Sunday 7 June 2020

புனைவுக் களியாட்டு சிறுகதைகள் - ஜெயமோகன் - 3


ராஜன்

 பஷீரின் " உப்பப்பாவுக்கு ஒரு ஆனை இருந்தது" நாவலில்  குஞ்ஞுபாத்துமாவின் அம்மா தனது அப்பாவிடம் ஆனை இருந்ததைப் பற்றி பெருமையாக சொல்லிக்கொண்டே இருக்கிறார். ஆனையை வைத்து ஒருவரின் சமூக அந்தஸ்த்து மதிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனையை வீட்டில் பாசமாக,  ஐஷ்வர்யத்திற்காக  வளர்த்திருக்கிறார்கள்.ஆனை காட்டில் வாழ வேண்டிய மிருகம் அதை வீட்டில் வளர்ப்பது ஒரு வகையில் நாம் ஆனையை வதைப்பதற்கு சமன் என்ற முடிவுக்கு வந்திருக்கின்றோம். கோயிலில் நின்றிருக்கும் ஆனையை இன்றும் ஆசையுடன் பார்க்கின்றோம் எனினும் அது காட்டு விலங்காக அறியப்படுவதால் ஆனை பற்றிய புரிதல்கள் குறைந்து விட்டது. அண்மையில்  அன்னாசிப் பழத்தில் சொருகப்பட்ட வெடிவெடித்ததால் இறந்த ஆனை  எல்லோரினதும் மனச்சாட்சியை உலுக்கியுள்ளது. ஆனை மனிதர்களால் ஆபத்து காரணங்கள் கூறி கொல்லப்படுவதும் தொடர்ந்து நடந்து கொண்டுவருகிறது. ஜெயமோகனின் யானை டாக்டர் கதை படித்தவர்களுக்கு யானையின் மேல் ஒரு புரிதலும் விருப்பும் வந்துவிடும். அதன் தொடர்ச்சியாக ஆனையில்லா, துளி, ராஜன் போன்ற கதைகளை  படிக்கும் போது ஆனை செல்லப்பிள்ளையாகி தெய்வமாகிவிடுகிறது..

எட்டுக்கட்டு வீட்டின் வலிய சங்கரன் ஆனை இறந்த பின் தம்புரானுக்கு ஐஷ்வர்யம் இல்லை என்ற மனக்குறை. பாறசாலை ஆறாட்டுக்கு சென்ற போது நெல்லுவிளை வீட்டின்( நாலு கட்டு வீடு) ஆனை பர்வதராஜனைப் பார்த்து மனதைப் பறிகொடுத்து அதை எப்படியாவது தனது அரண்மனைக்கு கொண்டுவர தம்புரான் நினைக்கிறார்.பர்வதராஜன் 11 அடி உயரம் உடையது,வலிய சங்கரனை விட அரை அடி  அதிகம். எட்டுக்கட்டு, நாலுகட்டு வீடு பற்றிய குறிப்பிலிருந்து செல்வம் கூடிய குடும்பம் எது என்ற அனுமானத்திற்கு வாசகர் வந்துவிடமுடியும். இப்போது இந்த பர்வதராஜனால் கௌரவம் முழுவதும் அந்தக் குடும்பத்திற்கு போகப் போகிறது என்பது தான் தம்புரானின் பிரச்சனை. எட்டு ஆனை விலை சொல்லியும் பர்வதராஜனை கொடுக்க முடியாது என நெல்லுவிளை வீட்டார் சொல்லிவிட்டார்கள். அதனால் அந்த ஆனையைக் கொல்வது என்று முடிவெடுத்து பூதத்தான் நாயரை வரவைக்கிறார்கள்.

வலியசங்கரனைப் பார்த்துக்கொண்ட பூதத்தான் நாயர் ஆனையோடே பிறந்து வளர்ந்தவன். ஆனை கடவுள் போல. தம்புரானின் காரியஸ்தன் கோவிந்தன் நாயர், ஆனைக்கு  விசம் வைத்து கொல்லும்படி பூதத்தானிடம் சொல்ல பூதத்தான் மறுத்துவிடுகிறான். அவர்களிருவருக்குமிடையான உரையாடலே இந்தக் கதையின் முக்கிய பகுதியாக நினைக்கிறேன். 
போர் என்றால் ஆனையைக் கொல்வதில்லையா.அது போல தான் இதுவும், எந்த சாபமும் வராது என பூதத்தானுக்கு சமாதானம் சொல்லும் போது,  "யுத்தக்கவசமிட்டா அது படைவீரன். நெற்றிப்பட்டமிட்டா தெய்வசேவகன். வீட்டுமுற்றத்திலே நின்னா செல்லப்பிளையாக்கும்” என்று பூதத்தான் சொல்கிறான்.


கேரளா என்ற தேசம் பரசுராமரால் ஆனைக்காக உருவாக்கப்பட்டது. மனிதன் தனக்கு வாழ இடம் தேவை என ஆனையிடம் கேட்டுப் பெற்றுக்கொண்டான். பூதத்தான் சொல்லும் இந்த கதையை ஜெயமோகனின் எழுத்துக்களில் வாசிக்கும் போது நன்றாக உள்ளது. பூதத்தானை குடும்பத்தை கொன்றுவிடுவார்கள் என்று எவ்வளவோ மிரட்டுகிறார்கள்.வாசிப்பவர்களுக்கும் பதட்டம் .

கதையை எப்படி முடிக்கப் போகிறார் என்ற பதட்டம் வந்துவிடுகிறது. பர்வதராஜன் பூதத்தானை தூக்கி ஏற்றிக் கொண்டு காட்டுக்குள் சென்று மறைந்துவிடுகிறது. இருவருமே திரும்பிவரவில்லை என்று கதை கவித்துவமாக முடிகிறது. 


" சீரான காலடிகளை நீட்டி நீட்டி எடுத்துவைத்து, தலையை ஆட்டியபடி, செவிகளை வீசியபடி,  தும்பிக்கையால் நிலம் தொட்டு நிலம்தொட்டு அது முன்னால் நடந்து அவர்களை அணுகியது"  என்று ஒரு வரி உள்ளது. ஜெயமோகனது  கதைகளில் விபரிக்கப்படும் துல்லிய வர்ணனை அப்படியே காட்சியாக மனதிலே தங்கிவிடக்கூடியது.

இங்கே ராஜன் என்பது பர்வத ராஜன் மட்டுமல்ல, பூதத்தானும் தான்.

Thursday 4 June 2020

புனைவுக் களியாட்டு சிறுகதைகள் - ஜெயமோகன் - 2

துளி

ஆனையில்லா கதையைத் தொடர்ந்து மறுவாசிப்பு செய்ய நான் தெரிவு செய்த கதை துளி. இதுவும் ஒரு ஆனை பற்றிய கதை என்பதோடு ஆனையில்லா கதையில் வரும் மனிதர்கள் இக்கதையிலும் வருவதால் ஒரு தொடர்ச்சியாக வாசித்து பார்க்க நினைத்தேன். யானையின் பெயர் கோபாலகிருஷ்ணன். ஆனையில்லா கதையில் ஐயப்பனின் வீட்டிற்குள் புகுந்த யானை.


மகாதேவர் கோயிலின் திருவிழாவுக்கு ஆயத்தமாக வேண்டிய யானை காலையில் இருந்து பிளிறிக்கொண்டிருக்கிறது. அதற்கு நோயுக்கான எந்த அறிகுறியும் இல்லை.நன்றாக சாப்பிட்டும் விட்டது. யானையைப் பார்த்துக்கொள்ளும் ராமன் நாயருக்கு எதுவும் கண்டுபிடிக்க முடியவில்லை. கதைசொல்லி யானைக்கு மனசு சரியில்லை என சொல்கிறார்.

திற்பரப்பில் இருந்து கொச்சுகேசவன் என்ற யானை திருவிழாவுக்காக வந்து கொண்டிருக்கிறது. அதை தனது எட்டாவது அறிவால் அறிந்து தான் இந்த யானை படபடத்துக்கொண்டிருக்கிறது. அதற்கு முன் நடந்த களியல் கிருஷ்ணன் கோயில் திருவிழாவில் கொச்சுகேசவனுக்கு மரியாதை அதிகமாக கிடைத்ததால் கோபாலகிருஷ்ணனுக்கு கொச்சுகேசவன் இங்கு வருவது பிடிக்கவில்லை. என்னவாக இருந்தாலும் மகாதேவர் கோயில் யானை  கோபாலகிருஷ்ணன் தானே. திருவிழாவுக்கான ஆயத்தங்கள் தொடங்கியதும் கொச்சு கேசவன் வரப்போவதை கோபாலகிருஷ்ணன்  உணர்ந்திருப்பான். அதனால தான் படபடப்பு.

இரு யானையைப் பற்றிய விபரங்கள் அழகாக கதையில் சொல்லப்பட்டிருக்கிறது. கொச்சுகேசவனின் அப்பா கொச்சு கணபதி திருவோண நட்சத்திரக்காரன் என்பதும் கோபாலகிருஷ்ணனும் குறையில்லை ரோகிணி நட்சத்திரம் என்பதும் என அந்த கால மனிதர்கள் யானையின் நட்சத்திரங்களையும் தெரிந்து கதைப்பது யானையுடன் மனிதனுக்கு இருக்கும் உறவை எடுத்துக்காட்டுவதாக உள்ளது. 

"தலையெடுப்புன்னா அவனாக்கும்… இவனுக்கு ஒரு பம்மலு உண்டு… கிண்ணம் களவாண்டுட்டு போறதுமாதிரி ஒரு நடை” 
என கிருஷ்ணரின் நட்சத்திரம் ரோகிணி என்பதால் கிண்ணம் களவாடிப் போற நடை என கரடி நாயர் சொல்கிறார். ஜெயமோகன் கதைகளில் யானையை வீட்டுப் பிள்ளை மாதிரி தானே  பார்த்துக் கொள்கிறார்கள்.

"கோபாலா, மரியாதைக்கு இருந்துக்கோ. நாலாளு கூடுத ஸ்தலமாக்கும். உனக்க அப்பன் தென்னிமலை கேசவனுக்க பேரை களையப்பிடாது கேட்டியா?”என்று ராமன் நாயர் யானையிடம் சொல்வதும் "சிவன்  மண்டையோட்டிலே பிச்சை எடுத்தாரு…அப்பம் அவருக்கு பிச்சபோட்டவன்லாம் அவருக்க ராசாவாலே?”  மாதவன் பிள்ளை சொல்வதும் என இந்தக் கதையிலும் மனிதர்களின் சின்ன சின்ன உரையாடல்கள் கதைக்கு அழகு சேர்க்கின்றன.

கருப்பன் என்ற நாய் தான் இரு யானைகளையும் சேர்த்து வைக்கிறது. இந்தக்கதையே மனிதனுக்கு புரிந்து கொள்ள முடியாத மிருகங்களின் உலகத்தை அழகாக சொல்வது தான்.

நண்பர்களுக்கிடையிலான சண்டை, கோயில் திருவிழாவுக்கான வேலைகள், அன்னதானம் தொடர்பான தகவல்களென வாசிக்கும் போது அப்படியே ஒரு காட்சியாக கற்பனை விரிந்து கொள்கிறது.

அன்னதானத்தில் கிறிஸ்தவரான டீக்கனாரின் பங்கு இருப்பதும் யானையின் பிரச்சனை முடிந்தவுடன் அந்தோணியாருக்கு மெழுகுதிரி ஏற்றுவேண்டும் என கரடி நாயர் சொல்வதும் என மதம் தாண்டிய மனிதர்களை   பார்க்கமுடிகிறது.

ஆனை வரிசையில் சிறப்பான ஒரு கதை.

Wednesday 3 June 2020

புனைவுக் களியாட்டு சிறுகதைகள் - ஜெயமோகன் - 1

"ஆனையில்லா "

ஆரம்பத்தில் சாதாரணமாக வாசித்துக்கொண்டிருந்த கதைகளில், எனக்கு தீவிரமான பிடிப்பு ஏற்பட காரணமான முதல் கதை இது. அதனால் மறுவாசிப்புக்கு முதலில் இக்கதையையே தெரிவு செய்தேன்.

எராளி ஐயப்பனின் வீட்டிற்குள் ஆனை புகுந்து விட்டது. ஆனையால் வெளியில் வரமுடியவில்லை. ஆனையை மீண்டும் வெளியே கொண்டுவர வேண்டும்.

இதற்கு பலவிதமான ஆலோசனைகள் வழங்கப்படுகிறது. அதில் ஒன்று சிறுவனான கதைசொல்லி  குடையை மடக்குவது போல ஆனையை மடக்கினால் வெளியே எடுக்கலாம் என சொல்வது. தந்தையின் திட்டு மூலமும் டீக்கனாரின் சிரிப்பு மூலமும் அது நிராகரிக்கப்படுகிறது. அடுத்து கிரீஸ் பூசுவது. அது தொடர்பான உரையாடல்கள் சுவையின் உச்சம். இறுதியாக  பூசாரியை வர வைக்கிறார்கள்.

எனக்கு மிகவும் பிடித்த இடங்களில் ஒன்று, ஐயப்பனின் மனைவி தன்  மகள் நாராயணியை திட்டுவதும் அதற்கு அவள் தன்னுடன் கூடப் படிக்கும் கதை சொல்லியைப் பார்த்து நெளிவதும் அத்துடன் அவளது முகத்தைப் பார்க்கும் போது ஆனை வீட்டிற்குள் சென்றது பள்ளிக்கூடத்தில் தனக்கு பெருமையா அல்லது இழிவா என அவள் இன்னும் முடிவெடுக்க‌வில்லை என தெரிந்தது என சொல்வதும்.


இந்தச் கதையை அழகூட்டுவது சின்ன சின்ன உரையாடல்கள். ஆனைக்கு அபமிருத்யூ வந்த நாட்டில் கஜலக்ஷ்மி போய்விடுவா.கஜலக்ஷ்மி பின்னால் மற்ற லக்ஷ்மிகளும் போய்விடுவார்கள். அவர்கள் ஒரு கூட்டமாக்கும்  என ஒருவர் சொல்லும் போது ஸ்டீபன் மேரியும் ஒரு லக்ஷ்மியாக்கும், ஒன்பதாம் லக்ஷ்மி என சொல்வது அதில் ஒன்று. இக்கதையில் வரும் ஸ்டீபன் , கரடி நாயர் குழாமை கடுப்படிக்க கதைப்பவர்.

ஆனை வீட்டிற்குள் நுழைந்ததற்காக சொல்லப்படும் காரணம், ஆனை வெளியே வரும் வரை வீட்டிற்குள் இருந்த கிழவியைப் பற்றி யாருமே நினைக்காமல் இருந்தமை, பூசாரியைப் பற்றி அங்கு இருப்பவர்கள் கதைப்பது, பூசாரி கரடி நாயரை வம்புக்கு இழுப்பது,ஆனையை வெளியே கொண்டு வர பூசாரி கையாண்ட முறை  என எல்லாமே ரசிக்கும் படி உள்ளது.

 மொத்தக்கதையையே ஒரு உருவகமாகவும் கொள்ளலாம்.

Monday 1 June 2020

அன்புள்ள ஜெயமோகன்

எழுத்தாளர் ஜெயமோகனது  புனைவுக் களியாட்டு சிறுகதைகள் வாசித்துப் பிரமித்துப் போய் இருக்கிறேன். புனைவுகள் மீது எனக்கு அவ்வளவாக ஈடுபாடு இருந்ததில்லை. இந்த 69 கதைகள் புனைவு இலக்கியம் மீது எனக்கு தீராத ஆசையை உருவாக்கியுள்ளது. நாலைந்து கதைகள் தவிர மீதி அனைத்துக் கதைகளும் எனக்குப் பிடித்திருந்தன. 25 கதைகளுக்கு மேல் சிறப்பானவை(வேற level )என சொல்லலாம்.
பத்து வருடங்களுக்கு மேலாக ஜெயமோகனின் இணையத்தளத்தை தொடர்ந்து வாசித்து வருகிறேன்.அது எனது அன்றாட கடமைகளில் ஒன்று. கட்டுரைகளையே விரும்பி வாசிப்பேன். அதுவும் பயணக் கட்டுரைகள். அடுத்ததாக நாவல் ஒன்று வாசிப்போம் என நான் தொடங்கியது விஷ்ணுபுரம். அந்த மொழியை, தத்துவத்தை  என்னால்  புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனாலும் முழுவதும் வாசித்து முடித்தேன்.(அவரது நாவல்களில் இறுதியாக வாசிக்க வேண்டியது விஷ்ணுபுரம் என அவர் எழுதியிருந்ததை பின்னரே வாசித்தேன்.)இவரது நாவல்கள் எனக்கு சரிப்பட்டு வராது என விட்டுவிட்டேன். பின் அ.முத்துலிங்கம் சிறந்த கதை என்று எழுதியதால் ஊமைச்செந்நாய் வாசித்தேன். வாசிக்கவே பிடிக்கவில்லை. ஒரு சில பந்திகளுடன் நிறுத்திவிட்டேன். ஆனால் அவரது அறம், விசும்பு, பனிமனிதன் போன்றவை என் விருப்பத்துக்குரியவை. அதன் பின் வெற்றி என்ற சிறுகதை இணையத்தில் பலமாக விவாதிக்கப்பட்டதால் வாசித்தேன். நான் இது வரை வாசித்த கதைகளில் இருந்து மிகவும் மாறுபட்டிருந்த கதை.எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதன் பின் ஜெயமோகன் சிறுகதைத் தொகுப்பு வாசித்தேன். பெருமளவிலான கதைகள் எனக்குப் பிடித்திருந்தன. அதன் பின் காடு நாவல். இந்த வாசிப்பினால் வந்த பயிற்சியினால் அவரது எழுத்துக்கள் எனக்கு பழக்கமாகியிருந்தது. புனைவுக் களியாட்டுக் கதைகளை கூர்மையாக புரிந்து கொள்ள இந்தப் பயிற்சி உதவியது என நினைக்கின்றேன்.

ஒவ்வொரு நாளும் காலையிலேயே அவரது புனைவுக் களியாட்டு கதைகளை வாசித்து வந்தேன். இதற்காக காலை 5.30 மணிக்கு alarm  வைத்து எழும்பினேன். அன்று முழுவதும் அக்கதைகளே என்னைத் தொடர்ந்துகொண்டிருக்கும். கொரோனா கால மன அழுத்தத்தை இக் கதைகள் குறைத்தது என்று சொல்லலாம். அவர் இக்கதைகளில் உருவாக்கிய கேரளா, குமரி, லடாக்,திபெத் போன்ற நிலங்களில் வாழ்ந்தேன். சில நேரங்களில் எது உண்மையான வாழ்க்கை என்ற குழப்பம் கூட வந்தது. இமய நிலத்தில் வாழ்வது போலவே தொன்றியது. ‌

ஜெயமோகன் நிறைவு என அறிவித்தது கவலை தந்தாலும் அதுவும் தேவை போல இன்னொரு வகையில் தோன்றியது. எனது கோவிட் காலத்தை நான் சரியாக பயன்படுத்தினேன் என்ற நிறைவு எனக்கு இருக்கிறது. அதிகாலையிலேயே எழும்பியதால் வேறு புத்தகங்கள் வாசிக்கக்கூடியதாகவும் இருந்தது. அத்துடன் முக்கியமாக 4000 திவ்ய பிரபந்தம் தொடர்ந்து படித்து வருகிறேன். ஒவ்வொரு நாளும் 20 பாட‌ல்களாக‌  தொடர்ந்து படித்து வருகிறேன்.

சமையலிலும் பாத்திரம் கழுவுவதிலும் பிள்ளை பார்ப்பதிலுமாக கழிந்து சென்றிருக்க வேண்டிய இக்காலத்தை அர்த்தம் உள்ளதாக மாற்றியதற்காக எனது அன்புக்குரிய எழுத்தாளருக்கு நன்றி .சூழ்திரு கதை வாசித்த நாட்களில் என்று நினைக்கின்றேன், அவரது வீட்டிற்கு சென்று அவருடன் அக்கதையைப் பற்றி கதைப்பது போல கனவு கூட கண்டேன்.அவர் பெரிதாக எதுவும் கதைக்கவில்லை. அப்படியா என்பது போல கேட்டுக்கொண்டிருந்தார். அவரது மனைவி சிறந்த உணவு ஒன்றும் உண்பதற்கு தந்தார், கனவில்.

இலக்கியத்தின் பயன் என்ன என்பதற்கு , ஒரு வாழ்க்கையே நான் வாழ்வதற்கு தரப்பட்டிருக்கிறது. ஆனால் இலக்கியம் மூலம் நான் தாகூருடன் வங்கக் கடலில் அலையைப் பார்த்துக்கொண்டிருந்தேன், சாள்ஸ் டிக்கன்ஸ் லண்டன் தெருவில் எனக்கு முன்னால் நடந்து போய்க்கொண்டிருந்தார்.அரேபிய மணல் தெரிந்திருக்கிறது. பல வாழ்க்கை வாழ்வதற்கு இலக்கியம் உதவுகிறது என்று ஜெயமோகன் ஒரு கட்டுரையில் எழுதியிருந்தார். புனைவுக் களியாட்டு கதைகள் வாசித்தபோது தான் அந்த வரிகளின் உண்மையை உணர்ந்தேன். இம‌ய மலையடுக்குகளில்  இருந்த டான்லே மடாலயத்தில் அசிதருடனும் காகத்துடனும் அந்த பனிக் குளிரில் வாழ்ந்தேன், கரடி நாயருடனும் அவரது நண்பர்களுடனும் அசல் கிராம வாழ்க்கை வாழ்ந்தேன், ஔசேப்பச்சன்,குமரன் மாஸ்ரர் குழுவுடன் அந்த மேசைக்கு அருகில் அமர்ந்து அந்த உரையாடல்களைக் கேட்டேன், உமையம்மை ராணியின் பிள்ளைகள் அனைவரும் கொல்லப்படுவதை பார்த்து நெஞ்சம் நடுங்க அவர்களுக்கு எதுவும் நடக்கக்கூடாது என இறைவனிடம் பிரார்த்தித்தேன்.இசக்கியம்மைக்கு ஏன் இப்படி ஒரு துயரம் என்று புரியாமல் விடைதேடினேன்.திபெத்,இமைய நிலம் எனக்கு இப்போது மிகவும் பழக்கப்பட்ட இடமாக இருக்கிறது.



எனக்கு மிகவும் பிடித்த கதை எது என்று ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. கரு,இறைவன்,பலிபீடம், பத்து லட்ஷம் காலடிகள்,நற்றுணை, நிழல்காகம்,சூழ்திரு, பொலிவதும் கலைவதும், ஓநாயின் மூக்கு ஆகிய கதைகளில் ஒன்றாக இருக்கலாம். மறுவாசிப்புக்கு பின் தான் ஒரு முடிவுக்கு வரமுடியும்.

அறம்,விசும்பு கதைத் தொகுதிகள் போல ஜெயமோகன் எப்போது கதை எழுதுவார் என்று எதிர்பார்த்து காத்திருந்தேன். கோவிட் காலத்தில் அது நிறைவேறியிருக்கிறது. உண்மையில் இத்தொகுதியில் உள்ள பல கதைகள் அதைவிட சிறந்தவை. புத்தகமாக வரும் போது வாங்குவதற்காக காத்திருக்கின்றேன்.

Monday 11 May 2020

குலசேகர ஆழ்வார்

குலசேகர ஆழ்வார் பாடிய பாடல்கள் பெருமாள் திருமொழி என அழைக்கப்படுகிறது. 4000 திவ்ய பிரபந்தத்தில் 647 ஆவது பாடல் தொடக்கம் 751 ஆவது பாடல் வரை இவர் பாடிய 105 பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளன.

எனக்கு பிடித்த  பல பிரபந்த பாடல்கள்  குலசேகர ஆழ்வார் பாடியவையாகவே இருக்கின்றன. அவன் அடியார்களுக்கு என்ன துன்பம் வந்தாலும் அவன் மேல் உள்ள அன்பு குறைவதில்லை. 


வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால்
மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால்
மீளாத் துயர் தரினும் வித்துவக்கோட்டம்மா நீ
ஆளா உனது அருளே பார்ப்பன் அடியேனே!


என்று குலசேகர ஆழ்வார் பாடுகின்றார். இறைவன் மேல் அவர் கொண்ட அன்புக்கு இந்த ஒரு பாட்டே போதும்.

"மன்னு புகழ் கோசலை தன்" எனத் தொடங்கும் ராமன் மீதான  தாலாட்டுப் பாடலும் இவர் பாடியதே.இவை கண்ணபுரத்து இறைவனை நோக்கிப்பாடப்பட்டவை. இப்பாடல்களில் சிலவற்றை தெரிவு செய்து சஞ்சய் சுப்ரமணியம் ராகமாலிகையாகப் பாடியதைக் கேட்டுக்கொண்டே இருக்கலாம். 

 " செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே" என்ற திருமலையைப் பாடிய 10 பாடல்களும் இவரால் பாடப்பட்டவையே.இப்பாடல்கள் நான்காம் திருமொழியில் வகுக்கப்பட்டுள்ளன. திருவேங்கடப் பெருமானை பார்த்துக் கொண்டே இருப்பதற்காக திருமலையில் மீனாக, குருகாக, ஆறாக ,படியாக என்று பாடி  இறுதியாக திருமலை மேல் ஏதேனும்  ஒன்றாக பிறப்பேன் என வேண்டுகிறார். திருவேங்கடப் பெருமானின் கீர்த்தனைகளுக்கு முன் விருத்தமாக பெரும்பாலும் இப்பாடல்கள் பாடப்படுகின்றன. படியாக இருந்து உன் பவள வாய் காண்பேனே என வேங்கப் பெருமானைப் பாடியதால் வேங்கடப் படி குலசேகரப் படி என அழைக்கப்படுகிறது.


அரங்கன் மேல் பாடிய பாடல்கள் முதல் மூன்று திருமொழிகளிலும் வேங்கடவன் மேல்  பாடியவை நான்காம் திருமொழியாகவும் வித்துவக்கோடு என்ற தலத்தில் பாடிய பாடல்கள் ஐந்தாம் திருமொழியாகவும் திருக்கண்ணபுரம் மீது பாடிய இராமன் மீதான தாலாட்டு எட்டாம் திருமொழியாகவும்  சிதம்பர திருச்சித்திர கூடப் பெருமானை இராமனாக நினைத்து  இராமன் மீது  பாடிய பாடல்கள் பத்தாம் திருமுறையாகவும் தொகுக்கப்பட்டுள்ளன. முழு இராமாயணத்தையுமே சுருக்கமாக பாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது. அயோத்தி, திருவாழித்திரு நகரி, திருப்பாற்கடல் ஆகியவை மீதும் பாடல்களைப் பாடியுள்ளார். 


குலசேகர ஆழ்வார் திருவஞ்சிக்களத்தில் சேரர் அரச குலத்தில் புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்தவர். ராமாயணம் கேட்பதில் சிறுவயது முதலே ஆர்வமானவர். இராமாயணம் கேட்டுக் கொண்டிருக்கும் போது உணர்ச்சி வசப்பட்டு இராமருக்கு துணையாக போருக்கு புறப்பட தயாரானவர். அரண்மனையில்  இறைவன் அடியார் மீது போலி திருட்டுப்பட்ட சுமத்தியதால் மனம் வருந்தி, தனது பதவியை மகனிடம் கொடுத்துவிட்டு திருமாலை தரிசிக்க துறவறம் பூண்டார்.திருமாலின் மார்பில் இருக்கும் கௌஸ்துப அம்சம் பொருந்தியவராக கருதப்படுகிறார்.இவர் தனது மகளை அரங்கனுக்கு மணம் முடித்து கொடுத்து அரங்கனுக்கு மாமனாக விளங்குகின்றார்.



x

Saturday 18 April 2020

(87) கதவு திறந்தே இருக்கிறது - பாவண்ணன்

எனக்கு மிகவும் பிடித்த புத்தகம் இது. பாவண்ணனின் கட்டுரைகள் எனக்கு எப்போதுமே பிடித்தவை. இந்த புத்தகம் பல தடவைகள் வாசிக்க வேண்டிய ஒரு புத்தகமாக நான் நினைக்கின்றேன். அவரது எழுத்துகளில் மூழ்கி விட்டதால் ஒவ்வொரு கட்டுரையுமே ஒவ்வொரு புத்தகத்தை, ஆளுமையைப் பற்றியது என்பதை நான் அரைப் புத்தகம் கடந்த பிறகு தான் உணர்ந்து கொண்டேன்.
ஐந்நூறு வண்டிகளின் சத்தம் என்ற கட்டுரை அவருக்கு அன்பளிப்பாக கிடைத்த  பாலி மொழியில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்ட தீகநிகாயம் என்ற புத்தரின் பொன்மொழிகள் என்று சொல்லக்கூடிய ஒரு புத்தகத்தைப் பற்றியது. சாலிம் அலியைப் பற்றிய விரிவான கட்டுரை அவரது வாழ்க்கை வரலாற்று நூலான ஒரு சிட்டுக்குருவியின் வீழ்ச்சி என்ற புத்தகம் பற்றியது. அவருடன் எப்போதும் உடனிருக்கும் துங்கபத்திரை,ஜோக் நீர்வீழ்ச்சி உட்பட பல நதிகளைப் பற்றி எழுதப்பட்டுள்ள காகா கலேல்கரின் ஜீவன் லீலா என்ற புத்தகம் பற்றிய கட்டுரையும் உள்ளது. ஜீவன் லீலா எனக்கு மிகவும் பிடித்த புத்தகம். நதிகளை சென்று தரிசிக்க வேண்டும் என்று பாவண்ணனுக்கு தோன்றியது போலவே எனக்கும் ஆசையை வர வைத்த புத்தகம். நூற்றாண்டுக்கு முற்பட்ட தூய நதிகளைப் பற்றி நாம் அறிந்துகொள்ளலாம்.

புத்தரின் புனித வாக்கு எனும் பால் காரஸ் எழுதிய புத்தகத்தைப் பற்றிய கட்டுரையில் மீண்டும் புத்தரைப் பற்றி எழுதியுள்ளார்.ஹென்றி தோரோ பற்றிய கட்டுரையும் மிக முக்கியமானது.அண்மையில் சாகித்ய அக்கடமி விருது பெற்ற மனோஜ் குரூரின் மலையாள நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பான நிலம் பூத்து மலர்ந்த நாள் எனும் புத்தகத்தை பற்றியும் ஒரு கட்டுரை உள்ளது.17 கட்டுரைகள் கொண்ட அருமையான புத்தகம் இது.

(86) எழுத்தே வாழ்க்கை - எஸ்.ராமகிருஷ்ணன்

எஸ்.ரா இந்த புத்தகத்தில் தனது குடும்பம், நண்பர்கள், பள்ளி நாட்கள் என சிறு வயது முதல் தனது அனுபவங்களை சுவைபட எழுதியுள்ளார்.பழைய புத்தகக்கடை பற்றி அவரது எழுத்துக்களில் எப்போதுமே வாசிக்கலாம். அவருக்கு பிடித்த இடங்களில் ஒன்று அது. வாழ்வில் சில உன்னதங்கள் என்ற கட்டுரையில் பழையபுத்தகக் கடையுடனான தனது அனுபவங்களை எழுதியுள்ளார். அந்த தலைப்பே ஒரு புத்தகத்தைப்பற்றியது தான்.விட்டல் ராவ் எழுதிய அந்த புத்தகத்தை நானும் வாசித்து இருக்கின்றேன். இளையராஜாவின் பாடல்களுக்கு தான் மிகவும் ரசிகன் என்பதையும் இளையராஜாவை சந்தித்த அனுபவங்களையும் இளையராஜாவின் ரசிகன் என்ற கட்டுரையில் எழுதியுள்ளார். நயகரா முன்னால் என்ற கட்டுரையில் நயகராவை சென்று பார்த்ததை அங்கு ரசித்தவற்றை பற்றி எழுதியுள்ளார். ஜப்பானில் சில நாட்கள் என்ற ஜப்பானைப் பற்றிய ஒரு பெரிய கட்டுரையும் உண்டு. பார்த்தவற்றை மட்டும் எழுதுவது சிறந்த பயணக் கட்டுரையாக அமையாது. அவர் ஜப்பானின் பண்பாடு, வரலாற்றுடன் எழுதியவற்றை வாசிப்பது ஒரு சிறந்த அனுபவமாக இருந்தது. அவரது ஏனைய கட்டுரைகள் போலவே இந்த தொகுப்பும் மிக முக்கியமானது.மொத்தமாக 30 கட்டுரைகள் கொண்ட சிறந்த புத்தகம்.