மக்களின் ஏமாற்றம், ஆசை, காதல், வன்மம் என்பவற்றை நாவலூடாக சொல்லிச் செல்கிறார். நாவலில்  பிலோமி, அவள் அப்பச்சி குரூஸ் மிக்கேல் , அம்மை  மரியம்மை , அண்ணன்  செபஸ்தியான், தோழி ரஞ்சி, சாமிதாஸ், வாத்தி என்பவர்கள் முக்கியமான பாத்திரங்களாக‌ இருந்த போதும் பிலோமியையும்   அவள் அப்பச்சி குரூஸ் மிக்கேலையும் சுற்றியே கதை செல்கிறது. குரூஸ் மிக்கேல் கோபக்காரன், கடலம்மை மீது பற்று வைத்துள்ளவன். வல்லத்தை உயிராக நினைக்கிறான். வல்லமும் வீடும் அவனை விட்டு போனதும் மனநிலை பாதிப்படைகிறான்.

 பிலோமியின் அம்மை இறந்து விடுகிறாள்.  அப்பச்சியின் மன நிலை பாதிப்படைந்து விடுகிறது. அவள்  விரும்பிய சாமிதாஸ் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்கிறான்.  தனியே நிற்கும் பிலோமிக் குட்டி, இந்த மாற்றங்களை தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்கிறாள்.



கிறிஸ்மஸ் தினத்தை கிராம மக்கள்  கொண்டாடும் முறையை கண்முன் கொண்டு வருகிறார் எழுத்தாளர். இந்த நாவலில் கிராமத்தின் வாழ்க்கை மட்டுமல்லாமல் மீன்பிடித்தொழிலில் ஏற்பட்ட மாற்றமும்  அதனால் மக்களிடம் ஏற்பட்ட மாற்றமும் சொல்லப்படுகிறது. லாபத்தைக் மட்டும் நோக்கி மீன் பிடிக்கும் லாஞ்சுகள் வந்தபோது ஊர்க்கட்டுப்பாடுகளைத் துச்சமாக மதிக்கும் மனப்பான்மையும்,  போட்டியும்  முரண்பாடும் வந்து சேர்கின்றன.
ஒரு கடல் கிராமத்திற்கு வாசிப்பவர்களை அழைத்துச்செல்ல இந்த நாவல் தவறவில்லை.

Thursday 24 July 2014

(22) காட்டில் நடந்த கதை - விபூதிபூஷண் பந்தோபாத்யாய

காட்டில் நடந்த கதை - விபூதிபூஷண் பந்தோபாத்யாய (வங்காளம்)
தமிழில்: புவனா நடராஜன்


 'பதேர் பாஞ்சாலி’ நாவல் மூலம்  புகழ்பெற்ற விபூதிபூஷண் பந்தோபாத்யாவின் பத்துச் சிறுகதைகளின் தொகுப்பு இது. பெரும்பாலான கதைகள் காட்டுடன் சம்பத்தப்பட்டவை. இல்லையெனில் ஒரு மரமாவது இருக்கும். பெரும்பாலான தமிழ் சிறுகதைகளில் உள்ளது போன்ற ஆபாசம், கொடூரம் எதுவுமற்ற சிறந்த சிறுகதைகள் இவை.

 சுஜாதாவின் 'நகரம்' பிரேம்சந்த்தின் 'லட்டு' சிறுகதைகளுக்கு ஒப்பானதாக மனத்தை நெகிழ வைத்த சிறுகதை  'கூப்பி'. தலை முடிகள் சில நரைத்த மனிதன் ஒருவனையும் அவனது ஐந்து வயது மகளையும் காட்டுப்பிரதேசத்தில் சந்திக்கிறார் எழுத்தாளர். கிராமத்த்தை விட்டு புரூலியா எனும் டவுனுக்கு சென்ற கதையை சொல்கிறான் அவன். அந்த சிறுமியின் அம்மா இறந்து இரண்டு வருடமாகிறது. அந்த பெண்ணை வீட்டில் விட்டுவிட்டு விறகு வெட்ட போவது கடினம் என்பதால் புரூலியா சென்று இரண்டு வருடமாக பிச்சை எடுத்து பிழைக்கிறேன் என்று சொல்கிறான் அவன்.  புரூலியாவில் இருக்கும் அவனுக்கு தெரிந்த ஒருவன் இரவு நேரத்‌தில் அவன் வீட்டு வராந்தாவில், படுக்க மட்டும் இடம் கொடுக்கிறான். அந்த நேரத்த்தில் பஞ்சம் ஏற்படுகிறது. யாரும் பிச்சை போட விரும்பவில்லை. தங்க இடம் கொடுத்த வீட்‌டுகாரர்களும் வீட்டை காலி செய்ய சொல்லி தகராறு செய்கிறார்கள். அதனால் டவுனை விட்‌டு கிளம்பி சொந்த ஊரான தோடாங் கிராமத்திற்கு சென்று கொண்டிருப்பதாக சொல்கிறான்.அவன் தன் மகளை தோளில் தூக்கி வைத்து நடந்து செல்வதை பார்த்தபடி இருக்கிறார் எழுத்தாளர்.
               
இது நடந்து பல நாட்களுக்கு பின் ஒரு நாள் ஏதோ ஒரு ஊரில் ஆஸ்பத்திரிக்கு முன்பாக கூட்டம் நிற்பதை பார்க்கிறார். ஒரு கூலி ஆள் படுத்து கிடந்தான். முதுகில் bandage  போட்டிருந்தார்கள். இரத்தம் பெருகிக்கொண்டிருந்தது. டைனமைட் வைத்து பாறைகளை பிளக்கும் வேலை நடக்கும் இடம் அது. கல் தெறித்து வந்து அடித்து முதுகெலும்பை பாதித்துவிட்டது  என்று சொல்கிறார்கள். முகத்தில் சலனமில்லாமல் உட்கார்ந்தபடி கீழே கிடந்த வைக்கோலை வாயில் வைத்து கடித்துக்கொண்டிருந்த சிறுமியை கூப்பி என அடையாளம் காண்கிறார். அருகில் இருந்தவர்களிடம் அவர்களைப் பற்றி விசாரித்த போது கூலியாக அரிசி கிடைக்கும் என்பதற்காக தூர இடத்தில் இருந்து இங்கு வேலைக்கு வந்திருந்தார்கள் என்று சொல்கிறார்கள். Ambulance  வந்தது. எல்லோரும் அவனை தூக்கி வண்டியில் ஏற்றினார்கள். அவனிடம் இருந்து முனகல்கள் மட்டுமே வெளிப்பட்டன. அவனுக்கு பிரியமான, அவனது கர்வத்திற்கு காரணமான கூப்பியின் பெயரைக்கூட அவனால் சொல்லமுடியவில்லை. அங்கிருந்து எழுபத்தொரு மைல்கள் பயணம் செய்து ஆஸ்பத்திரி செல்ல வேண்டும். வண்டியின் குலுக்கல் காரணமாகவே அவன் இறந்து போய்விடக்கூடும். 'அன்புக்குரிய மகள் கூப்பியை யாரிடம் விட்டு விட்டு போவது என்பதை தீர்மானிக்க நேரமே இல்லாமல் அவன் அவசரமாக ஓடிக்கொண்டிருந்தான்.' என கதையை முடித்திருப்பார். 

இது தவிர ராஜா அமானுல்லா பற்றிய 'சாலாராம் சொன்ன கதை' , பாசம், காட்டில் நடந்த கதை என்பனவும் முக்கியமானவை.
 

Monday 21 July 2014

(21) சகுனம் - எஸ்.வி.ராமகிருஷ்ணன்

சகுனம் - எஸ்.வி.ராமகிருஷ்ணன்

உயிர்மை பதிப்பகம் வெளியிட்டிருக்கும்  எஸ்.வி.ராமகிருஷ்ணனின் 'சகுனம்' ஒரு சுவையான‌ கட்டுரைத் தொகுப்பு ஆகும். குறிப்பாக 1930 - 1960  வரையில் நடைபெற்ற சம்பவங்களை நினைவு கூறுகிறார். முக்கியமான, பலருக்கு தெரியாத பல தகவல்கள் அடங்கிய புத்தகம்.

இன்று 29 மாநிலங்களாக பிரிக்கப்பட்டுள்ள இந்தியாவில், பிரிவினைக்கு முன் 11 மாகாணங்களும்  கிட்டத்தட்ட 600 சுதேச சமஸ்தானங்களும் இருந்துள்ளன. பர்மா கூட செயற்கையாக இந்தியாவுடன் இணைக்கப்பட்டிருந்து பின் 1937 இல் தனி நாடாகியிருக்கிறது. 40 வருடமாக தடை செய்யப்பட்டிருந்த 'வந்தேமாதரம்' பாடல் சுதந்திர தினத்தன்று அவரது பாடசாலையில் பாடப்பட்ட  நிகழ்வை நினைவு கூறுகிறார்.

ஆகாசவாணி - பெயரே இனிமையான ஒன்று தான். அந்த அருமையான பெயர் எப்படி திமுகவினால் இல்லாமல் போனது என்பது வாசிக்க கஷ்டமாக தான் இருக்கிறது. 'ஆகாசவாணி' கட்டுரையில் அந்த நாளைய வானொலிகள் பற்றிய தகவல்கள் நிறைய உள்ளன.

தமிழ் நாடு, ஆந்திர பிரிவினை பற்றிய கட்டுரையில் சென்னையை ஆந்திராவுடன்  இணைக்க ஆந்திரர்கள் செய்த முயற்சி பற்றியும் அது தடுக்கப்பட்ட நிகழ்வையும் கூறுகிறார். 1-10-1953 இல் ஆந்திரம் பிறந்திருக்கிறது.இந்திய பொதுத்தேர்தலின் அறுபதாண்டு பரிமாணம் என்ற கட்டுரை  ஆரம்ப கால வாக்கு பதியும் முறை ,  தேர்தல் வரலாறு பற்றிய சிறு அறிமுகம் என்பவற்றிற்கு முக்கியமானது.

1930 இல் நேரு, சுபாஷ் போன்றவர்கள் பூரண சுய ராஜ்ஜியம் கிடைக்கும் வரை ஓயமாட்டோம் என்று சங்கல்ப்பம் எடுத்திருக்கிறார்கள். அன்றிலிருந்து 1947 இல் சுதந்திரம் கிடைக்கும் வரை வருடந்தோறும் தை 26 ஐ சுதந்திர தினமாக கொண்டாடப்பட்டிருக்கிற‌து. பின் அது குடியரசு தினமாகிவிட்டது.

இது தவிர பாண்டிச்சேரி பற்றிய அந்த நாள் குறிப்புகள், மதராஸ் டிராம் பற்றிய தகவல்கள் என்பன முக்கியமான‌வை ஆகும்.

 



Saturday 19 July 2014

(20) சூடிய பூ சூடற்க‌ - நாஞ்சில் நாடன்

சூடிய பூ சூடற்க‌ - நாஞ்சில் நாடன்

நாஞ்சில் நாடன் 2005 வரை எழுதியவை 'நாஞ்சில் நாடன் கதைகள்' என்ற பெயரில் வெளியாகி உள்ளன.  'சூடிய பூ சூடற்க' எனும் தலைப்பில் வெளியாகியுள்ள புதிய  17 சிறுகதைகளைக் கொண்ட‌  இந்த புத்தகத்திற்காக  நாஞ்சில் நாடனுக்கு சாகித்திய அக்கடமி விருது கிடைத்தது.   உயிர்மை, உயிர் எழுத்து, ஆனந்த விகடன், ஓம் சக்தி, ரசனை, தினமணி, யுகமாயினி  போன்ற இதழ்களில் வெளியான  சிறுகதைகள் இவை. ஆரம்பத்தில் இச்சிறுகதைகளின் நாஞ்சில் நாட்டு மண்ணின்  மொழி சிறிது புரிவதற்கு கடினமாக இருந்தது. அப்பப்ப நக்கல் தொனியில் எழுதப்பட்ட நிறைய வசனங்கள் ரசிக்கும் வகையில் உள்ளன.

உணவின்மையின் கொடுமை பற்றிய 'யாம் உண்பேம்' எனும் கதை நெஞ்சை தொடுவதாக இருந்தது. கூர்க்காவின் வாழ்வு முறையை கூறும்  'தன்ராம்சிங்' கதை சிறப்பானது.  சிறு விடுப்புகள்  எடுக்காது  தொடர்ந்து பணி செய்து பின் மொத்தமாய் ஒரு மாதம் விடுப்புக்கு தாய் மண்ணுக்குப் போகிறவர்கள் அவர்கள். அதிலும் பாதி நாள் பயணத்தில் கழியும். அவர்களது பிரயாணக் கடினங்களை வாசிக்கும் போது கவலை வராமல் இருக்க முடியாது. 'சூடிய பூ சூடற்க' என்ற தலைப்பில் உள்ள கதை  அலுவலகம் ஒன்றில் கடை நிலை ஊழியராக பணிபுரியும் பூமிநாதன் பற்றியது. தேர்தல் முறைகேடுகளைப் பற்றிய நக்கல் நிறைந்த கதை 'தேர்தல் ஆணையத்திற்கு திறந்த வெளிக்க்கடிதம்'.
'சங்கிலிப் பூதத்தான்' கதை சுவாரசியமானது. இருபத்தேழு நாட்டார் தெய்வங்களில் ஒருவரான சங்கிலிப் பூதத்தான் சிவனிடம் பெரு நிதியம் வரமாக பெற்றதால் படும் பாடு பற்றி நகைச்சுவையாக எழுதியிருக்கிறார். இது தவிர‌  'செம்பொருள் அங்கதம்' , 'பழி கரப்பு அங்கதம்' போன்றவையும் முக்கிய கதைகள் ஆகும்.

Saturday 12 July 2014

(19) அயல்மொழி அலமாரி - இரா. ந‌டராசன்

அயல்மொழி அலமாரி -  இரா. ந‌டராசன்

இரா. ந‌டராசன் எழுதிய ஆயிஷா எனும் கதை ஏற்படுத்திய  தாக்கத்தால் இவர் ஆயிஷா நடராசன் என்ற பெயரால் அறியப்படுகிறார். இவரது நூல்களை ஆசிரியர்களும் மாணவர்களும் கட்டாயம் வாசிக்க வேண்டும்.  கணிதத்தின் கதை, இது யாருடைய வகுப்பறை.? மேலும் விஞ்ஞான விக்ரமாதித்தன் கதைகள்,  ஆயிஷா என பல புத்தகங்களை எழுதியுள்ளார். இலங்கையில் பல தடவை கடைகளில் தேடியும் 'கணிதத்தின் கதை' தவிர்ந்த வேறு புத்தகங்களை வாங்க முடியவில்லை. அண்மையில்  'அயல்மொழி அலமாரி' என்ற புத்தகம் நூல் நிலையத்தில் கிடைத்தது.

புத்தகங்களை , சிறுகதைகளை, நாவல்களை அல்லது எழுத்தாளர்களை அறிமுகம் செய்யும் நூல்கள் எனக்கு பிடித்தவை. எஸ்.ராமகிருஸ்ணன்  எழுதிய கதாவிலாசம் 50 எழுத்தாளர்களை அவர்களது கதையூடாக அறிமுகம் செய்கிறது. எனது வாசிப்பை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த உதவிய புத்தகங்களில் கதாவிலாசமும் ஒன்று.  அ. முத்துலிங்கத்தின் 'கடிகாரம் அமைதியாக எண்ணிக்கொண்டிருக்கிறது' எனும் புத்தகத்தில் 20 எழுத்தாளர்கள் தமக்கு பிடித்த புத்தகங்களை பற்றி கூறுகிறார்கள். பாவண்ணன் எழுதிய 'ஆழத்தை அறியும் பயணம்' என்ற‌ புத்தகத்தில் இந்திய தமிழ் சிறுகதைகள், இலங்கை தமிழ் சிறுகதைகள் மற்றும் வேற்று மொழிக்கதைகள் உட்பட மொத்தமாக 43 கதைகள் பற்றி குறிப்பிட்டுள்ளார்.
எஸ்.ராமகிருஸ்ணன்  'ரயிலேறிய கிராமம்' உட்பட பல நூல்களில் சிறந்த புத்தகம், எழுத்தாளர்களை அறிமுகம் செய்கிறார். ஜெயமோகன் 'கண்ணீரைப்பின்தொடர்தல்' (இன்னும் வாசிக்கவில்லை.ஒவ்வொரு தடவை கடை செல்லும் போதும் தேடும் புத்தகம் இது.) என்ற நூலில் இந்திய மொழியில் இருக்கும்  22  சிறந்த நாவல்களைப் பற்றி எழுதியுள்ளார். இந்த வகையில் இரா. ந‌டராசன் எழுதிய 'அயல்மொழி அலமாரி' என்ற புத்தகம் ஆங்கிலத்தில் உள்ள சிறந்த புத்தகங்களை அறிமுகம் செய்கிறது.

17 வகையாக பிரிக்கப்பட்டுள்ள இந்த புத்தகத்தில் ஒவ்வொரு வகையிலும் குறிப்பிடத்தக்க , தன்னை கவர்ந்த புத்தகத்தை அறிமுகம் செய்கிறார்.

1. கணையாழிகளின் கடவுள் நாவலை முன்வைத்து
J. R. R. Tolkien  என்பவரால் 1936 தொடக்கம் இரண்டாம் உலக யுத்தம் நடந்த காலகட்டத்தில், 1949 வரை தனது மகன் Christopher John  இற்கு கடிதக்கதையாக எழுதப்பட்டதே The Lord of the Rings நாவல்.

2. கடவுளின் தோல்விகளை முன் மொழியும் நூல்கள்
structure of scientific revolution - Thomas S. Kuhn , The grand design - Stephen Hawking , The trouble with Physics -  Lee Smolin , The brief history of time , The theory of every thing - Stephen Hawking
போன்ற நூல்களை பற்றி குறிப்பிடுகிறார். Stephen Hawking  motor neuron disease எனப்படும் நரம்புமண்டல முடிச்சு நோய்க்கு ஆளாகி மூளையை தவிர வேறெதுவும் சரியாக இயங்காத நிலையில் சக்கர நாட்காலியில் வாழ்ந்து வருபவர். இவரது The grand design என்ற நூலை Vatican   தடை செய்துள்ளது. ஆனால் Stephen Hawking  இன் The grand design என்ற நூல் உலக  Top 10 புத்தக வரிசையை நோக்கி செல்கிறது.

3. இண்டிலீஷ் நாவல்கள்
இவை இந்தியர்களால் எழுதப்பட்ட ஆங்கில நாவல்கள். எல்லோருக்கும் தெரிந்த இந்திய ஆங்கில எழுத்தாளர் ஆர்.கே. நாராயணன் . இன்றைய காலாகட்டத்தில்  Vikas Swarup இன்  'Q & A' அரவிந்த் அடிகாவின் 'The white tiger'  மனு ஜோசப் இன் 'serous man' ஆகிய மூன்று நாவல்களை முக்கியமாக  குறிப்பிடுகிறார். 

4. வெகுஜன எழுத்தின் வெகுமதிகள்
Dan brown இன் 'The Da Vinci Code' , 'Angels and Demons'  பற்றி குறிப்பிடுகிறார். Ken Follett எழுதிய‌ 'Fall of Giants'  என்ற நாவல் இருபதாம் நூற்றாண்டின் வரலாறை பற்றி மூன்று பாகங்களாக எழுதப்பட இருக்கும் நாவலின் முதல் பாகம் ஆகும். முதலாம் உலக யுத்தம் வரை இந்த நாவலில் வந்துள்ளது.

5. கணக்குப் பிசாசுகள் 
The Calculus Wars , The man who knew infinity , The man who loved only number ஆகியவை கணித பித்தர்களை பற்றிய மூன்று முக்கிய நூல்கள்.

 6. புத்தகம் பிரிப்போம்...சிறகை விரிப்போம்.
பல்வேறு நபர்கள் தங்களை செதுக்கிய நூலாக குறிப்பிடும் Richard Bach எழுதிய‌  'jonathan livingston seagull' முக்கியமானது.
'குழந்தை பருவ லட்சியங்களை அடைந்து காட்டுவது எப்படி' என்ற தலைப்பின் நடாத்திய உரையான‌ Randy Pausch இன் 'Last lecture' கட்டாயம் வாசிக்க வேண்டும்.

7. உங்களுக்கு இதயம் இருக்கிறதா?
The diary of anne frank, Stolen voices போன்றவை யுத்தத்தின் கோரத்தை உலகுக்கு காட்டிய முக்கிய பதிவுகள். Stolen voices 13 குழந்தைகளின் யுத்த நாட்குறிப்பு தொகுப்பு ஆகும்.

8.  பயாலஜிஸ்ட்  Vs கடவுளிஸ்ட்
பரிமாணவியலுக்கான தற்கால ஆதாரங்களை அடுக்கும்  Richard Dawkins இன்  'The Greatest show on Earth' முக்கிய நூல் ஆகும்.

9. குருவாசகம்
 வாத்தியாராக‌ இருப்பதின் தலைமை சுகத்தை பக்கம் பக்கமாக பட்டியலிடும் Teaching as leadership மற்றும் There are no children , Savage in equalities, children at war , To Sir with Love, Dead poets' Society, Up the down stair case , Catching up , The black board jungle , Teacher Man என்பவற்றை  ஆசிரியர்கள் கட்டாயம் வாசிக்க வேண்டிய நூல்கள் என குறிப்பிடுகிறார். கெலன் கெல்லர் தனது ஆசிரியர் பற்றி எழுதிய நூலான 'Teacher - Anne Sulivan ' முக்கியமானது. 

10. Made in China
சீனாவின் முன்னேற்றத்துக்கான காரணத்தை தெரிந்து கொள்ள வாசிக்க வேண்டிய முக்கிய  நூல்கள்  The Genius of china , சீனாவின் மூவாயிரம் வருட அறிவியல் கண்டுபிடிப்புகளையும், சீன அறிவியல் கடந்து வந்த சோதனைகளையும் பட்டியலிடும் 'The man who loved china" கலாச்சார புரட்சி அறிவியல் புரட்சியாக எப்படி மாறிய‌து என்பதை சொல்லும் 'The cultural history of modern science in China' என்பன ஆகும்.

11. மக்களிசம்
ஓவிய ஆளுமைகளைப் பற்றிய அத்தியாயம் இது. 

12. தொலைக்கப்பட்ட சிறார்களும் கண்டடைந்த தேசமும் 
 தென் சூடான் பற்றி அறிய உதவும் நூல்களான‌ Season of Migration to the North , A hare in the elephant trunk , What is the what என்பவை முக்கியமானவை.

13. முப்பது வகை பட்டினி
கருப்பின அமெரிக்க அடிமை முறை பற்றிய ஆய்வான‌ 'Time on the cross', மூன்றாம் உலக நாடுகளின் வறுமை நிலைக்கான காரணங்களை கூறும் 'The escape from hunger' என்பவற்றை பற்றி எழுதியுள்ளார்.

14. அதற்காக வருத்தமில்லை திரு. ஸ்டீவ் ஜாப்ஸ்
Steve Jobs பற்றி தெரிந்து கொள்ள உதவும் புத்தகங்க‌ள்  iCon , Steve Job The exclusive biography என்பன. கணினி  வர்த்தக உலகை அறிய உதவும் புத்தகங்களில் முக்கியமானவை The world is flat , The presentation secrets of Steve jobs என்பன.

15. விஞ்ஞானி ராமனின் நோபல் அவலங்கள்
 சி.வி ராமன் நோபல் பரிசு பெறும் போது சந்தித்த பிரச்சினைகள் உட்பட அவரைப் பற்றிய பல விடயங்களை இவ் அத்தியாயத்தில் குறிப்பிடுகிறார்.

16. சந்தைப்பொருளாதாரத்தின் மாயச்சரக்கு
'Harry potter'  நாவலின் விற்பனையில் நடைபெற்ற வியாபார யுக்திகளை பற்றி குறிப்பிட்டுள்ளார்.

17. காந்திக்காக காத்திருக்காதே
சல்மான் ருஷ்டியின் சர்ச்சைக்குரிய நாவலான 'சாத்தானின் கவிதைகளை' பற்றி  எழுதியுள்ளார்.



Friday 11 July 2014

(18) தண்ணீர் - அசோகமித்திரன்

 தண்ணீர் - அசோகமித்திரன்

தண்ணீருக்காக மக்கள் படும் அவலத்தை பற்றி பேசிய நாவல். நாவல் எழுதி பல வருடங்கள் சென்றாலும் இன்றும் இப்பிரச்சினை மக்களை விட்டு நீங்கவில்லை. வரும்காலங்களில் இன்னும் அதிகரிக்கவே சாத்தியம் இருக்கிறது. தண்ணீர் பிரச்சினையை முகம் கொடுக்காதவர்கள் இருப்பார்களா தெரியவில்லை. வாழ் நாளில் ஒரு தடவையாவது தண்ணீருக்காக காத்திருந்த கணங்கள் இல்லாத மனிதர்கள் மிகக்குறைவே. அதுவும் இந்தியா  போன்ற நாடுகளில் நகரங்களில் வாழும் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். தண்ணீர் லொறிக்காக  குடத்துடன் காத்திருந்து மக்கள் படும் துன்பம் தமிழ் படங்களில் நகைச்சுவையாகவே காட்டப்படிருந்தாலும்,  அதன் துன்பம் மிக அதிகமே. சென்னை அண்ணாசாலையில் ஒரு தடவை தங்கியிருந்த சமயம், மஞ்சள் நிறத்தில் தண்ணீர் இருந்தது அதிர்ச்சியாகவே இருந்தது.

இலங்கையில் நீர்ப்பிரச்சினை இந்தியா அளவிற்கு இல்லை என்றாலும், முன்னறிவித்தலுடன் நீர் வெட்டுகள் வருடத்திற்கு இரண்டு, மூன்று தடவைகள் இடம்பெறுவதுண்டு.தொடர்மாடிகளில் இருப்பவர்கள் இதனால் பாதிப்படைவது குறைவு என்றாலும் நீர்த்தொட்டி இல்லாத (water tank) தனி வீடுகளில் வசிப்பவர்கள் பாதிப்படைவதுண்டு. பத்து வருடங்களுக்கு முன், எனக்கும்  அவ்வாறான ஒரு அனுபவம் ஏற்பட்டதால் அதன் வலியை என்னால் உணரக்கூடியதாகவே இருக்கிறது.

அசோகமித்திரனின் தண்ணீர் நாவல் இரு பெண்களின் வாழ்க்கையை பற்றி பேசுவதனூடாக  அவ்விடத்தின் தண்ணீர் அவலத்தை பேசுகிறது. ஜமுனா, சாயா எனும் இரு சகோதரிகள் ஒரு வீட்டின் மேற்பகுதியில் வாடகைக்கு குடியிருக்கிறார்கள்.இருவரின் வாழ்க்கையுமே துன்பமானது தான். ஜமுனாவை பாஸ்கர்ராவ் என்பவன் சினிமா ஆசை காட்டி ஏமாற்றுகிறான். சாயாவின் குழந்தை அவர்களது அம்மாவுடன் இருக்கிறது. அம்மாவோ புத்தி சுவாதீனம் உள்ளவர். தனது சொல்லை கேட்கவில்லை என்பதால் பாட்டிக்கும் அவர்களில் வெறுப்பு. அதற்கும் மேல் அவர்கள் தங்கியிருக்கும் இடத்தில் தண்ணீர் பிரச்சினை.  ஜமுனா குடத்துடன் சென்று நீர் எடுத்து வருகிறாள். அது ஒன்றும் அவ்வளவு லேசான காரியம் இல்லை. வீட்டில் குழாய்க்கிணறு அடிக்க அதிலும் துர் நாற்றத்துடன் தண்ணீர் வருகிறது. "தண்ணி முதல்ல சாக்கடைதண்ணி போல வந்தது. ஆனா அது எல்லாம் சரியாயிடும், தண்ணி வந்தது அதுதான் முக்கியம்" என்று அவர்கள் கதைத்துக்கொள்கிறார்கள். நாவலில் வரும் டீச்சர் அம்மா கதா பாத்திரமும் முக்கியமானது.

குழாய்களில் தண்ணீர் வராதபோது நகராட்சியில் இருந்து வருபவர்கள்  தெருவைக்  அகழ்ந்து போட்டுவிட்டு போவது அதில் கார், லாரி போன்றவை சிக்குவது,  பள்ளம் வெட்டும்போது கழிவு நீர்க்குழாயைச் சேதப்படுத்திவிட்டு செல்வது போன்ற விடயங்கள் நாவலில் மிகையில்லாமல் சொல்லப்பட்டிருக்கிற‌து.

இந் நாவல் தண்ணீர் அவலத்தை பற்றி பேசிய முக்கிய நாவலாக கொள்ளப்படுகிறது.

Saturday 5 July 2014

(17) ஜே.ஜே.சில குறிப்புகள் - சுந்தர ராமசாமி

 ஜே.ஜே.சில குறிப்புகள் - சுந்தர ராமசாமி

இந்த புத்தகத்தை முதல் தடவை  வாசிப்பவர்களுக்கு  கட்டாயம் இது நாவலா அல்லது எவ்வகையினை சேர்ந்தது என்ற குழப்பம் வரும் என நினைக்கிறேன்.  ‘ஜே.ஜே.சிலகுறிப்புகள் பின் நவீனத்துவ வடிவத்தையும் நவீனத்துவ நோக்கையும் ஒரே சமயம் கொண்ட நாவல்’ என எழுத்தாளர் ஜெயமோகன் குறிப்பிடுகிறார். மூன்று பாகங்களாக பிரிக்கப்பட்டுள்ள இந்த நாவலின் முதல் பகுதியில் நாவலின் ஆசிரியர்,  ஜே.ஜே உடனான தனது அனுபவங்கள், பிறர் மூலம் தெரிந்து கொண்ட விடயங்களை குறிப்பிடுகிறார். இரண்டாம் பகுதி ஜே.ஜே இன் நாட்குறிப்புகள் சிலவற்றின் மொழிபெயர்ப்பாக இருக்கிறது. மூன்றாவது பகுதியில் ஜே.ஜே யின் புத்தகங்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

"ஜோசப் ஜேம்ஸ்   1960 ஜனவரி 5 ஆம் திகதி, தனது 39 ஆவது வயதில், ஆல்பெர் கம்யு விபத்தில் மாண்டதற்கு மறு நாள் இறந்தான்." இது தான் நாவலின் முதலாவது வரி. இந்த நாவலுக்கு ஆழ்ந்த வாசிப்பு தேவை என முதலே அறிந்து இருந்ததால், ஆல்பெர் கம்யு (Albert Camus) யார் என தேடிப்பார்க்க வேண்டியது  கட்டாயம். எழுத்தாளர்,தத்துவவியலாளர்  French-Algerian நோபல் பரிசு வெற்றியாளர். Albert Camus போலவே ஜே.ஜே யும் கால்பந்தாட்டம் விளையாடுபவனாகவும் நாடகங்களில் ஈடுபாடு உள்ளவனாகவும் இருக்கிறான்.

ஜே.ஜே எனப்படும் ஜோசப் ஜேம்ஸ் எனும் மலையாள எழுத்தாளனைப் பற்றிய நினைவுகளாக கதை ஆரம்பிக்கிறது. (ஜே.ஜே என்பது ஒரு கற்பனையான பாத்திரமே) புத்தக ஆசிரியர் ஒரு தடவை மட்டுமே நேரில் ஜே.ஜே யை சந்தித்து இருக்கிறார். அப்போதும் அவன் " சிவகாமி அம்மாள் சபதத்தை நிறைவேற்றி விட்டாரா " என தமிழ் எழுத்தாளர்களை கிண்டலடிப்பது மட்டும் தான் அவனுடனான நேரடி அனுபவம். ஆனால் ஜே.ஜே யின் ரசிகனான ஆசிரியர் தொலைவில் நின்றே அவனை பல தடவைகள் ரசிக்கிறார்.  ஜே.ஜே யின் மறைவிற்கு பின்னர் அவனை குறித்த நாவல் ஒன்றினை எழுத அவனது  மனைவி, நண்பர்கள்,அவனோடு எதிர்மறை கருத்து கொண்டவர்கள், அவனது சமகால எழுத்தாளர்கள் என பலரை  சந்தித்து ஜே ஜே நினைவுகளை நம்மோடு பகிர்கிறார் எழுத்தாளர்.

ஜே.ஜே யை புரிந்து கொள்ள நாட்குறிப்பு பகுதி முக்கியம்.நாவலில் முல்லைக்கல் மாதவன், அரவிந்தாட்ச மேனன் , சம்பத்  போன்றவர்கள் முக்கியமானவர்களாக இருக்கிறார்கள். ஜே.ஜே யின் குண நலன்களை சரியாக புரிந்து கொள்ள முடியவில்லை. அவன் தான் சரியாக நடக்கவேண்டும், உண்மையாக இருக்க வேண்டும் என நினைக்கிறான். பலருக்கு அவனை பிடிக்கிறது. பல எதிரிகளையும் சம்பாதிக்கிறான். இயற்கையை மிகவும் ரசிக்கிறான், கூர்ந்து கவனிப்பவனாக இருக்கிறான்.

ஆழமான கருத்துக்கள் கொண்ட நாவல். மறு வாசிப்பு செய்யும் போது ஜே.ஜே பற்றி மேலும் புரிந்து கொள்ளலாம் என நினைக்கிறேன்.