Friday 31 August 2012

பிடித்த 10 தமிழ் திரைப்படங்கள்

சினிமா என்பது எப்போதுமே எனக்கு பிடித்த ஒன்று. பொதுவாக பெரும்பாலான தமிழர்களுடன் சினிமா  இரண்டற கலந்திருக்கும்.சினிமா பற்றி பேசாத அல்லது பார்க்காத நாளை கண்டுபிடிப்பதே சிரமம். எப்ப என்ன திரைப்படம் வெளிவரும், யாருடைய பாடல் ....இப்படி எல்லா விடயங்களும் தெரிந்திருப்பார்கள். எனக்கு சினிமா பற்றிய அறிவு பெரிதாக இல்லாத போதும் சினிமா பார்ப்பது அல்லது அதை பற்றிய புத்தகங்கள் படிப்பது என்பது மிகவும் பிடித்தது.எனக்கு பிடித்த திரைப்படங்கள்  என்ன என யோசித்து பார்த்தால் நிறைய திரைப்படங்கள் மனதுக்குள் வந்து செல்கிறது. இருந்த போதும் எனது All time favorite திரைப்படம் எனின் அது 'மௌனராகம்' தான்.  தற்போது நினைவில் வரும் 10 பிடித்த திரைப்படங்கள் .

1. மௌனராகம்

மணிரத்னம் படம். இப்படத்தை பற்றி தனி பதிவு எழுதலாம். அவ்வளவு பிடிக்கும். கார்த்திக் ரேவதி இணையும்காட்சியாகட்டும் மோகன் ரேவதி காட்சியாகட்டும் இரண்டுமே இரண்டு விதமாக நன்றாக இருக்கும். இதில் எனக்கு கூடுதலான பிடிப்பு மோகன் ரேவதி இணைந்து நடிக்கும் பகுதி தான்.  கார்த்திக் வரும் பகுதி இல்லாமல்  இருந்திருக்கலாம் என்றும்  யோசிப்பதுண்டு.ரேவதியின் சுட்டித்தனம் படத்துக்கு  இன்னொரு பலம். படத்தில்  இளைய ராஜாவின் பின்னணி இசை பின்னும். பாடல்களும் ஒவ்வொரு முத்துக்கள் தான்.

2. ரோஜா


மணிரத்னம் திரைப்படம். கதை சத்தியவான் சாவித்திரி கதையின் நவீன வடிவம் என்பது எல்லோருக்குமே தெரிந்தது தான். அதை அழகியலுடன் சொன்னது தான் ம‌ணிரத்னம் குழுவின் சிறப்பு. மணிரத்னம் கதாநாயகியை எப்போதுமே அழகாக காட்டுவார் ஒரு தேவதை போல.இதில் மதுபாலா ஒரு தேவதை. அரவிந்தசாமி நாயகன். ரஹ்மான் இசை.
பாடல்கள் படத்திற்கு பெரும் பலம்.

3. இதயத்தை திருடாதே


இதுவும் மணிரத்னம் படம். தெலுங்குத் திரைப்படமான கீதாஞ்சலியின் தமிழ் வடிவம். நாகர்ஜுன் , கிரிஜா நடித்திருப்பார்கள். இதன் நாயகி கிரிஜாவும் சுட்டித்தனமான பெண். இருவருமே எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ள நோயாளர்கள். இருவரும் காதலிப்பார்கள். இது தான் கதை. இளையராஜாவின் இசை. எழுத வார்த்தை இல்லை. ஒளிப்பதிவு பட‌த்திற்கு பெரிய பலம். நகைச்சுவை என்ற‌ பெயரில் செருகப்பட்ட கவர்ச்சி காட்சிகள் தான் படத்தின் பலவீனம். கிரிஜா  ஒரு சில படங்களில் தான்  நடித்திருக்கிறார்.வேறு தமிழ் படங்களில் நடிக்கவில்லை. ஆனால் அழகான
திறமையான நடிகை.

4. அன்பே சிவம்
கமலஹாசன், மாதவன்,நாசர்,கிரண்  நடிப்பில் உருவான படம். திரைக்கதை கமலஹாசன். வசனம் மதன். இயக்கம் சுந்தர்.சி. வித்யாசாகர் இசை.
அறிவு ஜீவிகளால் விமர்சிக்கப்பட்ட படம். ஆனால் சாதாரணமாக எல்லோருக்கும் பிடித்த படம். மனித நேயம், கடவுள்,கம்யூனிசம் என எல்லாமும் உண்டு. கமலுக்கும் மாதவனுக்கும் இடையிலான உரையாடல்கள் முக்கியமானவை. மனம் ஒரு மாதிரியாக இருந்தால் நான் அன்பே சிவம் பார்ப்பது தான் வழக்கம்.


5. தில்லுமுல்லு
ரஜனிகாந்த் படம். எனக்கு மிகவும் பிடித்த நடிகர் ரஜனி தான். பாட்ஷா, படையப்பா,முத்து, ஆறிலிருந்து அறுபது வரை .....இப்படி இப்படி நிறைய பிடித்த படம் இருந்தாலும் தில்லு முல்லு அதன் நகைச்சுவையில் முன்னுக்கு நிற்கிறது. படத்திற்கு தேங்காய் சிறீனிவாசன் ஒரு பலம். குறிப்பாக interview நடக்கும் காட்சி பிரமாதம்.



6. எங்கேயும் எப்போதும்
சமீபத்திய படங்களில் மிகவும் பிடித்தது. பேருந்து விபத்து பற்றிய விழிப்புணர்வு கொடுத்திருப்பார்கள். M. சரவணன் இயக்கம். இரு காதல் ஜோடிகள் ஒன்று  ஜெய், அஞ்சலி  மற்றயது சர்வானந்த், அனன்யா . நால்வரும் பேருந்தில்
பயணிக்கின்றனர்.  இரு பேரூந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்படுகிறது. விபத்து அப்பிடியே கண்ணுக்கு முன் நடப்பது போல இருக்கும். படம் பார்த்த பின் நெடுந்தூர பயணம் என்றால் கொஞ்சம் பயமாக தான் இருக்கு.

7.  சதிலீலாவதி

பாலு மகேந்திராவின் படம். கிரேசி மோகனுடைய வசனம்.கமல், கோவை சரளா இணைந்து நடித்திருப்பார்கள். அப்பிடி ஒரு நகைச்சுவை.குண்டாக‌ இருக்கும்  கல்பனா,  ஹீராவுடன் செல்லும் தன் கணவன் ரமேஷ் அரவிந்தை  தன் வழிக்கு கொண்டு வருவது தான்கதை.





8.   உண்மை


மம்முட்டியின் படம். பொதுவாக மம்முட்டி, மோகன்லால், சுரேஷ் கோபி  நடித்த மலையாளத் திரைப்படங்கள் சிறந்த கதையமைப்பு உடையதாக இருக்கும்.  'உண்மை ' திரைப்படம் மலையாலப் படத்தின் dabbing ஆக தான் இருக்க வேண்டும். ஒரு கொலையை துப்பறிபவராக மம்முட்டி நடித்திருப்பார். பாடல்களே இல்லாத படம். ரொம்ப விறுவிறுப்பான திரைக்கதை உடைய படம்.



9. மைக்கல் மதன காம ராஜன்

கமல்ஹாசன் நான்கு வேடங்களில் நடித்த படம். கிரேசி மோகன் வசனம். சிறு வயதில் பிரிந்த  ஒரு குடும்பத்தை சேர்ந்த நான்கு பிள்ளைகள் இறுதியில் சேருவது தான் கதை. அதை நகைச்சுவையுடன் சொல்லியிருப்பார்கள். நாயகிகள் ஊர்வசி, குஷ்பு மற்றும் ரூபினி . ஊர்வசி கலக்கி இருப்பார். இளைய ராஜாவின் இசை வழமை போல கலக்கல்.




10. மறுபடியும்


ரேவதி, நிழல்கள் ரவி, அரவிந்த சாமி, ரோகினி நடித்த திரைப்படம். பாலுமகேந்திராவின் இயக்கம். ரேவதியின் கணவர் நிழல்கள் ரவிக்கு ரோகினியுடன் தொடர்பு இருப்பதை அறிந்த ரேவதி  தன்னுடைய வழியை எப்படி அமைக்கிறார் என்பது தான் கதை. அரவிந்த சாமி ரேவதியின் நண்பராக நடித்திருப்பார். இளைய ராஜா இசையமைத்த  படம்.


இது தவிர ஒரு ஊரில் ஒரு ராஜகுமாரி,  அன்புள்ள ரஜினிகாந்த் ......என்று சில பிடித்த படங்களும்  உண்டு.




No comments:

Post a Comment